`ஓய்வு குறித்து விவாதிக்க ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் சென்றாரா பிரதமர் மோடி?’ - பரவும் தகவலின் பின்னணி
பிரதமராக நரேந்திர மோடி 2014-ம் ஆண்டு பதவியேற்ற பிறகு கடந்த 10 ஆண்டில் ஒரு முறை கூட ஆர்.எஸ்.எஸ்.தலைமை அலுவலகத்துக்கு சென்றது கிடையாது. தாய் இயக்கமான ஆர்.எஸ்.எஸ்.. பா.ஜ.கவின் வெற்றிக்காக தொடர்ந்து பாடுபட்டு வந்தாலும் பிரதமர் நரேந்திர மோடி மட்டும் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு செல்லவில்லை.
இந்நிலையில் கடந்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இப்போது கூட்டணி கட்சிகளின் தயவில்தான் ஆட்சி செய்யவேண்டிய நிலை பா.ஜ.கவிற்கு இருக்கிறது. சமீபகாலமாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பிடமிருந்து பா.ஜ.க விலகி செயல்படுவதாக செய்திகள் வெளியானது. அதனை நிரூபிக்கும் விதமாக பா.ஜ.க தலைவர் ஜெ.பி.நட்டா அளித்திருந்த பேட்டியில், ''பா.ஜ.க சொந்தமாக செயல்படும் அளவுக்கு வளர்ந்துவிட்டது'' என்று குறிப்பிட்டு இருந்தார்.

பாஜக - ஆர்.எஸ்.எஸ் உறவு
ஆனால் நேற்று முதல் முறையாக பிரதமராக நரேந்திர மோடி நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ்.அலுவலகத்திற்கு சென்று அதன் தலைவர்களை சந்தித்து பேசினார். அதோடு ஆர்.எஸ்.எஸ். நிறுவன தலைவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவஸ், நிதின் கட்கரி ஆகியோரும் சென்று இருந்தனர்.
இச்சந்திப்பு மூலம் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கும் பா.ஜ.கவிற்கும் இடையிலான உறவை புதுப்பித்துக்கொண்டதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி 70 வயதை கடந்துவிட்டதால் பதவியில் இருந்து ஓய்வு பெறுவது தொடர்பாக விவாதிக்கத்தான் ஆர்.எஸ்.எஸ்.தலைவர்களை சந்திக்க சென்றதாக உத்தவ் தாக்கரே கட்சி தெரிவித்துள்ளது.

`ஓய்வு குறித்து விவாதிக்கத்தான்...’
இது தொடர்பாக அக்கட்சி எம்.பி.சஞ்சய் ராவத் அளித்த பேட்டியில், ''ஓய்வு பெறுவது குறித்து விவாதிக்கத்தான் நரேந்திர மோடி ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவலகத்திற்கு சென்றுள்ளார். பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடிக்கு பிறகு யார் வரவேண்டும் என்பதை ஆர்.எஸ்.எஸ்.தான் முடிவு செய்யும். அதிகமாக மகாராஷ்டிராவை சேர்ந்த ஒருவர் அப்பதவிக்கு வரக்கூடும். எனக்கு தெரிந்தவரை ஆர்.எஸ்.எஸ் நாட்டின் தலைமையில் மாற்றத்தை விரும்புகிறது. பிரதமர் மோடியின் நேரம் முடிந்துவிட்டது. அவர்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்''என்று தெரிவித்தார்.
ஆர்.எஸ்.எஸ்.அலுவலகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வந்தது குறித்து ஆர்.எஸ்.எஸ்.நிர்வாகி சாஸ்திரி கூறுகையில், ''பிரதமரின் வருகை மிகவும் முக்கியமானது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் பா.ஜ.கவுக்கும் இடையே எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது. மக்கள் பலவிதமாக பேசுவார்கள். பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்.பற்றி தெரியாதவர்கள் தான் இரு தரப்பினருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக சொல்வார்கள்.
அரசியல்வாதிகள் தங்களது லாபத்திற்காக இது போன்ற வதந்தியை பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்''என்றார். பிரதமர் நரேந்திர மோடிக்கு வரும் செப்டம்பர் மாதம் 75 வயதாகிறது. 75 வயதை கடந்த தலைவர்களுக்கு ஓய்வு கொடுப்பது பா.ஜ.கவின் எழுதப்படாத சட்டமாக இருக்கிறது.
`2029-ம் ஆண்டு மோடி மீண்டும் பிரதமாவார்’
எனவே பிரதமர் நரேந்திர மோடியும் 75வயதில் ஓய்வு பெற்றுவிடுவார் என்றும் செய்திகள் வெளியானது. இது குறித்து மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில்,'' பிரதமர் நரேந்திர மோடி பதவி விலகுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. அவருக்கு மாற்றாக வேறு ஒருவரை தேடவேண்டிய அவசியம் இல்லை. அவர் எங்களது தலைவர். தொடர்ந்து பதவியில் நீட்டிப்பார். பிரதமர் மோடி எங்களுக்கு தந்தையை போன்றவர். 2029-ம் ஆண்டு நரேந்திர மோடி மீண்டும் பிரதமாவார். நமது கலாச்சாரப்படி தந்தை உயிரோடு இருக்கும் அவரது இடத்திற்கான அடுத்த தேர்வு குறித்து பரிசீலிக்க மாட்டார்கள்''என்று தெரிவித்தார்.