ஜம்மு - காஷ்மீர்: ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித்தொகை அதிகரிப்பு!
பெண்களுக்கான திருமண உதவித்தொகை அதிகரிப்பதாக ஜம்மு - காஷ்மீர் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீரில் அரசின் திருமண உதவித் திட்டத்தின் மூலம் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த திருமண வயதுடைய பெண்களுக்கு நிதியுதவியாக ரூ. 50,000 வழங்கப்பட்டு வந்தது. இந்த உதவித்தொகை தற்போது ரூ. 75,000 ஆக அதிகரிக்கப்பட்டதாக அரசு இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
சமூக நலத்துறையின் நிதி இயக்குநர் வெளியிட்ட புதிய அறிக்கையில், அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகள் வைத்திருக்கும் குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு இந்தத் திட்டத்தின்மூலம் ஒருமுறை ரூ. 75,000 உதவித்தொகை வழங்கப்படும்.
பிஹெச்ஹெச் எனப்படும் சலுகை ரேஷன் கார்டுகள் வைத்திருக்கும் குடும்பங்களில் உள்ள திருமண வயதுடைய பெண்களுக்கு ரூ. 50,000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புதிய அறிவிப்பு ஏப்ரல் 1, 2025 முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. உதவித் தொகைக்கு விண்ணப்பிப்பதன் மூலம் நேரடியாக பயனாளரின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.