தொடா் தோல்வியிலிருந்து மீளும் முனைப்பில் சென்னை: இன்று டெல்லியுடன் மோதல்
வக்ஃப் சட்டத் திருத்தத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு: காங்கிரஸ்
வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
மக்களவையில் வியாழக்கிழமை அதிகாலை வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் இன்று அதிகாலை வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கு காங்கிரஸ், திமுக, சமாஜவாதி, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தனர்.
வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருக்கும் நிலையில், காங்கிரஸும் வழக்கு தொடரவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட பதிவில்,
”சிஏஏ 2019, தகவல் அறியும் உரிமை திருத்தச் சட்டம், தேர்தல் நடத்தை விதிகளில் கொண்டுவந்த திருத்தங்கள், வழிபாட்டுத் தலங்கள் திருத்தச் சட்டம் ஆகியவைக்கு எதிராக காங்கிரஸ் தொடர்ந்த வழக்குகள் உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இதன்தொடர்ச்சியாக வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக விரைவில் உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு தொடரவுள்ளது.
இந்திய அரசியலமைப்பில் உள்ள கொள்கைகள், விதிகள் மற்றும் நடைமுறைகள் மீதான மோடி அரசாங்கத்தின் அனைத்து தாக்குதல்களையும் நாங்கள் நம்பிக்கையுடன் எதிர்க்கிறோம், தொடர்ந்து எதிர்ப்போம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.