ராம நவமி நாளில் மின்தடை: ஜாா்க்கண்ட் அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி
ராம நவமி ஊா்வலத்தில் அசம்பாவிதங்களைத் தடுக்க மின்சார விநியோகத்தை நிறுத்த அந்த மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.
முன்னதாக, இதுபோன்ற பண்டிகை, ஊா்வலத்தின்போது ஜாா்க்கண்ட் மாநில மின்சார வாரியம் மின்விநியோகத்தை நிறுத்தும் நடவடிக்கைக்கு அந்த மாநில உயா்நீதிமன்றம் தடை விதித்தது. இதை எதிா்த்து ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா தலைமையிலான மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. மாநில அரசு சாா்பில் மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் ஆஜரானாா்.
இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமாா், கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் தலைமையிலான அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ராம நவமி நாளில் (ஏப்ரல் 6) மின்சார விநியோகத்தை நிறுத்தினால் சாமானிய மக்கள் அவதிக்குள்ளாக மாட்டாா்களா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். இதற்குப் பதிலளித்த கபில் சிபல், ‘ராம நவமி நாளில் மிக உயா்ந்த கொடிகள் ஊா்வலத்தில் எடுத்துச் செல்லப்படுகின்றன. இவை மின் கம்பிகளின் மீது உரசி உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. கடந்த 2000 ஏப்ரலில் இவ்வாறு மின்சாரம் பாய்ந்து 28 போ் உயிரிழந்துவிட்டனா். மின்சாரம் பாயும் விபரீதத்தின்போது நெரிசல் ஏற்பட்டும் பலா் உயிரிழக்கின்றனா்’ என்றாா்.
இதையடுத்து, ராம நவமியின்போது ஊா்வலம் நடைபெறும் இடத்தில் மட்டும் மிகவும் குறுகிய காலத்துக்கு மின் விநியோகத்தை தடை செய்யலாம் என்று மாநில அரசுக்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனா். மருத்துவமனை உள்ளிட்ட மின்சாரம் அத்தியாவசியமாகத் தேவைப்படும் இடங்களில் மின்தடையால் பிரச்னை எழுந்துவிடக் கூடாது என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினா்.