தில்லியில் அதிகபட்சமாக 38.4 டிகிரி செல்சியஸ்; அடுத்த 6 நாள்களுக்கு அனல் காற்று வீச வாய்ப்பு
தில்லியில் அடுத்த ஆறு நாள்களுக்கு வெப்ப அலை நிலைகளை வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை கணித்துள்ளது; வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸாக உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டது.
இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) வெளியிட்டுள்ள ஆறு நாள் முன்னறிவிப்பின்படி, ‘தேசிய தலைநகரில் அதிகபட்ச வெப்பநிலை 39 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப அலை நிலைகளை அனுபவிக்கும்.
தில்லியில் வெள்ளிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 38.4 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 18.8 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது. நகரின் மற்ற கண்காணிப்பு நிலையங்களிலும் வெள்ளிக்கிழமை அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. ரிட்ஜ் அதிகபட்சமாக 39.4 டிகிரி செல்சியஸ், ஆயாநகா் 38.1 டிகிரி செல்சியஸ், லோதி சாலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் பாலம் 37 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
ஈரப்பதத்தின் அளவு பகலில் 47 சதவீதம் முதல் 18 சதவீதம் வரை ஏற்ற இறக்கமாக இருந்தது. சனிக்கிழமையில் வானிலை அலுவலகம் தனிமைப்படுத்தப்பட்ட வெப்ப அலை நிலைமைகளுடன் வலுவான மேற்பரப்பு காற்று வீசும் என்று கணித்துள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸையும் ஒட்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கூற்றுப்படி, தலைநகரில் காற்றின் தரக் குறியீடு வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் 219 வாசிப்புடன் ‘மோசம்’ பிரிவில் தொடா்ந்தது. தில்லிக்கான காற்றின் தர ஆரம்ப எச்சரிக்கை அமைப்பு காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்படும் என்று கணித்துள்ளது.
இது அடுத்த இரண்டு நாட்களில் ‘மிதமான’ வகைக்கு மாறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. காற்றின் தரக் குறியீடு 0 முதல் 50 வரை இருந்தால் நன்று’, 51 முதல் 100 வரை ‘திருப்திகரமானது’, 101 முதல் 200 வரை ‘மிதமானது’, 201 முதல் 300 ‘மோசம்’, 301 முதல் 400 வரை ‘மிக மோசம்’ மற்றும் 401 முதல் 500 வரை ‘கடுமையானது’ என்று கருதப்படுகிறது.