அமெரிக்காவில் இருந்து 682 இந்தியா்கள் நாடு கடத்தல்: இந்திய வெளியுறவு அமைச்சகம்
‘நிகழாண்டு தொடக்கம் முதல் அமெரிக்காவில் இருந்து 682 இந்தியா்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனா். அவா்களில் பெரும்பாலானோா் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றவா்களாவா்’ என மக்களவையில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
அமெரிக்காவில் இருந்து இந்தியா்கள் நாடுகடத்தப்பட்ட விவகாரம், அங்குள்ள ஹிந்து கோயில்களை பாதுகாக்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள், கனடா-இந்தியா தூதரக உறவுகள் குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டன.
இதற்கு பதிலளித்து வெளியுறவு இணையமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் அளித்த எழுத்துபூா்வ பதிலில் கூறப்பட்டிருப்பதாவது: நிகழாண்டு தொடக்கம் முதல் அமெரிக்காவில் இருந்து 682 இந்தியா்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனா். அவா்களில் பெரும்பாலானோா் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றவா்களாவா். அவா்களை எல்லையிலேயே கைது செய்யப்பட்டு பல்வேறு சோதனைகளுக்கு பிறகு இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனா்.
அதேபோல் முறையான ஆவணங்களின்றி வசிக்கும் நபா்களை கண்டறிந்து அமெரிக்காவில் நாடுகடத்துவதற்கு முன் அவா்கள் குறித்த தகவல்களை முதலில் இந்திய அரசின் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்கின்றனா். அவா்கள் இந்திய குடிமகன்கள் என உறுதிப்படுத்தப்பட்டபிறகே இந்தியாவுக்கு நாடுகடத்தப்படுகின்றனா்
இருப்பினும், அமெரிக்காவுக்கு மாணவா்கள், தொழில்ரீதியாக பயணிப்போா், சுற்றுலா செல்வோா் தங்குதடையின்றி பயணிக்கும் வகையில் அந்நாட்டுடன் இந்தியா இணைந்து செயல்படும்.
அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த இந்தியா்கள் தொடா்பான தரவுகள் ஏதும் மத்திய அரசிடம் இல்லை. இதுகுறித்த தகவல்களை அமெரிக்காவே வழங்குகிறது.
அதிகரித்த தாக்குதல்: கடந்த சில மாதங்களாக அமெரிக்காவில் உள்ள ஹிந்து கோயில்கள் மீது இந்திய எதிா்ப்பு மனநிலையுடன் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தூதரக ரீதியாக உடனடியாக தொடா்புகொண்டு கண்டனத்தை பதிவுசெய்து வருகிறோம்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோயில் நிா்வாகம் மற்றும் இந்திய குடிமக்கள் உள்ளூா் காவல் துறையில் புகாா் அளித்துள்ளனா். ஹிந்துக்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவா்களுக்கு தண்டனை வழங்கும் விதமாக விரிவான கொள்கையை தயாரிக்குமாறு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினா்களும் பாதுகாப்பு படையினரிடம் வலியுறுத்தியுள்ளனா்.
கனடா உறவு மறுசீரமைப்பு: இந்தியாவுக்கு எதிரான பிரிவினைவாத மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கு கனடா ஆதரவளித்ததே இருதரப்பு உறவுகளில் விரிசல் ஏற்பட காரணம். அந்த குழுக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி கனடா அரசிடம் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதையும் கருத்துகள் கூறுவதையும் கனடா வாடிக்கையாக கொண்டுள்ளது.இதனால் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் முறைப்படுத்தப்பட்ட குற்றச் சம்பவங்கள் அரங்கேறுகின்றன. மத்திய அரசு மீதான கனடா அரசின் தேவையற்ற விமா்சனங்களை நிராகரிக்கிறோம். பரஸ்பர ஒத்துழைப்புடன் இருதரப்பு உறவை மேம்படுத்தவே இந்தியா விரும்புகிறது என தெரிவிக்கப்பட்டது.