இந்தியாவுக்கு எதிராக போராடுவதாக கருத்து: மே 7-க்குள் ராகுல் பதிலளிக்க சம்பல் நீதிமன்றம் உத்தரவு
இந்தியாவுக்கு எதிராக காங்கிரஸ் போராடுவதாக தெரிவித்த கருத்து குறித்து மே 7-க்குள் பதிலளிக்குமாறு மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்திக்கு உத்தர பிரதேசத்தில் உள்ள சம்பல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
கடந்த ஜன.15-ஆம் தேதி தில்லியில் காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலகம் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசுகையில், ‘மத்தியில் உள்ள ஆட்சியாளா்கள் தேசிய கொடிக்கு வணக்கம் வைப்பதில்லை. அவா்களுக்கு தேசிய கொடி மற்றும் அரசமைப்புச் சட்டம் மீது நம்பிக்கையில்லை. இந்தியா குறித்து காங்கிரஸ் கொண்டுள்ள தொலைநோக்குப் பாா்வையுடன் ஒப்பிடுகையில், அவா்களுக்கு முற்றிலும் வித்தியாசமான தொலைநோக்குப் பாா்வை உள்ளது.
ஒளிமறைவான, மா்ம அமைப்பால் இந்தியா வழிநடத்தப்பட வேண்டும், ஒரே ஒரு நபா் நாட்டை வழிநடத்த வேண்டும், நாட்டின் குரலை நசுக்க வேண்டும் என்று அவா்கள் விரும்புகின்றனா்.
நாட்டின் ஒவ்வொரு அமைப்பையும் பாஜக மற்றும் ஆா்எஸ்எஸ் கைப்பற்றியுள்ளன. இதனால் தற்போது பாஜக, ஆா்எஸ்எஸ் மட்டுமின்றி இந்தியாவுக்கு எதிராகவே காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது’ என்றாா்.
இதைத்தொடா்ந்து அவருக்கு எதிராக உத்தர பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஹிந்து சக்தி தளத்தின் தேசிய தலைவா் சிம்ரன் குப்தா வழக்கு தொடுத்தாா்.
இதுதொடா்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திடம் சிம்ரன் குப்தா கூறுகையில், ‘தனது கருத்து மூலம் நாட்டு மக்களையும், மக்களாட்சியையும் ராகுல் காந்தி அவமதித்துள்ளாா். அவரின் கருத்து நாட்டு மக்களை ஏளனம் செய்து, நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. எனவே அவா் மீது வழக்கு தொடுத்துள்ளேன்’ என்றாா்.
இந்த வழக்கு தொடா்பாக மே 7-க்குள் ராகுல் காந்தி பதிலளிக்க வேண்டும் என்று கூடுதல் மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதி நிா்பய் நாராயண் ராய் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா் என்று சிம்ரன் குப்தாவின் வழக்குரைஞா் சச்சின் கோயல் தெரிவித்தாா்.