சொத்து தகராறில் அண்ணனை கடத்திச் சென்று தாக்கிய தம்பி கைது, சொகுசு கார் பறிமுதல்
Carlos Slim: உலகப் பணக்காரர் பட்டியலில் 20 ஆண்டுகள்.. கருப்பு பக்கங்களுடன் ஓர் வெற்றிக்கதை!
உலகப் பணக்காரர் பட்டியலில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இடம் பெற்றுவரும் சில மனிதர்களில் ஒருவர் கார்லோஸ் ஸ்லிம் ஹேலு (Carlos Slim Helú).
மெக்ஸிகோவைச் சேர்ந்த இவர், லெபனானில் இருந்து குடியேரிய ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் 1940-ம் ஆண்டு ஜனவரி 28-ம் தேதி பிறந்தார்.
இவரது தந்தை ஜூலியன் ஸ்லிம் ஹாடட் ஒட்டாமான் பேரரசின் கட்டாய இராணுவ சேவையில் இருந்து தப்பிக்க 1902-ல் மெக்ஸிகோவுக்கு வந்தவர்.
மெக்ஸிகன் புரட்சியின்போது உலர் பொருள்கள் கடை வைத்து, தன் குழந்தைகளுக்கு வியாபாரத்தின் முக்கியத்துவத்தைக் கற்றுக்கொடுத்தார். ரியல் எஸ்டேட்டில் பெரும் பணக்காரராக உருவாகி வந்தார். ஆனால் கார்லோஸின் 13 வயதில் மரணமடைந்தார்.

தந்தையின் மரணம் அவரது குடும்பத்துக்கு பெறும் பின்னடைவாக இருந்தது. அப்போது முதல் சாதாரண வாலிபனாக வளர்க்கப்பட்ட கார்லஸ் மெக்சிகோவின் தேசிய தன்னாட்சி பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் சேர்ந்தார்.
அவர் அடைந்த உச்சமான, உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற இடத்துக்கு அது மிக எளிமையான தொடக்கமாக இருந்தது.
அங்கிருந்து நாட்டின் பெரும்பணக்காரரான பயணம் எப்படி சாத்தியமானது? மெக்ஸிகோவின் பில்கேட்ஸ் என்று அழைக்கப்படும் அவரது கதை இதோ!
பேராசிரியர் டு வியாபாரி
சிறுவயதில் கணக்கில் புலியாக இருந்தவர் கார்லஸ். எந்த அளவுக்கென்றால் பதின் வயதிலேயே மெக்ஸிகன் வங்கியில் பங்குகளை வாங்கும் அளவுக்கு எண்களை அலசி ஆராயும் வித்தையைக் கற்றிருந்தார்.
பொறியில் கல்விக்குப் பிறகு அதே கல்லூரியில் அல்ஜீப்ரா மற்றும் லீனியர் புரோகிராமிங் கற்றுக்கொடுக்கும் பேராசிரியராக பணியில் சேர்ந்துள்ளார்.
1960-களில் பங்குச் சந்தை மீதும் சிறு வியாபாரங்கள் மீதும் அவருக்கு ஈர்ப்பு உண்டானது. அவர் பாட்டில் கம்பெனி நடத்தியுள்ளார், சிகரெட் விற்றுள்ளார், ரியல் எஸ்டேட்டில் கைமாற்றும் வேலைகளைச் செய்துள்ளார் ஆனால் எதுவும் பெரிதாக பிக்அப் ஆகவில்லை.

ஆனால் அவருக்கு வியாபரத்தின் மதிப்பு தெரிந்திருந்தது. ஒவ்வொரு தொழிலையும் கவனமாக கவனித்து வந்தார்.
கார்லோஸ் ஸ்லிம்மின் கதை இன்றைய பில்லியனர்கள் போல ஒரு கண்டுபிடிப்பில் இருந்து தொழில்நுட்ப வளர்ச்சியில் இருந்து தொடங்கியது அல்ல. எப்போதும் சமநிலையில் இல்லாத சந்தையை ஆராய்ந்து பொறுமையாக வளர்ந்துவரும் வியாபாரங்களின் மதிப்புகளை கணிக்கும் வர்த்தக கலையை அவர் கற்றிருந்தார். அதுதான் அவரை பில்லியனர்கள் பட்டியலில் தனித்துவமானவராக்குகிறது.
நாட்டின் நெருக்கடியை பயன்படுத்திய கார்லோஸ்
1982-ம் ஆண்டில் மெக்ஸிகோ நாட்டுக்கு ஏற்பட்ட கடன் நெருக்கடி இவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.
நாட்டின் பொருளாதாரமே தேங்கி பெசோ (மெக்ஸிகன் நாணயம்) மதிப்புக் குறைந்தது. மெக்ஸிகன் அரசு வங்கிகளை நாட்டுடைமையாக்கும் கட்டாயத்தில் இருந்தது. இந்த நடவடிக்கையால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பீதியடைந்தனர்.
அந்த தருணத்தில் வீழ்ந்த பல நிறுவனங்களை, தனது சேமிப்பு மற்றும் வங்கியில் கடன் வாங்கிய பணத்தில் அடிமட்ட விலைக்கு வாங்கினார் கார்லஸ்.

ஒரு சிகரெட் தயாரிப்பு நிறுவனம் (Cigarrera La Tabacalera Mexicana), ஒரு சுரங்க நிறுவனம், ஒரு ஹோட்டல் செயின் இன்னும் சில.
மலிவானதை வாங்கி, சரி செய்து நீண்டகாலத்துக்கு வைத்திருப்பதுதான் அவரது திட்டம். மெக்ஸிகோவின் வீழ்ச்சியில் லாபம் பார்க்க நினைப்பதாக இவரது நடவடிக்கையை பிணந்திண்ணி கழுகுடன் ஒப்பிட்டு கழுகு முதலாளித்துவம் என விமர்சித்தனர்.
ஆனால், இவர் தான் மெக்ஸிகோவின் எதிர்காலத்தில் முதலீடு செய்வதாகக் கூறியுள்ளார்.
எல்லாரும் சந்தையை விட்டு வெளியேரும் போது பெருமளவில் முதலீடு செய்யும் முரண்பாடான போக்கின் விளைவாகவே கார்சோ என்ற கூட்டு நிறுவனத்தை உருவாக்கினார்.
மோனோபோலி வெற்றி
1990-ல் தான் மிகப் பெரிய மாற்றம் நடந்தது. பெரும் பணத்தேவை இருந்ததால் மெக்சிகன் அரசாங்கம் ஒரே டெலிகாம் நிறுவனமான டெல்மெக்ஸ் (டெலிஃபோன் டி மெக்சிகோ) -ஐ தனியார் மயமாக்கியது.
அப்போது கார்லோஸ், சௌத்வெஸ்டர்ன் பெல் மற்றும் பிரான்ஸ் டெலிகாம் நிறுவனங்களுடன் இணைந்து ஏலத்தை வென்றார். இந்த ஏலத்தைதுக்கு பல விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அதன்பிறகு 8 கோடி மக்கள் உள்ள ஒரு நாட்டு லேண்ட்லைன் சேவை வழங்கும் ஒரே நிறுவனமாக அவரது நிறுவனம் இருந்தது.
ஏகபோகமாக சம்பாதிக்க எளிதான வழி மோனோபோலிதான். அதனாலேயே 1.76 பில்லியன் டாலர்கள் அதிக விலையாகத் தோன்றினாலும், அதை தைரியமாக வாங்கினார்.
அவரது பழைய டெக்னிக்கை பயன்படுத்தினார். நிறுவனத்தை சரிபார்த்து அதன் எல்லைகளை விரித்து, பணம்பார்க்கும் ஒவ்வொரு கதவையும் திறந்துவிட்டார்.
2000-ங்களில் டெலிமேக்ஸ் கோடிகளை குவித்தது. மெக்ஸிகோவின் சந்தையை கிட்டத்தட்ட முழுமையாக கைக்குள் வைத்திருந்தது. அதன் விளைவாக அவரது அடுத்த முயற்சியாக அமெரிக்கா மொவில் என்ற நிறுவனத்தை தொடங்கினார்.
இது லத்தீன் அமெரிக்கா முழுவதும் ஆதிக்கம் செலுத்தும் மொபைல் நிறுவனமாக இயங்கியது. இவர் ஒரு தொழில்நுட்ப வல்லுநர் இல்லை, ஆனால் இவரது மொபைல் நிறுவனங்கள் மூலம் 2010 முதல் 2013 வரை பில்கேட்ஸை பின்னுக்குத் தள்ளி உலகின் மிகப் பெரிய பணக்காரராக திகழ்ந்தார். அதுதான் அவரது கோல்டன் பீரியட்.
நான் புனிதர் அல்ல; பிசினஸ் மேன்
இவ்வளவு ஹீரோயிக்கான இந்த கதாநாயகனுக்கு கருப்பு பக்கங்களும் இருக்கின்றன.
மெக்ஸிகோவின் ஊழல் நிறைந்த அரசியல் அமைப்புதான் இவரது வெற்றிக்கு காரணம் என்கின்றனர். குறிப்பாக அதிபர் கார்லோஸ் சாலினோஸ் உடனான இவரது நெருக்கம்தான் இவருக்கு டெலிமேக்ஸ் ஒப்பந்தம் கிடைக்க காரணம் எனக் கூறப்படுகிறது.
விமர்சகர்கள் இவரைக் கொள்ளை பிரபு என அழைக்கின்றனர். ஏனென்றால் இவர் மோனோபோலியாக சந்தையைக் கட்டுப்படுத்திய காலத்தில் டெலிஃபோன் சேவைக்கு அதிகபட்ச கட்டணம் செலுத்தும் நாடாக மெக்சிகோ இருந்தது.

குற்றச்சாட்டுக்களுக்கு மறுமொழியாக ஸ்லிம், தான் ஒரு புனிதர் அல்ல, பிசினஸ் மேன் என்று கூறினார். அத்துடன் தான் ஒரு அட்டைப் பூச்சி இல்லை என்று, மெக்சிகோ மீதான அவரது முதலீடுகளை மேற்கோள்காட்டி பேசினார்.
ஸ்லிம் தனது இமேஜுக்காக 2000-ங்களின் இறுதியில் இருந்து நன்கொடை வழங்குவதில் கவனம் செலுத்தினார்.
மீடியா நிறுவனங்களிலும் தொடர்ந்து முதலீடுகளை செய்துவந்தார். 2015-ம் ஆண்டு நியூயார் டைம்ஸில் 17% பங்குகளை வாங்கியதன் மூலம் அந்த செய்தி நிறுவனத்தின் மிகப் பெரிய முதலீட்டாளராக உயர்ந்தார்.
ரூ.70 லட்சம் கோடி சொத்துமதிப்பு
2000-ங்களின் தொடக்கத்திலிருந்து இன்றுவரை உலகப் பணக்காரர்கள் பட்டியலில், 20-வது இடத்திற்குள் இருந்து வருகிறார்.
கடந்த ஆண்டு அவருக்கு மிகவும் மோசமானதாக அமைந்தது. 19 பில்லியன் டாலர்கள் சொத்துகளை இழந்து, உலகப்பணக்காரர் வரிசையில் 11-வது இடத்தில் இருந்து 19-வது இடத்துக்கு சரிந்துள்ளார்.

வங்கி, ரயில்வே மற்றும் உணவகங்கள் போன்ற பல்வேறு துறைகளில் 220 நிறுவனங்களை கார்லோஸ் ஸ்லிம் ஹேலுவின் கையில் உள்ளது.
இப்போது அவரது சொத்து மதிப்பு 82.3 பில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில், சுமார் 70 லட்சம் கோடி. 85 வயது அனுபவம் மிக்க தொழிலதிபரான இவர் இந்த சரிவிலிருந்து மீண்டு வருவாரா என்பதைப் பொருத்திருந்து பார்க்கலாம்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
