எம்புரான் தயாரிப்பாளர் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை!
எம்புரான் படத்தின் தயாரிப்பாளரான கோகுலம் கோபாலன் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
எம்புரான் திரைப்படம் கடந்த வாரம் (மார்ச் 27) திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியான நாள்முதல் சர்ச்சைகளுக்கு பஞ்சமின்றி தினமும் படம் பற்றிய செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், எம்புரான் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீ கோகுலம் குழும நிறுவனங்களின் உரிமையாளர் கோகுலம் கோபாலனின் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தை மீறியதாக எழுந்த புகார் தொடர்பாக சென்னையின் கோடம்பாக்கம் மற்றும் கொச்சியில் உள்ள கோகுலம் நிறுவன அலுவலகங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்தப் புகார் தொடர்பாக கோபாலனிடம் இதற்கு முன்னர் பலமுறை அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் அவர் அமலாக்கத்துறையின் கண்காணிப்பில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
பொழுதுபோக்குத் துறையில் மிகவும் அறியப்பட்ட தொழிலதிபரான கோபாலன் சிட் ஃபண்ட், ஃபைனான்ஸ், மருத்துவம், கல்வி நிறுவனங்கள், படத் தயாரிப்பு, விளையாட்டு போன்ற பல துறைகளில் முதலீடு செய்துள்ளார்.
எம்புரான் பட சர்ச்சைக்கும் இந்த விசாரணைக்கும் தொடர்பில்லை என விளக்கமளித்துள்ள அமலாக்கத்துறையினர், இந்த விசாரணை முழுக்க அந்நியச் செலாவணி விதிமீறல் தொடர்பான மட்டுமே என தெரிவித்தனர்.
எம்புரான் படத்தில் குஜராத் மதக்கலவரத்தை சித்தரிக்கும் விதமான காட்சி இடம்பெற்றதால் வலதுசாரிகள் அதற்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய காட்சியை நீக்குவதாக படக்குழு அறிவித்த நிலையில் நடிகர் மோகன்லால் வருத்தம் தெரிவித்திருந்தார். இதன்படி, படத்தில் 17 இடங்களில் காட்சிகள் நீக்கப்பட்டன.
மேலும், பாஜகவினர் படத்திற்குத் தடை விதிக்கக் கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.