Doctor Vikatan: எப்போதும் ஈரமாக இருக்கும் உள்ளாடை, ஏதேனும் பிரச்னையின் அறிகுறியா?
Doctor Vikatan: என் வயது 42. எனக்கு வெஜைனா பகுதி எப்போதும் ஈரம் கசிந்தபடியே இருக்கிறது. வெள்ளைப்படுதல் போல அல்லாமல் அந்தக் கசிவு வித்தியாசமாக இருக்கிறது. வெளியிடங்களுக்குச் செல்லும்போது இது தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது. இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம்... மருத்துவரைப் பார்த்து சிகிச்சை எடுக்க வேண்டுமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.
வாயில் உமிழ்நீர் சுரந்துகொண்டே இருப்பதைப் போன்றதுதான் வெஜைனா பகுதியில் இருக்கும் ஈரப்பதமும். அதனால் வெஜைனா பகுதியில் உணரும் ஈரப்பதம் என்பது அசாதாரணமானது அல்ல.
ஒருவேளை வானிலை மிகவும் சூடாக இருக்கிறது, உடல்ரீதியான இயக்கம் அதிகம் செய்கிறீர்கள் என்றாலும் வெஜைனா ஈரப்பதமாகும் வாய்ப்புகள் உண்டு. அதுவும் நார்மல்தான். பீரியட்ஸ் வரப்போவதற்கு முன்பும் வெஜைனாவில் அடர்த்தியான கசிவு இருக்கலாம்.
ஓவுலேஷன் எனப்படும் அண்டவிடுப்புக்கு முன் இந்தக் கசிவானது மிகவும் லைட்டாக இருக்கும். விந்தணுக்களை உள்ளே இழுக்க ஏதுவாக அது அப்படித்தான் இருக்கும்.
அதுவே ஓவுலேஷன் முடிந்ததும், விந்தணு உள்ளே போய்விட்ட நிலையில் கருத்தரிப்பு நிகழலாம் என்ற நிலையில், பாக்டீரியா கிருமிகள் உள்ளே வராமல் வெஜைனா தடுக்க முயலும். அந்த நிலையில் வெஜைனாவின் கசிவானது சற்றே கெட்டியாக மாறும். இப்போதுதான் பீரியட்ஸ் முடிந்திருக்கிறது என்ற நிலையில் அந்தக் கசிவானது லைட்டாகவே இருக்கும். இந்த எல்லா கசிவுகளுமே நார்மல்தான். இவை குறித்துக் கவலைப்படத் தேவையில்லை.

வரப்போகிற தேர்வு, முக்கியமான மீட்டிங், டார்கெட் போன்றவற்றின் காரணமாக நீங்கள் ஸ்ட்ரெஸ்ஸாக இருக்கலாம். அந்த நிலையிலும் வெஜைனாவில் கசிவு இருக்கலாம். அதுவும் சாதாரணம்தான்.
அப்படியானால் எந்த நிலையில் இது குறித்துக் கவலைப்பட வேண்டும் என்ற கேள்வி எழலாம். நீங்கள் இருக்கையில் அமர்ந்திருக்கிறீர்கள்.. உங்கள் உடையோ, இருக்கையோ கறையாகும் அளவுக்கு அது இருந்தால் கவலைப்பட வேண்டும். அந்தக் கசிவில் துர்வாடை வந்தாலோ, தாம்பத்திய உறவுக்குப் பிறகு இதுபோல வாடை வந்தாலோ அலட்சியம் செய்யக்கூடாது.
கசிவானது தயிர்போன்ற பதத்தில் இருந்தாலோ, மஞ்சளாகவோ, பச்சையாகவோ இருந்தாலோ அலட்சியம் செய்யக்கூடாது. ஈரப்பதம் காரணமாக அரிப்பு வந்தாலும் அலட்சியம் வேண்டாம். பேன்ட்டி லைனர் உபயோகிக்காமல் இருக்க முடியாத நிலை என்றாலும் அது அசாதாரணம்தான். இதற்கெல்லாம் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

அசாதாரண வெஜைனல் டிஸ்சார்ஜ் என்பது அலட்சியப்படுத்தப்பட்டால், அது கர்ப்பப்பையை பாதிக்க வாய்ப்புகள் அதிகம்.
கருக்குழாய்களை பாதிக்கலாம். கருத்தரிப்பதைத் தடுக்கலாம். வெஜைனா பகுதியை சுத்தம் செய்ய கெமிக்கல் வாஷ் பயன்படுத்தத் தேவையில்லை. வெஜைனா பகுதியில் நல்ல பாக்டீரியா இருக்கும். அதன் பேலன்ஸ் தவறும்போதுதான் தொற்று ஏற்படும். தேவைப்பட்டால் மருத்துவரின் ஆலோசனைக்கேற்ப ஆன்டிபயாடிக் எடுத்துக்கொள்ளலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.