பட்ஜெட்டில் இடம்பிடித்த தடுப்பூசி; அதன் பலன்கள் என்னென்ன? - மருத்துவர் விளக்கம்! | Explainer
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு எதிராக போர் புரிய வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். ஏன் தெரியுமா? உலகளவில் பெண்களை பாதிக்கிற புற்றுநோய்களில் இது நான்காவது இடத்தில் இருக்கிறது. 'நான்காவது இடத்தில் இருக்கிற புற்றுநோய்க்கு எதிராக போரிட வேண்டுமா' என்றால், ஆம், கட்டாயம் போரிடத்தான் வேண்டும். 2022-ம் வருடம் மட்டும், இந்தப் புற்றுநோய் உலகம் முழுக்க கிட்டத்தட்ட 3.50 லட்சம் பெண்களின் உயிரைப் பறித்திருக்கிறது.
இந்தியாவில், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பெண்களுக்கு வருகிற புற்றுநோய்களில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ஒரு லட்சம் பெண்களில் 18 பேர் கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என 2020-ல் அறிவிக்கப்பட்டது. இதில் இறப்பு விகிதம் ஒரு லட்சம் பேருக்கு 11.4 சதவிகிதம் ஆகும். ஆனால், இந்தளவுக்கு உயிர் அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய இந்தப் புற்றுநோயைத்தான், தடுப்பூசி மூலம் நம்மால் வராமலே தடுக்க முடியும்.

கடந்த மாதம் மார்ச் 14-ம் தேதி வெளியிடப்பட்ட 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில்கூட தமிழக அரசு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி வழங்க 36 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிறது.
இந்த நிலையில், செர்வைகல் கேன்சர் என்று சொல்லப்படும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கான காரணங்களில் ஆரம்பித்து அதன் அறிகுறிகள், தடுப்பூசி தீர்வுகள் வரை முழுமையாகத் தெரிந்துகொள்ள சென்னையைச் சேர்ந்த மூத்த மகப்பேறு மருத்துவர் ஜெயஶ்ரீ கஜராஜ் அவர்களிடம் பேசினோம்.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு, பெண்களாக முன்வந்து இந்தத் தடுப்பூசியை போட்டுக்கொள்வது எப்போது நிகழும் என்பது தெரியாத நிலையில், ஒரு மாநில அரசு இதற்கான தடுப்பூசியை போடவிருப்பதை, இனிவரும் காலங்களில் இந்த புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் குறைய ஆரம்பிக்கும் என்பதற்கான தொடக்கமாகவே பார்க்கிறேன்.

நம் நாட்டு தயாரிப்பான செர்வாவேக் (cervavac) தடுப்பூசியை, 2022-ல், மத்திய உயிரி தொழில்நுட்ப துறையும் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனமும் இணைந்து அறிமுகம் செய்தது. இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்னால் வெளிநாட்டுக் கம்பெனிகள் தயாரித்த தடுப்பூசியைத்தான் மக்கள் பயன்படுத்தி வந்தார்கள். அவற்றின் விலையோடு ஒப்பிட்டுப்பார்த்தால் செர்வாவேக் தடுப்பூசி மிக மிக குறைவான விலையிலேயே மக்களுக்குக் கிடைக்கிறது. தற்போது அது இலவசமாக மாணவிகளுக்கு வழங்கப்படும் என்பது மிக நல்ல தொடக்கம்.
ஹெச்.பி.வி (HPV - Human papilloma virus) எனப்படும் வைரஸ் கிருமிதான், இந்த புற்றுநோய்க்கு 95% காரணம். இந்த வைரஸ் செக்ஸ் மூலம் பரவும். கர்ப்பைப்பை வாய்ப் புற்றுநோய்க்கான ஆரம்ப தொற்று ஆண்களிடமிருந்துதான் ஆரம்பிக்கிறது. 'ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்' தொற்று ஏற்பட்டால் ஆணுறுப்பில் மரு போல தோன்ற ஆரம்பிக்கும். பாதிக்கப்பட்ட ஆணுடன் உறவுக்கொள்ளும் பெண்ணுக்குள்ளும் இந்த வைரஸ் தொற்று பரவும். நோய் எதிர்ப்பு சக்தி போதுமான அளவு இருப்பவர்களுக்கு, அதுவே இந்த வைரஸை அழித்து விடும்.

பல பேருடன் உறவு வைத்துக்கொள்பவர்களுக்கு இந்த வைரஸ் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஏற்படுத்தி விடும். தவிர, நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருப்பவர்களுக்கும், பிறப்புறுப்பை சுத்தமாக பராமரிக்காதவர்களுக்கும்கூட இந்த வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால், இந்த வைரஸ் தொற்று கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயாக மாறுவதற்கு 17 முதல் 20 வருடங்கள் வரை ஆகும். அதாவது, இந்த வைரஸ் உங்கள் 20 வயதில் உடலில் நுழைந்து பல ஆண்டுகள் செயலற்ற நிலையில் இருந்து பின்னர் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயாக வெளிப்படலாம். அதற்குள் இதை கண்டுபிடித்து சிகிச்சை அளிப்பதற்கு நம்மிடம் நிறைய அவகாசம் இருக்கிறது. அதனுடன் ஹெச்.பி.வி தடுப்பூசியும் போட்டுக்கொண்டால், 98% முதல் 99% வரை இந்தப் புற்றுநோய்க்கு எதிரான மிகப்பெரிய பாதுகாப்பு பெண்களுக்கு கிடைக்கும்.
நாப்கின் பயன்படுத்துகிற அளவுக்கு நிறைய வெள்ளைப்படும். அதுவும் துர்வாடையுடன் இருக்கும். சிலருக்கு லேசாக ரத்தம் கலந்து வரும். உடல் எடை குறையும். இரண்டு மாதவிடாய்க்கு இடையே ரத்தப்போக்கு ஏற்படலாம். தாம்பத்திய உறவுக்குப் பிறகு ரத்தப்போக்கு ஏற்படலாம். மெனோபாஸ் வந்தப்பிறகு திடீரென ரத்தப்போக்கு ஏற்படலாம்.

பெண் குழந்தைகளுக்கு 10-12 வயதில் இந்த தடுப்பூசியை வழங்கிவிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, தடுப்பூசியின் வேலைபார்க்கும் திறன் பல வருடங்களுக்கு இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் அறிவுரையின்படி, 10-12 வயதுக்குள் இந்த தடுப்பூசியைப் போட்டுக்கொள்கிற பெண் குழந்தைகளுக்கு 2 டோஸ் தடுப்பூசி செலுத்தினாலே போதும்.
15 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட வயதில் இந்தத் தடுப்பூசியை செலுத்தினால், 3 டோஸ் கொடுக்க வேண்டும்.
முதல் டோஸ் 10 முதல் 12 வயதுக்கு இடைப்பட்ட காலத்தில் செலுத்திவிட்டால், இரண்டாவது டோஸ் 2 மாதங்கள் கழித்து வழங்கப்பட வேண்டும்.
3-வது டோஸ் கொடுக்கப்பட வேண்டியவர்களுக்கு, முதல் டோஸ் கொடுத்ததில் இருந்து 6 மாதங்கள் கழித்து வழங்கப்பட வேண்டும்.

ஆண் குழந்தைகளுக்கும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான தடுப்பூசி வழங்குவதை அமெரிக்காவில்தான் முதன்முதலில் ஆரம்பித்தார்கள். இதற்கு காரணம், நான் ஏற்கெனவே சொன்னதுபோலவே, இந்தப் புற்றுநோய்க்கான வைரஸ் தொற்று ஆணிடமிருந்தே பெண்ணுக்கு வருகிறது. அதனால், ஆண் குழந்தைகளுக்கும் இந்தத் தடுப்பூசி வழங்கப்பட வேண்டியது அவசியமாகிறது. இந்தியா தயாரித்துள்ள செர்வாவேக் தடுப்பூசியை ஆண், பெண் என இருபாலினருக்குமே வழங்கலாம்.
ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் 26 வயதுக்குள் இந்தத் தடுப்பூசியை போட்டுக்கொண்டால், 98% முதல் 99% வரை இந்தப் புற்றுநோய்க்கு எதிரான பாதுகாப்பு கிடைக்கும். இந்த தடுப்பூசியை 26 வயது வரை தான் வழங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால், இந்த வயது வரைக்கும்தான் இந்தத் தடுப்பூசி மீதான ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. 26 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு இந்தத் தடுப்பூசியை செலுத்தி, அதன் காரணமாக பக்க விளைவுகள் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட மருத்துவரே அதற்கு பொறுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிற சிக்கல் இருப்பதால், 10 வயதிலிருந்து 26 வயதுக்குள் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதே பாதுகாப்பு.

செர்வாவேக் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான வயது வரம்பை கடந்துவிட்டவர்கள், இந்தப் புற்றுநோய்க்கான அறிகுறிகளை அலட்சியம் செய்யக்கூடாது. கூடவே, வருடத்துக்கு ஒருமுறை பாப் ஸ்மியர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இந்தப் பரிசோதனையை 30 வயதிலிருந்தே ஆரம்பிக்கலாம். பரிசோதனையில் கருப்பை வாயில் சிறிய அளவு மாறுபாடு தெரிந்தாலும், செர்வைகல் பயாப்ஸி மூலம் பிரச்னையை உறுதிப்படுத்திக்கொண்டு சிகிச்சையை மேற்கொள்ளலாம்.
உலக சுகாதார நிறுவனம், 2030-க்குள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக 90-70-90 என்கிற இலக்கை நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது.
இந்த இலக்கின்படி 15 வயதுக்குள் இருக்கிற 90 சதவிகித பெண் குழந்தைளுக்கு, அவரவர் வயதுக்கேற்றபடி 2 அல்லது 3 டோஸ் ஹெச்.பி.வி (HPV) தடுப்பூசி வழங்கப்பட வேண்டும்.
35 முதல் 45 வயதுவரையான பெண்களில் 70 சதவிகிதத்தினருக்கு ஹெச்.பி.வி (HPV) பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு முந்தைய நிலையில் இருக்கிற பெண்களில் 90 சதவிகிதம் பேருக்கு சிகிச்சைகளை ஆரம்பித்துவிட வேண்டும்.

உலகின் அத்தனை நாடுகளும் 90-70-90 என்கிற இலக்கை 2030-க்குள் எட்டிவிட்டால், அடுத்த நூற்றாண்டில் அடியெடுத்து வைப்பதற்குள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை உலகை விட்டே விரட்ட முடியும் என்றிருக்கிறது உலக சுகாதார நிறுவனம். இந்தப் புற்றுநோயை தடுப்பதற்கு நம்மிடம் தடுப்பூசி என்கிற ஓர் ஆயுதம் இருக்கிறது. அதை பயன்படுத்துவதே புத்திசாலித்தனம்'' என்கிறார் டாக்டர் ஜெயஶ்ரீ கஜராஜ்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
