Women Safety: வேலைக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகள், சவால்கள்.. தீர்வு தான் என்ன?
டெல்லியில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த அன்விதா ஷர்மா, கடந்த வாரம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இவரின் கணவர் டாக்டராக உள்ளார், அவர்களுக்கு நான்கு வயதில் மகன் உள்ளார். தன் தற்கொலைக்கு காரணம் என்ன என்பதை அன்விதா அவரது பெற்றோருக்கு மெசேஜ் அனுப்பி விட்டு தற்கொலை செய்துள்ளார்.

அந்த மெசேஜில் என் கணவர் என் வேலையை தான் மணந்தார் என்னையல்ல, என்னால் முடிந்தவரை அனைத்தையும் செய்து விட்டேன். முழு நேரமும் மாமியார் மீது மட்டுமே கவனம் செலுத்தும் மருமகளை அவர்கள் விரும்புகின்றனர். கடந்த ஐந்து வருடங்களில் என் கணவர் செய்ததை போல் யாரும் என்னை கேலி செய்தது இல்லை, எல்லாவற்றிலும் தவறு கண்டுபிடித்து கேலி செய்தார்.
மாமியாருக்கு வேலை செய்யும் பணிப்பெண் மட்டுமே தேவைப்பட்டது ஒரு மருமகள் தேவைப்படவில்லை, எனது வங்கிக் கணக்கு காசோலை அனைத்தையும் கணவர்தான் பார்த்து பார்த்து கொள்கிறார், எனது குழந்தையை தயவு செய்து நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என பெற்றோருக்கு மெசேஜ் அனுப்பி இருக்கிறார். மேலும் வரதட்சணை கேட்டு அந்தப் பெண்ணை துன்புறுத்தியதாக அன்விதாவின் தந்தை புகார் அளித்திருந்தார்.
சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்தது, செவிலியராக நான்காண்டு பணிபுரிந்த ஒரு பெண் திருமணத்திற்கு பிறகு வேலையை நிறுத்தச் சொல்லி கணவன் வீட்டார் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் வேலையை கைவிடுகிறார்.
அதன் பின்னர் வரதட்சணையாக வாங்கிய நகையை வைத்து தொழில் தொடங்கி அதில் தோல்வியடைந்து, மீண்டும் பண தேவை வரும்போது கணவர் அந்த பெண்ணை பணம் கேட்டு தொந்தரவு செய்கிறார். வயதான பெற்றோரிடம் சென்று பணம் கேட்க முடியாமல் தவித்து, கணவர் வீட்டில் கேட்கும் பணத்தை கொடுப்பதற்காகவே அந்த பெண் மீண்டும் பணிக்குச் செல்கிறார்.
இவ்வாறு வேலைக்குச் செல்ல பெண்கள் எதிர்கொள்ளும் கொடுமைகள் ஏராளம் உள்ளன. வரதட்சணை வாங்குவதும் கொடுப்பதும் சட்டவிரோதமானது என்று 1961 ஆம் ஆண்டு கூறப்பட்டது. ஆனால், இன்றும் வரதட்சணை கொடுமை இருக்கத்தான் செய்கிறது. வரதட்சணை கொடுமையால் பல பெண்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மாடர்ன் வரதட்சணை
அதிலும் மாடர்ன் வரதட்சணை தற்போது புது ட்ரெண்டாகி ஏசி, ஐபோன், ஆடி கார் என நவீன முறையில் வரதட்சணை கேட்கிறார்கள். ”படித்தவர்களே வரதட்சணையாக கொடுக்கப்படும் பொருள்கள் அல்லது பணம் தங்களது கௌரவத்தை காட்டுவதாக நம்புகின்றனர். படித்த ஆண்கள் தங்களது திருமணத்திற்காக பெறப்பட்ட வரதட்சனை குறித்து நண்பர்களிடம் பேசுவதை பெருமையாக பேசுகின்றனர்” என்று இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை சேர்ந்த மனோன்மணி கூறியிருக்கிறார்.
இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளாக ஆண்களின் கல்வி, வேலை வாய்ப்பு அதிகரித்ததையடுத்து, வரதட்சணை கொடுமையின் பாதிப்பும் அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
ஆய்வுகள் சொல்வதென்ன?
வேலைக்குச் செல்லும் பெண்கள் குடும்பத்தின் நிதிச்சுமையை குறைக்க உதவினாலும், அவர்களின் தொழில் வாழ்க்கை பெரும்பாலும் இந்தியாவில் குடும்ப வன்முறை அதிகரிக்க செய்வதாக ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
2014 ஆம் ஆண்டு ”இந்தியன் ஜர்னல் ஆஃப் சைக்காட்ரிக் நர்ஸிங்” என்ற இதழில் வெளியான ஒரு ஆய்வு கட்டுரையில் பணிக்கு செல்லும் பெண்கள் பணிக்கு செல்லாத பெண்களைக்காட்டிலும் அதிக அளவில் வீட்டில் வன்முறைக்கு ஆளாகி வருவதாக கூறப்படுகிறது.

60 பெண்களை வைத்து நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 87% வேலைக்குச் செல்லும் பெண்கள் வன்முறைக்கு ஆளாக்கப்படுகின்றனர் என தெரியவந்துள்ளது. அதே சமயம் வேலைக்குச் செல்லாத பெண்கள் 77% சதவீதம் குடும்ப வன்முறைக்கு ஆளாகிறார்கள் என தெரியவந்துள்ளது.
2020 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இதுபோன்ற குடும்ப வன்முறைகளால் வேலைக்குச் செல்லும் பெண்களின் வேலையில் தொய்வு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
2023-ல் எடுக்கப்பட்ட ஆய்வில் நகர்புற மற்றும் கிராமப்புற பெண்கள் இடையே எந்த வேறுபாடும் இல்லாமல் வேலைக்குச் செல்லும் பெண்கள் குடும்ப வன்முறைக்கு ஆளாக்கப்படுகின்றனர் என தெரிய வந்துள்ளது.
இந்த குடும்ப வன்முறை என்பது பொருளாதார அடிப்படையானது மட்டும் கிடையாது என்பதை பல ஆராய்ச்சி கட்டுரைகள் வெளிப்படையாக கூறியுள்ளது. இது சமுதாயம் மற்றும் கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்டதாக மேற்கூறிய மூன்று கட்டுரைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சவால்களும் தீர்வுகளும்
வேலைக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை எப்படி கடக்க வேண்டும், எதற்காக அவர்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு செல்கிறார்கள் என்பதை உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்த் விகடனுக்கு பகிர்ந்துள்ளார்.
"இன்றைய காலகட்டத்தில் பெண்கள் வேலைக்குச் செல்வதை விருப்பப்பட்டு தான் செய்கின்றனர். அதே சமயத்தில் அவர்களை வற்புறுத்தி வேலைக்குச் செல்ல கூறினால் அது முற்றிலும் தவறு. இவ்வாறு வற்புறுத்தலின் பேரில் பெண்கள் வேலைக்குச் செல்வதாலே பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
முதலில் பெண்கள் அவர்களுக்கான பொறுப்புகள் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும், அப்படி புரிந்து கொண்டால் பாதி பிரச்னை சுமுகமாகி விடும். அவர்களுக்கான வேலை இதுதான் என்பதை கணவரிடமும், மாமியாரிடமும் கூறி விட வேண்டும்.
இப்போது இருக்கும் பிரச்னையே பெண்கள் தங்களுக்கான வேலை என்ன என்று புரிந்து கொள்ளாமல் இருப்பது தான். அனைத்துமே அவர்களுடைய பொறுப்புதான் என்று எண்ணுகிறார்கள். இதனாலே அவர்களுக்குள் ஒரு குற்ற உணர்வு ஏற்படுகிறது.
அந்த வேலையை செய்து முடிக்காவிட்டாலும், அல்லது செய்ய இயலாததாலும் அவர்கள் தங்களைத் தானே பழி சொல்லிக் கொள்கிறார்கள். இதனாலே குற்ற உணர்வு ஏற்பட்டு, தங்களை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு செல்கிறார்கள் என்று கூறுகிறார் உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்த்.

அதுமட்டுமில்லாமல் தற்போது அன்பு இல்லாத ( loveless marriage life) ஒரு திருமண வாழ்க்கையும் பலரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அந்த இடத்தில் நீங்கள் என்ன செய்தாலும் அது தவறாகத்தான் இருக்கும், எனவே உங்களது திருமண வாழ்க்கையை குறித்தும், கணவர் எப்படி நடந்து கொள்கிறார் என்பது குறித்தும் நீங்கள் புரிந்து கொண்டு அதன்படி வாழ்க்கையை தேர்ந்தெடுக்க வேண்டும்.
இவ்வாறு குடும்பத்திற்குள் நடக்கும் வன்முறைகள் அமைதியான முறையில் சொல்லப்பட்டால் அதனை எப்படி அமைதியான முறையில் சரி செய்வது என்பதை பேசி முடிவு செய்து தங்களது வேலைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
அடுத்தப்படியாக வருவது இந்த உடல் ரீதியான வன்முறைகள். உடல் ரீதியாக வன்முறைகள் நடந்தால் அதன் பின்னர் நீங்கள் அந்த வாழ்வில் சில முக்கியமான முடிவுகளை எடுக்க நேரிடும். அப்படி யாரிடமும் யாரும் உடல் ரீதியான வன்முறையை எதிர்கொள்ள தேவையில்லை என்கிறார் உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்த்.
வேலைக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்:
உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்த் கூற்றுப்படி;
அலுவலக வேலை - வீட்டு வேலை
வேலைக்குச் செல்லும் பெண்கள் அவர்களின் அலுவலக வேலை விஷயங்களையும், வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொள்வது சவாலாக அமைகிறது. எல்லா வேலையும் நீங்களே செய்ய வேண்டும் என்று நினைக்காதீர்கள். முடிந்தவரை குடும்பத்தினர்களிடம் வீட்டு வேலைகளில் பங்கேற்க சொல்லுங்கள். அதில் எந்த தவறும் கிடையாது. உதவி கேட்பதற்காக நீங்கள் வருத்தப்பட வேண்டிய அவசியமும் கிடையாது.

நேரமின்மை
பல வேலைகளை செய்ய வேண்டும் என்று முயற்சிப்பதால் வேலைக்குச் செல்லும் பெண்கள் அவர்களுக்கான நேரத்தை ஒதுக்க முடியாமல் போயிவிடுகிறது. நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் எந்த வேலைகளை முதலில் செய்ய வேண்டும் என்பதையும் முன்பே தீர்மானித்து வைக்க வேண்டும். அதில் உங்களின் சுய கவனிப்பு (self-care) விஷயங்களும் நிச்சயம் இருக்க வேண்டும்.
மன அழுத்தம்
இந்த சமூகம் அல்லது வீடுகளின் பழக்கவழங்கள், பெண்கள் தான் வீட்டு வேலைகளை பார்க்க வேண்டும் என்று அனைவரையும் நம்ப வைத்துக் கொண்டிருக்கிறது. பெண்கள் தற்போது வேலைக்குச் செல்வதால் இரண்டுமே பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்தினாலே அதிகமான மன அழுத்ததால் பாதிக்கப்படுகின்றனர்.
No என்று சொல்லக் கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். உங்களுக்காக நேரத்தில் வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் இருங்கள்.
மன ஆரோக்கியம் முக்கியம்
ஒழுங்காக தூங்குவது, தியானம் போன்ற விஷயங்கள் மன அழுத்தம், பதட்டம் போன்ற விஷயங்களை குறைக்க உதவுவதோடு நேர்மறையான எண்ணங்களையும், மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதாக கூறுகிறார் உளவியல் நிபுணர்.
பாதுகாப்பு ரீதியான சட்டங்கள் என்னென்ன?
பெண்களுக்கு எதிராக நடக்கும் வீட்டு வன்முறை பாதுகாப்பு சட்டங்கள் குறித்து விகடனுக்கு வழக்கறிஞர் ராஜதுரை பகிர்ந்துள்ளார்.
"இந்தியாவில், வீட்டு வன்முறை என்பது வேலை செய்யும் பெண்கள் உள்பட பல பெண்களைப் பாதிக்கும் பிரச்னையாகும். வீட்டு வன்முறை என்பது வீடு அல்லது குடும்ப அமைப்புகளுக்குள் ஏற்படும் உணர்ச்சி, பாலியல் மற்றும் பொருளாதார பிரச்னைகளை உள்ளடக்கியது. வேலை செய்யும் பெண்கள், பணியிடத்திலும் வீட்டிலும் தங்கள் பங்களிப்பு காரணமாக வன்முறைகளையும் சவால்களையும் எதிர்க்கொள்கிறார் என கூறுகிறார் வழக்கறிஞர் ராஜதுரை. சில பாதுகாப்பு சட்டங்கள் குறித்தும் பகிர்ந்துள்ளார்.

குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாத்தல் சட்டம் (Protection of Women from Domestic Violence Act, 2005) உடல், உணர்ச்சி, பாலியல் மற்றும் பொருளாதார துஷ்பிரயோகம் உள்ளிட்ட வீட்டு வன்முறையிலிருந்து பெண்களுக்குப் பாதுகாப்பை வழங்க இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
இந்தச் சட்டம் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதையும், குடியிருப்பு , பண நிவாரணம் மற்றும் காவல் உத்தரவுகளைப் பெற அனுமதிக்கிறது. பெண்கள் நேரடியாகவோ அல்லது அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரி மூலமாகவோ நீதிமன்றத்தை அணுகலாம்.

பாரதிய நியாய சன்ஹிதா (Bharatiya Nyaya Sanhita) பிரிவு 80, வரதட்சணை தொடர்பான துன்புறுத்தல் காரணமாக ஒரு பெண்ணின் மரணத்திற்கு வழிவகுக்கும் எந்தவொரு வன்முறையையும் கையாள்கிறது.
பாரதிய நியாய சன்ஹிதாவில் (BNS), பிரிவு 85 மற்றும் 86 திருமணமான ஒரு பெண்ணிடம் கணவன் அல்லது அவரது உறவினர்கள் நடத்தும் கொடுமையை குற்றமாகக் கருதுகிறது. இது உடல் மற்றும் மன ரீதியான கொடுமையை எதிர்கொள்கிறது. இதன்படியும் குடும்ப வன்முறைகளை எதிர்க்கொள்ளலாம்.
பெண்களுக்கு சட்ட ரீதியாக பல்வேறு பாதுக்காப்புகள் இருக்கின்றன, தற்கொலை எந்த ஒரு பிரச்னைகளுக்கு தீர்வு அல்ல" என்கிறார் வழக்கறிஞர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
