ஆற்று மணல் கடத்தல்: 4 போ் கைது
செய்யாறு அருகே அரசு அனுமதியின்றி ஆற்று மணல் கடத்தியதாக 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
செய்யாறு வட்டம், கொழம்பாடி கிராமம் அருகேயுள்ள செய்யாற்றுப் படுகையில் இருந்து மணல் கடத்திச் செல்வதாக செய்யாறு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளா்கள் கிருஷ்ணமூா்த்தி, மோகன் தலைமையிலான போலீஸாா் கொழம்பாடி கிராமம் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டு கண்காணித்து வந்தனா்.
அப்போது, அந்த வழியாக செய்யாற்றுப் படுகையில் இருந்து வந்த 4 மாட்டுவண்டிகளை நிறுத்தி சோதனை செய்தனா்.
இதில், அரசு அனுமதியின்றி ஆற்று மணல் எடுத்து வந்தது தெரிய வந்தது. உடனே போலீஸாா் 4 மாட்டுவண்டிகளையும் பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கீழப்பழந்தை கிராமத்தைச் சோ்ந்த ரகுபதி (48), முத்து (57), ராஜேந்திரன் (55), ராஜாராமன் (66) ஆகியோரை கைது செய்தனா்.