இங்க மட்டும் எப்படி கடல் இவ்ளோ சுத்தமா இருக்கு? லட்சத்தீவு ஆச்சரியம் | Travel Contest
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
இயற்கையை விரும்புபவர்களுக்கும், ஸ்கூபா டைவிங், நீச்சல் பயிற்சியில் ஈடுபடும் சாகச பிரியர்களுக்கும் லட்சத்தீவை சொர்க்க பூமி என்றே சொல்லலாம்.
கவரத்தியை தலைமையிடமாக கொண்ட லட்சத் தீவில் அகத்தி, அமினி, கட்மத், அந்த்ரூத், மினிகாய், கில்தான், சேத்லத், பித்ரா உள்ளிட்ட 10 தீவுகளில் மக்கள் வசிக்கின்றனர்.
தின்னகரா, கல்பிட்டி, பங்காரம் ஆகிய தீவுகள் சுற்றுலா வாசிகளுக்கானது. அங்கு சுற்றுலாவாசிகளுக்கான ரிசார்ட்கள் மட்டுமே உண்டு.!

இந்திய வரைபடத்தில் அரபிக் கடலில் புள்ளி புள்ளியாக தென்படும் லட்சத்தீவில் மக்கள் தொகை மிகவும் குறைவு தான். ஒவ்வொரு தீவிலும் 7 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரம் பேர் வசிப்பார்கள். எனவே, மொத்தமாக பார்க்கும் போது, சுமார் ஒரு லட்சம் பேர் இருப்பார்கள்.
மீன்பிடித்தல் பிரதான தொழில்
லட்சத்தீவில் மீன் பிடித்தல் முக்கிய தொழில். தென்னை மரங்கள் அதிகமாக உள்ளதால் கொப்பறை உற்பத்தி அதிக அளவில் உள்ளது.
இதுதவிர, சுற்றுலா மூலம் அதிக வருவாய் கிடைக்கிறது. ஆண்டுதோறும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்வார்கள். இங்குள்ள கடற்கரையில் உள்ள மணல் வெள்ளை நிறத்தில் காணப்படும். அதில் மாலை நேரத்தில் அமர்ந்து ஓய்வு எடுப்பதே, இங்குள்ள மக்களின் பொழுதுபோக்கு.!

கடந்த ஆண்டு மாலத்தீவுக்கும் நமக்கும் பிரச்சனை ஏற்பட்டபோது, மாலத்தீவுக்கு இணையாக இந்த தீவு புரமோட் செய்யப்பட்டது.
பிரதமர் நரேந்திரமோடி லட்சத்தீவுக்கு வந்து 2 நாள்கள் தங்கினார். அப்போது, அவர் கடற்கரையில் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
நீலவண்ண கடல் – பால்வண்ணத்தில் கடற்கரை
சில வருடங்களுக்கு முன்பு, லட்சத்தீவு சுற்றுலா சென்றிருந்தேன். அந்த தீவை பொருத்தவரை, அங்குள்ள கடல் நீல வண்ணத்தில் இருக்கும். கடற்கரை மணல் பால் வண்ணத்தில் இருக்கும். கடலில் எங்கும் அசுத்தம் என்பது இருக்காது.
ஏனெனில் கடல் என்பது இங்கு வசிக்கும் மக்களுக்கு கடவுள். தொழிற்சாலைகள் எதுவும் இங்கு இல்லை. அதனால், கழிவுகளை கடலில் வெளியேற்றுவதற்கு வாய்ப்பு இல்லை. அதேபோல், சாக்கடை கழிவு நீர் வாய்க்காலும் இல்லை. வீட்டில் இருந்து வெளியேறும் கழிவு நீர், பூமிக்கு உள்ளேயே கிரகித்துக் கொள்ளும்.

முழுக்க முழுக்க தென்னை மரங்கள் சூழ்ந்த வனப்பகுதி என்பதால், ஆங்காங்கே மக்கள் வீடு கட்டி வசிக்கின்றனர்.
வீடு கட்டுவதற்கு தேவையான செங்கல், ஜல்லி, மணல், கம்பி, சிமென்ட் எல்லாம் இங்கே கேரளத்தில் இருந்து தான் கொண்டு செல்லப்படும். அதேபோல், அரிசி, பருப்பு, காய்கறி, பெட்ரோல், டீசல் என அனைத்து பொருள்களும் கரையில் இருந்து தான் செல்ல வேண்டும்.
இதனால், விலை சற்று அதிகமாக இருக்கும். அங்கே வசிப்பவர்கள் 99% பேர் இஸ்லாமியர்கள். மீது ஒரு சதவீதம் பிற மதத்தவர்கள் அதாவது, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து, அலுவல் நிமித்தமாக சென்றவர்கள், பள்ளிக்கூட ஆசிரியர்கள், மருத்துவர், செவிலியர், போலீஸ்காரர், விமான, கப்பல் போக்குவரத்து ஊழியர்கள், அஞ்சலக பணியாளர்கள் இந்த 1% சதவீதத்தில் இடம்பெறுவார்கள்.
முழுக்க முழுக்க இஸ்லாமியர்கள் என்பதால், வெள்ளிக்கிழமை அங்கே அரசு விடுமுறை! ஞாயிற்றுக்கிழமை பணிநாள்.
மீன் சந்தையே கிடையாது
தீவில் 100 குடும்பம் இருக்கிறது என்றால், அதில் 75 சதவீதம் பேர், மீன்பிடித்தல், மீதி 5 சதவீதம் பேர் தேங்காய் உற்பத்தி, 10 சதவீதம் பேர் அரசாங்க வேலை, 5% பேர் வயதான முதியவராக இருப்பர். 5% பேர் வர்த்தகம் உள்ளிட்ட இன்னபிற தொழில் செய்வர்.
எனவே, முழுக்க முழுக்க மீன்பிடித்தலும், தென்னை சார்ந்த தொழிலும் தான் பிரதானம்.
ஒரு முக்கியமான விஷயம். மக்கள் வசிக்கும் 10 தீவிலும், எந்த தீவிலும் மீன் சந்தை, மீன் கடைகள் கிடையாது. அதேபோல், எல்லா வகை மீன்களையும் இவர்கள் பிடிப்பது கிடையாது. இவர்கள் பிடிக்கும் ஒரே மீன் ரகம் சூறைமீன். ஆங்கிலத்தில் இதற்கு பெயர் டுனா.

லட்சத்தீவில் வீடுகள் வரிசையாக இருக்காது. ஏனெனில் தென்னந்தோப்புக்குள் வீடு என்பதால், ஆங்காங்கே வீடுகள் இருக்கும். தென்னை மரங்களுக்கு சேதம் ஏற்படக்கூடாது என்பதற்காக, அங்கொரு வீடு, இங்கொரு வீடு இருக்கும். தென்னை சூழ்ந்திருப்பதால், தீவுக்குள் வெயிலின் தாக்கம் இருக்காது. அகத்தி தீவை எடுத்துக் கொண்டால், அதன் நீளம் 7 கிலோ மீட்டர். அகலம் 500 மீட்டரில் இருந்து ஒரு கிலோ மீட்டர் பரப்பளவு இருக்கலாம்.
தீவின் வடக்கு முனையில் கலங்கரை விளக்கம், தெற்கு முனையில் விமான நிலையம் தான் எல்லை. இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் மிக குறுகிய ஓடுபாதை இங்குதான் இருக்கிறது.
ஒரு வீட்டில் ஒரு படகு இருந்தால், அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள், உறவினர்கள் என 5 முதல் 7 பேர் மீன்பிடிக்கச் செல்வார்கள்.
படகில் வலை இருக்காது. தூண்டில் இருக்கும். அந்த தூண்டில் வித்தியாசமாக இருக்கும். 10 அடி உயரம் கொண்ட மூங்கில் குச்சியில் நரம்பு கயிறு, தூண்டில் முள் கட்டப்பட்டிருக்கும். நடுக்கடலுக்கு சென்றால் படகை ஒட்டியே, சூறைமீன்கள் துள்ளி விளையாடும். அப்போது, தூண்டிலை மீனுக்கு நேராக வீசும்போது கடிக்கும்.
அப்போது லாவகமாக சுண்டினால், கடலில் இருக்கும் மீன், அடுத்த வினாடியே படகின் நடுப் பகுதிக்குள் உள்ள தொட்டியில் விழும். கையை வைத்து தூண்டில் முள்ளை எடுக்க வேண்டிய அவசியமில்லை. மீண்டும் தூண்டிலை போட்டு ஒரே ஒரு சுண்டு… அடுத்தநொடி மீன் தொட்டிக்குள் விழும்.
ஒவ்வொரு மீனும் குறைந்த பட்சம் 5 கி.கி முதல் 10 கி.கி வரை இருக்கும். எனவே, தூண்டில் போட்டு மீன்பிடிப்பதில் அதிக வலு வேண்டும். புதிதாக வேடிக்கை பார்ப்பவர்களுக்கு இந்த முறையில் மீன்பிடிக்க முடியாது. அரை மணிநேரத்தில் இருந்து ஒரு மணிநேரத்திற்குள் மீன்பிடித்து விடுவார்கள். மீன்பிடித்துவிட்டு கரைக்கு திரும்பும்போது, படகு திணறிக்கொண்டு வரும். அந்த அளவுக்கு அதிக மீன்பிடித்துக் கொண்டு வருவார்கள்.

அதேபோல், விருந்தோம்பலுக்கு பெயர் போனவர்கள் இந்த மக்கள், காலை உணவாக இருக்கட்டும், மதிய உணவாக இருக்கட்டும் நாம் என்ன வகையான உணவை விரும்புகிறோம் என அறிந்து, அதை சுவையாக செய்து கொடுக்க ரொம்ப மெனக்கெடுவார்கள்.
நான் போயிருந்தது நண்பர் ஒருவரின் வீட்டிற்கு என்பதால், விருந்து உபசரிப்பு அருமையாக இருந்தது. ஒவ்வொரு வீட்டு திண்ணையிலும் வெற்றிலைப் பெட்டி, டீ பிளாஸ்க் கட்டாயம் இருக்கும். நாம் சாலை வழியாக நடந்து செல்லும்போது, வீட்டிற்கு வாங்க… ஒரு டீ குடிச்சிட்டுப் போங்கன்னு உரிமையோடு அழைப்பார்கள். டீ குடிச்ச உடனே, முருக்கான் போடுங்கள் என்பார்கள் வெற்றிலையை தான் அப்படி சொல்கிறார்கள். நமக்கு வெற்றிலை பழக்கம் இல்லை என்று சொன்னால் ரொம்பவே ஆச்சரியப்படுகிறார்கள்.
பவளப்பாறைகளை கண்ணால் பார்க்கலாம்
லட்சத்தீவு கடலின் மற்றொரு சிறப்பு பவளப்பாறைகள், உலகின் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே பவளப்பாறைகளை பார்க்க முடியும். அதிலும் லட்சத்தீவில் அதிகம் இவை உண்டு. கடலில் உள்ள உயிரினங்களில் சுமார் 25 சதவிகிதம் பவளப்பாறை திட்டுகளில்தான் காணப்படுகின்றன.
கடல் முள்ளெலி, நட்சத்திர மீன்கள், சுறா, இறால், சிங்கி இறால்கள், நத்தைகள், சிறிய வண்ண மீன்கள், மெல்லுடலிகள் போன்றவை பவளப்பாறை திட்டுகளிலேயே அதிகம் காணப்படுகின்றன. பவளப்பாறைகள் வளிமண்டலத்தில் உள்ள கரியமில வாயுவை உறிஞ்சி சுண்ணாம்பாக மாற்றுவதால், இவை நிலத்தின் காடுகளைப் போல கரியமில வாயு தேக்கியாகவும் செயல்படுகின்றன. இதன்மூலம் பூமி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த பெரிதும் துணை புரிகின்றன.

நம் நாட்டில் உள்ள மீனவர்கள் கடலில் வலை எடுத்துச் சென்று, வஞ்சிரம், பாறை, மத்தி, சங்கரா, நண்டு, இறால் என பல்வேறு வகையான மீன்களை பிடிக்கின்றனர். ஆனால், லட்சத்தீவு மக்கள் சூறை மீன்களை மட்டுமே பிடிக்கின்றனர். அவற்றை அப்படியே கரைக்கு கொண்டு வருகின்றனர். அதாவது கடலுக்கு சென்றுவிட்டு, படகை தங்களது வீட்டிற்கு அருகேயே கொண்டு வந்துவிடுவார்கள்.
பின்னர் சின்ன படகில் சென்று மீனை கொண்டு வந்து, அண்டாவில் வேகவைத்து பின்னர் காய வைப்பார்கள். ஊருக்குள் வெயில் இருக்காது என்பதால், கடற்கரையோரம் பரண் அமைத்து, மீனை கருவாடு ஆக்குவார்கள். அவற்றை சாக்கு மூட்டையில் கட்டி வைத்து வீட்டில் சேமிப்பார்கள்.
இவ்வாறு சேமிக்கும் கருவாட்டுக்கு பெயர் தான் மாசிக்கருவாடு. இந்த கருவாட்டை வருடத்திற்கு ஒருமுறை தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டுவந்து முகவர்கள் மூலம் விற்பனை செய்வார்கள். கருவாட்டை ஏற்றுமதி செய்ய வசதியாக அரசாங்கம் சார்பில் சரக்கு கப்பல் இயக்கப்படும்.
வீட்டிற்கு அருகேயே படகு நிறுத்தம்
இன்னொரு முக்கியமான விஷயம், இங்கே மீன்பிடி படகுகள் எல்லாம், குடியிருக்கும் வீடு அல்லது, படகு பழுதுபார்க்கும் ஷெட் அருகே, கடலில் கட்டப்பட்டிருக்கும்.
மீன்பிடி இறங்குதளம் இங்கே இல்லை. கொச்சியில் இருந்து செல்லும் பயணிகள் கப்பல், தீவுக்கு 5 கிலோ மீட்டருக்கு அப்பால் நடுக்கடலில் நின்றுவிடும். அங்கிருந்து படகுகள் மூலம் பயணிகள் ஏற்றிச் செல்லப்பட்டு, கடற்கரையோரத்தில் கட்டப்பட்டிருக்கும் பாலத்தில் இறக்கி விடப்படுவார்கள்.
வெளியூரில் இருந்து சரக்கு ஏற்றிவரும் பெரிய படகுகள் இந்த பாலத்தினை சரக்கு இறக்கிட பயன்படுத்திக் கொள்ளும். இன்னொரு விஷயம் இங்கிருந்து மீன் ஏற்றுமதி கிடையாது.

ஒன்லி மாசி கருவாடு ஏற்றுமதிதான். சூறை மீனை மதிப்பு கூட்டி, ஊறுகாயாக விற்பனை செய்வார்கள். அதேபோல், 2-வது இடத்தில் இருக்கும் தொழில் தென்னை சாகுபடி, இங்கிருந்து ஒரு தேங்காய் கூட வெளியூருக்கு ஏற்றுமதி செய்யப்படாது.
முழுக்க காயவைத்து, கொப்பறை மட்டுமே ஏற்றுமதி செய்யப்படும். கொப்பறையை கொள்முதல் செய்வதற்காக வருடத்திற்கு ஒருமுறை சிறப்பு கப்பல் இயக்கப்படும். தேங்காய் நார் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உண்டு.
அதேபோல், இந்த மக்கள், சூறை மீனைத்தான் சாப்பிடுவார்கள். ஒருவேளை இந்த மீன்கள் மட்டும்தான், இந்த கடலில் கிடைக்குமோ என தெரியவில்லை.
வாய் ஊசி போல் இருக்கும் ஊழி மீன்களை பிடிப்பார்கள். அதனை சமையலுக்கு பயன்படுத்துவார்கள். ஒரு சிலர் கரையோரம் வலை விரித்து, சிறிய ரக மீன்பிடிப்பார்கள். இங்கே யாரும் மீனை விலை கொடுத்து வாங்க மாட்டார்கள்.
எல்லோர் வீட்டிலும் ஒருத்தர் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வார்கள் என்பதால், படகை விட்டு கரையோரும் போது, கையோடு ஒரு மீன் அல்லது 2 மீனை வீட்டிற்கு கொண்டுவந்து விடுவார். மீனை படகில் இருந்து இறக்குபோது நாம் வேடிக்கை பார்த்தால், உங்களுக்கு மீன் வேண்டுமா, இலவசமாகவே எடுத்துக் கொள்ளுங்கள் என்று அன்பாக கொடுப்பார்கள். அந்த அளவுக்கு இரக்க குணம் மிக்கவர்கள் இவர்கள்!
-சி.அ.அய்யப்பன்
சென்னை
My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா' கட்டுரை

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.
இந்த மாதத்திற்கான தலைப்பு - `சுற்றுலா'. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.
வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
பரிசுத்தொகை விவரம்:
முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)
இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)
நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)
நினைவில் கொள்க:
நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 20, 2025
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.
உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்
விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்
உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது.
கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.