செய்திகள் :

Travel Contest: 'உப்புச் சுரங்கம்; சாகச தீம் பார்க்; விமான மியூசியம்' - பிரமிப்பான போலாந்து சுற்றுலா

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

மத்திய ஐரோப்பாவில் உள்ள போலந்து நாடு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. மிகப் பழங்காலந்தொட்டே இங்கு மக்கள் சிறந்து வாழ்ந்துள்ளதாகச் சரித்திரம் கட்டியங் கூறுகிறது.

கிறிஸ்துவின் பிறப்பிற்கு முன்பிலிருந்தே வளமான வாழ்க்கை அமைந்திருந்ததாகக் கூறப்படுகிறது.

உலக நிலப் பரப்பில் 69 வது இடத்தையும், மக்கட் தொகையில் 38 வது இடத்தையும் கொண்ட, மக்களாட்சி நடைபெறும் இந் நாட்டில், போலிய மொழி (Polish) பேசும் போலியர்களே அதிகம் வாழ்கிறார்கள். ’ஸ்வாட்டெ’ என்பது இங்குள்ள பணத்தின் பெயர்.

krakow

அந்த நாட்டிற்கு 12 நாள் பயணமாகச் சுற்றுலா சென்றுவரக் கிளம்பினோம். வாசக நண்பர்களாகிய உங்களையும் உடன் அழைத்துச் செல்வதில் மிக்க மகிழ்ச்சி.

தெற்கிலுள்ள ‘க்ரகோவ்’ (Krakow) நகரில் தொடங்கி, வடக்கு நோக்கிச் சென்று, கடோவிஸ் (Katowice), தலைநகர் வார்சா (Warsaw)மற்றும் ஜிடன்ஸ்க் (Gdansk) (க்டன்ஸ்க் என்றும் உச்சரிக்கிறார்கள்) ஆகிய இடங்களில் தங்கி ஆங்காங்கு உள்ள சுற்றுலாப் பகுதிகளுக்குச் சென்று வந்தோம்.

அதோ சூரிக் விமான நிலையத்தில் க்ரகோவ் (krakow) செல்லும் விமானம் தயாராக நிற்கிறது. சுமார் ஒன்றரை மணி நேரப் பயணம்தான். மாலை வெயில் இதம் தந்தது!

க்ரகோவ் விமான நிலையத்தில் இறங்கி அங்கிருந்து ஒரு காரில் கிளம்பினோம். காரை மட்டும் வாடகைக்கு எடுத்துக் கொண்டு நாமே ஓட்டிக் கொள்ளலாம். திரும்பும் விமான நிலையத்தில் காரை விட்டு விட்டு, நாம் பயணத்தைத் தொடரலாம்.

பன்னாட்டு ஓட்டுனர் உரிமம் (International Driving Licence) வைத்திருப்பதுடன், அந்தந்த நாட்டு சாலை விதிகளும் நமக்குக் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.

ஓட்டலில் தங்குவதற்குப் பதிலாக வீடுகளை வாடகைக்கு எடுத்துக் கொண்டு தங்கலாம். அங்கு, நமக்கு வேண்டிய உணவை நாமே தயாரித்துக் கொள்ளும் வசதிகள் உள்ளன. எல்லா இடங்களிலுமே தற்போது இந்தியன் ரெஸ்டாரெண்டுகளும் உள்ளன.

நகரின் அழகை ரசித்தபடி தங்கும் வீட்டிற்குச் சென்றோம். இங்கு குளிர் காலங்களில் சீதோஷ்ணம் ( - ) டிகிரிக்குச் சென்று விடுவதால், மிகச் சில வீடுகளில் மட்டுமே ஏ.சி., பொருத்தியுள்ளார்கள். ஆனால் எல்லா இடங்களிலும் வெப்பம் தரும் ஹீட்டர்கள் உண்டு.

Cracow Saltworks Museum

முதல் நாள், உப்புச் சுரங்கம் மற்றும் மியூசியம் (Cracow Saltworks Museum in Wieliczka) பார்க்கச் சென்றோம்.

சுமார் 130 மீட்டர் (427 அடிகள்) ஆழத்திற்கு, மரப்படிகள் மூலம், கீழே அழைத்துச் செல்கிறார்கள். மிகப் பழமையானது என்று கூறுகிறார்கள். 13ஆம் நூற்றாண்டின் இறுதியில் கோட்டை (castle) கட்டப்பட்டுள்ளது.

அதில்தான் உப்புத் தொழிற்சாலையின் நிர்வாக அலுவலகம் இயங்கியதாம்.

உலகின் மிகப்பெரிய தொழிற்சாலை இதுவென்றும் மிக நீண்ட காலமாக இயங்கி வந்ததென்றும் கூறுகிறார்கள். அனைத்து வசதிகளுடன் நகர் செயல்பட்டுள்ளது.

உள்ளேயிருந்து உப்பை உற்பத்தி செய்ததையும், மேலே கொண்டு வந்ததையும் விளக்கமாகக் காண்பிக்கிறார்கள். ஆங்கிலம், ஜெர்மன் போன்ற பல மொழி கைடுகள் உள்ளனர்.

உலக அரங்கில் உப்பானது வரலாற்றுச் சிறப்புப் பெற்றிருக்கிறது. நமது நாட்டில் காந்தி மகான் உப்புச் சத்தியாக்கிரகம் செய்தது மறக்க முடியாதது ஆயிற்றே! வேதாரண்யமும் சிறப்படைய இதுவும் காரணமல்லவா?

உப்பை வெடிகளாகவும் பயன்படுத்தி, எதிரிகளை நிலை குலையச் செய்திருக்கிறார்கள்!

சுரங்கத்தின் உள்ளேயே சர்ச்சும், பெரிய மண்டபங்களும், சிறிய ஏரிகளும் உள்ளன. பாதுகாப்பு கருதி, பெரும் மரச் சட்டங்களைக் கொண்டு, எல்லா இடங்களையும், தக்க முறையில் பலப்படுத்தி வைத்துள்ளார்கள்.

ஆங்காங்கே ரெஸ்டாரண்டுகளும் உள்ளன. ஒரு சிறு தனி உலகமாகவே நமக்குத் தோன்றுகிறது. வானமும், வட்ட நிலவும், சூரியனும், நட்சத்திரங்களும் மட்டும்தான் உள்ளே தெரியவில்லையே தவிரமற்றபடி 400 அடிகளுக்குக் கீழே இருக்கிறோம் என்ற எண்ணமே தோன்றவில்லை. ஓர் அரை நாளை இதற்காக ஒதுக்கிப் பார்த்தோம்.

அடுத்த நாள் ஆகாய விமான மியூசியம் சென்றோம்.

சுமார் 250 விமானங்களைப் பார்வைக்கு வைத்து நம்மை மிரளச் செய்கிறார்கள். விமானங்களின் வளர்ச்சியையும், போலந்துக்காரர்களின் பங்களிப்பையும் விளக்கியுள்ளார்கள்.

இரண்டாம் உலகப் போரின் ஆரம்பத்திலேயே போலந்து வீழ்ச்சியடைந்தாலும், அந்நாட்டு விமானிகள் பல நாட்டுப் படைகளிலும் சேர்ந்து உயரிய பொறுப்புகளை வகித்துள்ளார்கள். போலந்துக்காரர்களின் திறமை பிரமிக்க வைக்கிறது!

சுமார் 100 க்கும் மேற்பட்ட விமான எஞ்சின்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 1908 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை உள்ளவை அவை.

அவற்றோடு, அவ்வப்போது உள்ள விமானிகளின் ஆடைகள், பதக்கங்கள் என அனைத்தும் நம் கண்களுக்கு விருந்தளிக்கின்றன.

அதோடு மட்டுமல்லாது ஹெலிகாப்டர்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

அருங்காட்சியகத்திற்குள் மட்டுமல்லாமல், பெரிய திடலிலும் விமானங்களை நிறுத்தியுள்ளார்கள். சிலவற்றில் உள் சென்று பார்க்கவும் வசதி செய்துள்ளார்கள்.

உள்ளே மாநாட்டு (Conference) அறைகள், நிறுவனங்கள் கண்காட்சிகள் நடத்த ஏதுவான அறைகள், இசை விழாக்கள் நடத்தும் பகுதி, சிறுவர்கள் பிறந்த நாள் கொண்டாட என்று, அனைத்து வசதிகளும் உண்டு.

மூன்றாம் நாள் அங்குள்ள பழங்கோட்டைக்குச் சென்றோம். சிறிய மலை மீது நாம் ஏறிச் சென்று பார்க்க வழி ஏற்படுத்தியுள்ளார்கள்.

மேலே ஏறி,சுற்றிலும் உள்ள நகரத்தையும், ஒரு பக்கத்தில் பசுமையைப் போர்த்திக் கொண்டு கிடக்கும் மலையையும் காண்பது மனதுக்கு இதமளிக்கிறது.

நாங்கள் மாலை நேரத்தில் சென்றதால் கதிரவனின் ரம்மியத்தையும் கண்டு களிக்க முடிந்தது!

அங்கிருந்து கடோவிஸ் பயணமானோம்!

Poland Katowice

க்ரகோவிலிருந்து கடோவிஸ் ஒரு மணி நேரக் கார் பயணத் தூரம்தான். இந்த வீட்டில் ஏசியும் பொருத்தியிருந்தார்கள்.

ஐரோப்பாவில் கோடை காலம்தான் என்றாலும், இரவு நேரத் தூக்கத்திற்கு உகந்த சூழலே எங்கும் நிலவுகிறது! நம்மூர் போல அதீத வெப்பம் எங்குமேயில்லை.

சடோர் (Zator) என்ற இடத்திலுள்ள ‘எனர்ஜி லாண்டியா’ (Energy Landia) என்ற தீம் பார்க் சென்றோம். உண்மையில் உடலுக்குச் சக்தியைக் கொடுக்கும் விதமாகத்தான் இதனை அமைத்துள்ளார்கள்.

சிறிதும் பெரிதுமாக 200 க்கும் மேற்பட்ட ரைடுகளை அமைத்து, நம்மைப் பிரமிக்க வைக்கிறார்கள்.

நம்மூர் குடை ராட்டிணம் பல மாற்றங்களைப் பெற்று, பல வித ரைடுகளாக (Rides) மாறியுள்ளதைக் காண முடிந்தது. ரைடுகளை “ சவாரி” என்றும் அழைக்கலாம்.

மனிதர்களை மூன்றாகப் பிரித்துப் பார்த்தோமானால், அமைதியை விரும்பும் சாந்த சொரூபர்கள்; மிதவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் என்று கொள்ளலாம். (நான் குறிப்பிடும் தீவிர வாதிகளைப் பயங்கரவாதிகளாகப் பொருள் கொள்ளாதீர்கள். நல்லவற்றையே சாதிக்கத் தீவிரமாக உள்ளவர்களைத்தான் அவ்வாறு குறிப்பிடுகிறேன்.)

இந்த மூவகை மனிதர்களையும் ஈர்க்கும் விதமாகத்தான் ரைடுகளை அமைத்துள்ளார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

ரைடுகளிலும் மூவகை உண்டு. நிலம் சார்ந்தவை; நீருடன் தொடர்புடையவை; ஆகாயத்தில் வலம் வருபவை என்று.

பலவகை ராட்டினங்கள், சுற்றி வரும் கார்கள், சிறுவர் மற்றும் பெரியவர்களும் பயணம் செய்யக் கூடிய ரயில்கள் இவையெல்லாம் நிலம் சார்ந்தவை.

ஓடிக்கொண்டிருக்கும் நீரோடைகளில் மிதந்து செல்லும் படகுகள், மேலேயிருந்து நீரைச் சிதறடித்தபடி கீழிறங்கும் கம்பார்ட்மெண்டுகள் போன்றவை நீருடன் தொடர்புடையவை.

அதிவேகத்தில் பறக்கும் ரோலர் கோஸ்டர்கள் போன்றவை ஆகாயத்தில் வலம் வருபவை என்று கொள்ளலாம்.

சாந்தம் நிறைந்த அமைதியானவர்களை உற்சாகப்படுத்த நிலம் சார்ந்த, அதிக வேகமும் அலட்டலும் இல்லாத சவாரிகள் உதவுகின்றன.

மிதவாதிகளுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்த சற்றே வேகமும், ஓரளவு உயரமும் செல்லக் கூடிய சவாரிகளைக் குறிப்பிடலாம்.

தீவிரவாதிகளின் வேட்கைக்குத் தீனி போடும் விதமாக ரோலர் கோஸ்டர் போன்றவைகள் அதி வேகத்திலும், தொங்கிக் கொண்டும், தலைகீழாகவும் ஓடுகின்றன.

இந்த ரோலர் கோஸ்டர்களில் ஒரு வகை நம் வாழ்க்கைத் தத்துவத்தையும் போதிப்பதாகத் தெரிகிறது.

ஏனெனில், மேலே செல்கையில் மெதுவாகச் சென்று, கீழிறங்குகையில் அதிவேகமாகச் செயல்படுகிறது. மனித வாழ்க்கையும் இப்படித்தானே! உயர்வை அடையப் பல காலம் உழைக்க வேண்டியுள்ளது. வீழ்ச்சிக்கோ… சிறு நேரம்தானே!

வயநாட்டை முன்னேற்ற எவ்வளவு ஆண்டுகள் ஆகியிருக்கும்!எல்லாம் ஒரே இரவில் ஒன்றுமில்லாமல் போய் விட்டதல்லவா?

எனர்ஜி லேண்டியாவில் அரிசிச் சாதமும் கிடைக்கிறது. உலகின் எல்லா இடங்களிலும் பெரும் பங்கு வகிப்பவை சிக்கன், பாப் கார்ன் மற்றும் பஞ்சு மிட்டாய் (Cotton Candy). இவை இல்லாத நாடுகளே இருக்காது போலும்.

ஒரு நாள் முழுவதும் சுற்றினாலும், எல்லாச் சவாரிகளிலும் செல்ல நேரம் போதாது. அவரவர் தங்கள் விருப்பப்படி ரைடுகளைத் தேர்ந்தெடுத்து, மகிழ்ச்சி அடைகிறார்கள். எல்லா இடங்களிலும் நமது ஜியண்ட் வீல் (Giant Wheel) உண்டு. பெயரில்தான் மாற்றம்.

சிங்கப்பூரில் ப்ளையர்(Flyer) என்றும், இங்கு ஒண்டர் வீல் (Wonder Wheel) என்றும் அழைக்கப்படுகிறது.

பார்க்கின் முழு அளவையும் உயரத்திலிருந்து ரசிக்க, ஆரவாரம் இல்லாத இது அனைவருக்கும் பயன்படுகிறது.

அமெரிக்க, ஐக்கிய நாடுகளில் கோடையில் சூரியன் ஓ.டி(OT) பார்க்கிறார்.

இரவு ஒன்பதரை வரை Over Time. நாம் காரைப் பார்க் செய்யும் இடத்திலிருந்து பார்க்கின் நுழைவு வாயில் வரை உள்ள குறுகிய தூரத்துக்குக் கூட, ரயில் போன்ற அமைப்புள்ள கார்களில் நம்மை அழைத்து வருகிறார்கள்.

ஆங்காங்கே சிறு சிறு மேடைகளில் இசைக் கச்சேரி, டான்ஸ் என்று, பார்வையாளர்களையும் உடன் சேர்த்துக் கொண்டு உற்சாகப்படுத்துகிறார்கள்.

ஒரு முழு நாளை இதில் கழித்தோம்… சாரி… களித்தோம்!

அடுத்த நாள் காலை ஒரு பறவைகள் கண்காட்சி (Birds Exhibition) சென்றோம்.

கிளிகள் கண்காட்சி என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும். நம்மூரின் ஒரு பெரிய மாடி வீடு போன்ற, உள் முற்றம் கொண்ட வீடுதான். அதில் கிளிகளின் பல வகைகளையும் பார்வைக்கு வைத்துள்ளார்கள்.

வாசலிலேயே அவற்றுக்கான தானிய வகை உணவுகளையும் விற்கிறார்கள்.

விருப்பப்படுபவர்கள் சிறிய மரக் கிண்ணங்களில் உள்ள அவற்றை வாங்கி அந்தக் கிளிகளுக்கு அளிக்கலாம். அவற்றை மனிதர்களுடன் பழகவும் பழக்கி வைத்துள்ளார்கள். எங்கள் தோள்களில் வந்தமர்ந்த ஒன்றிரண்டு, நீண்ட நேரம் அகலவேயில்லை.

அவற்றின் கால்களுக்கடியில் நம் கைகளைக் கொண்டு சென்றால்,கைகளில் ஏறித் தோளுக்கு வந்துவிடுகின்றன. நாம் நடந்தாலும் அவை கூடவே வருகின்றன.

பெண்கள் தோடுகள், மூக்குத்திகள் அணிந்து சென்றால் அவற்றைக் கழற்றச் சொல்கிறார்கள். அல்லது அவற்றைக் கறுப்புத் துணியால் கவர் செய்து விடுகிறார்கள். இல்லையெனில் தானியம் என்று நினைத்து அவற்றைக் கொத்தி விடுமாம்.

ஓர் அரை நாளை அவற்றுடன் விளையாடிக் கழித்த பிறகு ‘ஃபன்சியம்’ (Funzeum) சென்றோம். ஒரு பெரிய மாலின் ஒரு பகுதியில் இது இயங்குகிறது.

உள்ளே சிறுவர்களை மகிழ்விக்கும் விதமாக நிறைய அரங்குகளைக் கற்பனை நயத்துடன் அமைத்துள்ளார்கள்.

Warsaw

எல்லா இடங்களையும் வண்ண விளக்குகளால் அலங்கரித்துள்ளார்கள். நுணுக்கமான பல அரங்குகள் பெரியவர்களையும் கவரத் தவறுவதில்லை.

உள்ளே நீண்ட நேரத்தைச் செலவிடும் விதத்தில் பலவும் உள்ளன.

நீண்ட கலைடாஸ் கோப், மூன்று, நான்கு உண்டு. அவற்றின் உள்ளே என்னென்ன மாதிரி பளிங்குக் கற்களைப் போட வேண்டுமென்பதைத் தெரிவு செய்யக் குழந்தைகளை அனுமதிக்கிறார்கள்.

அது போலவே பல கண்ணாடியிலான எந்திரங்களில்,ஓர் ஓரத்தில் பந்துகளைப் போட்டால் அவை காற்றின் வேகத்தால் பல நிலைகளைத்தாண்டி ஓடி வருவது குழந்தைகளுடன் பெரியவர்களையும் கவரும் விளையாட்டு.

அன்று முன்னிரவில் கடோவிசை விட்டு வார்சாவிற்குப் பயணமானோம்.

294 கி.மீ., தூரத்தை 3 மணி நேரத்தில் கடக்க முடிந்தது.

நல்ல சாலைகளும், விதிகளை மீறாத ஓட்டுநர்களுமே இதற்குக் காரணமென்று தோன்றுகிறது!

வார்சாதான் போலந்தின் தலை நகர். உயர்ந்த கட்டிடங்களும், அதிகமாக ஓடும் ட்ராம்களும் நம்மை வரவேற்கின்றன.

ஐரோப்பாவின் பல நகரங்களிலும் இன்னும் டிராம்களும், வெஸ்டிப்யூல் பஸ்களும், ரயில்களும் சேர்ந்து, போக்குவரத்தை எளிமையாக்குகின்றன. நம்மூரில் பல்லாண்டுகளுக்கு முன்பாகவே ட்ராம்களுக்கு விடை கொடுத்து விட்டோம்!

நகரின் முக்கியச் சாலைகளில் உயர்ந்த கட்டிடங்களும், அருகிலேயே உயரம் குறைந்தவை இருந்தாலும், முக்கிய வீதிகளிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் நான்கு மாடி என்றால் அனைத்துக் கட்டிடங்களும் அதே உயரத்திலேயே உள்ளன. தெருக்களுக்கு அதுவே ஒரு தனியழகைக் கொடுத்து விடுகிறது!

இப்பொழுது வீட்டுக் கதவுகளைத் திறக்க அருகிலுள்ள செல் போன்ற அமைப்பில் எண்களைப் போட்டே திறக்கிறார்கள்.

அதேபோன்று இருட்டி விட்டால் விளக்குகள் தானாக எரிவதையும், சில சந்துகளில் நாம் நுழைந்தாலே விளக்கு எரிவதையுமெல்லாம் பல இடங்களிலும் காண முடிகிறது.

ஹாலில் இருக்கும் ஒரே மின் விளக்கைப் பல வண்ணங்களில் எரிய விடுவதும், அதனையே ஒளியைக் குன்றச் செய்து நைட் லாம்ப்பாகப் பயன்படுத்துவதெல்லாம் இங்கு சர்வ சாதாரணமாகி விட்டது.

’பவர் கட்’ டும் எங்கும் ஏற்படுவதில்லை.

வார்சா அரண்மனையை அழகாகப் பராமரிக்கிறார்கள். விசுத்துலா ஆற்றின் கரையில் சாலையையொட்டிக் கம்பீரமாகக் காட்சி தருகிறது அது.

சாலைக்குச் சற்று மேலே அழகிய புல் வெளி! அதில் பவுண்டன்களும், இருபுறமும் உட்கார அழகிய பெஞ்சுகளும் உள்ளன.

சரிவுப் பாதையில் மேலேறிச் சென்றால் அரண்மனையின் முகப்பு. அரண்மனையையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் ‘ஓல்ட் டவுன்’ என்று அழைக்கிறார்கள்.

ஓல்ட் டவுனைச் சுற்றிச் சுவர்களையும் எழுப்பி இருக்கிறார்கள். கட்டிட அமைப்பிலேயே ஓல்டுக்கும், நியூவுக்கும் வித்தியாசம் தெரிகிறது.

உள்ளே உள்ள சாலைகளைக் கருங்கற்களால் போட்டு, பராமரிப்பை எளிதாக்கியுள்ளார்கள். பல தெருக்கள் உள்ளே உள்ளன. பழைய, பெரிய வீடுகளின் அடித்தளங்களில் கடைகளும், ரெஸ்டாரண்டுகளும் செயல்படுகின்றன.

அடுத்த நாள் அங்குள்ள ‘கோப்பர்நிகஸ் சயின்ஸ் சென்டர்’ சென்றோம். கூட்ட நெரிசலைத் தடுக்கும் விதமாக, குறிப்பிட்ட நேரத்தில் குறித்த எண்ணிக்கையினரை மட்டுமே அனுமதிக்கிறார்கள். உள்ளே சென்றால் நிறைய நிகழ்ச்சிகளைக் காணலாம்.

சிறுவர்களுக்கும், ஏன்? பெரியவர்களுக்கும்கூட விஞ்ஞானத்தை எளிதாக விளக்குகிறார்கள்.

அதனை முடித்துக் கொண்டு சுமார் 400 கி.மீட்டருக்கு அப்பாலுள்ள ஜிடன்ஸ்க் நகருக்குப் பயணமானோம்.

ஜிடன்ஸ்க் நகரில் தங்கி, இரண்டு மூன்று ‘பீச்’களுக்குச் சென்றோம். ஒரு பீச்சின் அருகிலுள்ள ‘அக்கரியம் (Aquarium) சென்றோம்.

அப்பப்பா! மீன்களில்தான் எத்தனை வகைகள்!எத்தனையெத்தனை வண்ணங்கள் மற்றும் டிசைன்கள்!

ஆண்டவன், தான் சந்தோஷமாக இருந்த நேரத்தில் மலர்கள், வண்ணத்துப் பூச்சிகள், மீன்கள் இவற்றைப் படைத்திருக்க வேண்டும். இவற்றின் வண்ணங்களும், வகைகளும் நம்மையெல்லாம் ஆச்சரியப்படுத்துகின்றன.

நம்மூரிலும் எல்லாம் உள்ளன. சுற்றுலாத் தலங்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தால் வெளிநாட்டுப் பயணியரும் அதிக அளவில் வருவர். அரசின் வருமானமும், வேலை வாய்ப்பும் பெருகும்.

அரசின் சட்ட திட்டங்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வை நீக்கும் விதமாக அமைய வேண்டும். பொருளாதாரப் பற்றாக்குறை இருக்கும் மக்களால் சுற்றுலாவைப் பற்றி நினைக்கக்கூட முடியாதே!

அத்தோடு, நம் மக்களும் எப்பொழுதும் பணத்தைச் சேமிப்பதிலேயே குறியாக இல்லாமல், மனதிற்கு இதமளிக்கும் சுற்றுலாக்களுக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி, குடும்பத்தினருடன் ஊர், உலகைச் சுற்றி வந்து உற்சாகம் பெற மனது வைக்க வேண்டும்!

- பெருமழை விஜய்,

கூடுவாஞ்சேரி

My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா' கட்டுரை

டூர்

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.

இந்த மாதத்திற்கான தலைப்பு - `சுற்றுலா'. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.

வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.   

பரிசுத்தொகை விவரம்:

  • முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)

  • இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)

  • நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)

நினைவில் கொள்க: 

  • நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 20, 2025

  • ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.

  • உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்

  • விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்

  • உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது. 

  • கட்டுரையின் தரத்தின்  அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Travel Contest: "நீங்க தமிழ்நாடா?" - தெற்கு கர்நாடகா கோயில் தரிசன சுற்றுலா அனுபவம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Travel: சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் சிவப்பு கடற்கரை - ஏன் நிச்சயம் பார்க்க வேண்டும் தெரியுமா?

பலரின் விருப்பமான சுற்றுலா இடம் என்றால் அது கடற்கரை தான். அலை ஓசையிலும் ஒரு விதமான அமைதியை இங்கு அனுபவிக்க முடியும். 30 நிமிடங்கள் மட்டும் தோன்றும் கடற்கரை, கருப்பு மணலை கொண்ட கடற்கரைகள் என பல தனித்து... மேலும் பார்க்க

இங்க மட்டும் எப்படி கடல் இவ்ளோ சுத்தமா இருக்கு? லட்சத்தீவு ஆச்சரியம் | Travel Contest

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

சுற்றுலாவில் நான் சந்தித்த மனித தெய்வங்கள்! | Travel Contest

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Travel Contest: யூடியூப் Vlogs-ஐ பார்த்து சுற்றுலா செல்ல முடியவில்லை என வருந்த வேண்டாம்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Travel Contest: 'ஒரு கருப்பு முட்டை சாப்பிட்டா 7 வருட ஆயுள் கூடுமா?' - அதிசயமான ஜப்பான் எரிமலை பயணம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க