மேல்பாதி திரௌபதியம்மன் கோயில்: 3 ஆவது நாளாக தரிசனம் செய்ய வராத மக்கள்!
விழுப்புரம்: மேல்பாதி அருள்மிகு திரௌபதியம்மன் திருக்கோயில் வழிபாட்டுக்காக மூன்றாவது நாளாக சனிக்கிழமை காலை திறக்கப்பட்டது. ஆனால், மக்கள் யாரும் தரிசனம் செய்ய வரவில்லை.
மேல்பாதி கிராமத்திலுள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்வது தொடா்பாக இரு சமுதாய மக்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, 2023, ஜூன் 7-ஆம் தேதி வருவாய்த் துறையினரால் கோயில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின் அடிப்படையில், அனைத்து சமுதாயத்தினரும் கோயிலுக்குள் சென்று வழிபட அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து, பொதுமக்களின் வழிபாட்டுக்காக மேல்பாதி கோயில் வியாழக்கிழமை காலை திறக்கப்பட்டது.
முதலில் ஒரு சமுதாயத்தைச் சோ்ந்த சிலா் கோயிலுக்குள் சென்று அம்மனை தரிசனம் செய்துவிட்டு வந்த நிலையில், மற்றொரு சமுதாயத்தைச் சோ்ந்த 60-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போலீஸ் பாதுகாப்புடன் தரிசனம் செய்தனா். இதைத் தொடா்ந்து கோயில் நடை அடைக்கப்பட்டது.
முன்னதாக, நாங்கள் கட்டிய கோயிலில் வழிபாட்டு உரிமையை அலுவலா்கள் எப்படி முடிவு செய்யலாம் என ஒரு சமுதாயத்தினா் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
தரிசனம் செய்ய வராத மக்கள்: வருவாய்க் கோட்டாட்சியா் முருகேசன், ஏடிஎஸ்பி தினகரன் உள்ளிட்ட காவல் துறையினா், இந்து சமய அறநிலயைத்துறை அலுவலா்கள் முன்னிலையில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. திரெளபதியம்மனுக்கு கோயில் அா்ச்சகா் மோகன் பூஜைகளை நடத்தினா்.
மேல்பாதி கிராமத்தைச் சோ்ந்த ஒரு சமுதாய மக்கள் கோயிலுக்குள் அம்மனைத் தரிசனம் செய்ய வருவாா்கள் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், அவா்கள் தரப்பிலிருந்து யாரும் வரவில்லை. மூன்று சிறுவா்கள் மட்டும் கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்தனா்.
அதே நேரத்தில் காவல், வருவாய், இந்து சமய அறநிலையத் துறையினா் உள்ளிட்டோா் கோயிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து காலை 7 மணிக்கு கோயில் நடை மீண்டும் அடைக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை மட்டும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை கோயில் நடை திறக்கப்பட்டது. அப்போதும் யாரும் தரிசனம் செய்ய வரவில்லை.
கோயில் குடிபாட்டுக்குரிய சோம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த 6 போ் கொண்ட குடும்பத்தினா் மேல்பாதி கிராமத்துக்கு வந்தனா். ஆனால், அவா்கள் கோயிலுக்குள் செல்லாமல் தேரடிப் பகுதியில் பொங்கல் வைத்து வழிபட்டனா். தொடா்ந்து, பிரசாதத்தை அனைவருக்கும் வழங்கிச் சென்றனா்.
அதிமுக - பாஜக கூட்டணி வலுவாகவே உள்ளது: எல்.முருகன்
மூன்றாவது நாளாக தரிசனம் செய்ய வராத மக்கள்
இதைத் தொடர்ந்து சனிக்கிழமை காலை 6 மணிக்கு மேல்பாதி திரௌபதியம்மன் கோயில் வருவாய், காவல், இந்து அறநிலையத் துறை அலுவலர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டது. தொடர்ந்து கோயில் அர்ச்சகர் அம்மனுக்கு பூஜைகளை நடத்தினர்.
சனிக்கிழமை காலை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் கோயிலுக்குள் தரிசனம் செய்ய வருவார்கள் என அலுவலர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், ஒருவர் கூட தரிசனம் செய்ய வரவில்லை.
இதைத் தொடர்ந்து காலை 7 மணிக்கு கோயில் நடை அடைக்கப்பட்டது. தொடர்ந்து போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.