பர்சனல் லோன் வாங்குவதற்கும் சிக்கல்.. ஆர்பிஐ கொண்டுவந்த விதிமுறை
ஏற்கனவே, ஏழைகள் மட்டுமே அதிகம் பெறும் நகைக் கடனுக்கு புதிய விதி என்ற பெயரில் ஆர்பிஐ ஆப்பு வைத்துவிட்ட நிலையில், அடுத்து தனிநபர் கடன் எனப்படும் பர்சனல் லோன் வாங்குவதற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனை சிக்கல் என்றும் சொல்லலாம், பர்சனல் லோன் எடுத்து சிக்காமல் தப்பிப்பதற்கான வழி என்றும் சொல்லலாம்.
அதாவது, ஆர்பிஐ கொண்டு வந்திருக்கும் விதிமுறையின்படி, நிதி நிறுவனங்கள், ஒரு தனி நபரின் நிதி நிலையை அறியும் சிபில் ஸ்கோரை ஒரு மாதத்துக்கு ஒரு முறை அல்லாமல், 15 நாள்களுக்கு ஒரு முறை அப்டேட் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இதனால் என்னவாகும்?
ஒருவர் மாதத் தொடக்கத்தில் சிபில் ஸ்கோர் வைத்து கடன் வாங்கிவிட்டு, அடுத்த ஒரு சில வாரத்திலேயே, அதே சிபில் ஸ்கோருடன் மற்றொரு பர்சனல் லோன் வாங்குவதை இந்த முறை தடை செய்கிறது.
அது மட்டுமல்ல, ஒரு மாதத்தின் தொடக்கத்தில் சிபில் ஸ்கோர் எடுக்கப்படுகிறது. அடுத்து 30 நாள்களுக்குப் பிறகுதான் சிபில் ஸ்கோர் எடுக்கப்படும் என்றால், அந்த 30 நாள்களுக்குள் ஒருவர் இஎம்ஐ எனப்படும் மாதத் தவணையை செலுத்தத் தவறியிருந்தால், அடுத்த சிபில் ஸ்கோர் வருவதற்குள் மற்றொரு கடனைப் பெற்றுவிடுவதற்கும் வாய்ப்பு உருவாகிவிடும்.
ஒருவர் மாதத் தவணையை கட்டத் தவறிவிட்டார் என்பது சிபில் ஸ்கோரில் பதிவாக 40 நாள்கள் ஆகும். எனவே, அதற்குள் அவர் கடன்களைப் பெற்றுவிடாமல் தடுக்கும் வகையில் 15 நாள்களுக்கு ஒரு முறை சிபில் ஸ்கோர் அப்டேட் செய்யப்பட வேண்டும், அதைக்கொண்டே கடன் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல, வங்கியில் தொழில்நுட்பக் கோளாறு போன்றவற்றால் தவணை செலுத்துவதில் பிரச்னை ஏற்பட்டு சிபில் ஸ்கோரில் எதிரொலித்தாலும் பிரச்னைதான்.
ஒரே நேரத்தில் இரண்டு கடன்களையும் இதனால் பெற இயலாது. ஒருவர், தன்னால் திருப்பி செலுத்தும் தகுதியுடைய தொகையைக் காட்டிலும் அதிகக் கடனை வாங்கிவிடும் அபாயமும் இதனால் தடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே கடன் தவணை திருப்பிச் செலுத்தப்படாமல் விட்டதை மறைத்து ஒருவர் புதிய கடனை பெற்றுக் கொள்வதிலிருந்தும், ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பர்சனல் லோன்களைப் பெறுவதிலிருந்தும் தடுத்து, நிதி நிறுவனங்களைக் காப்பாற்ற உதவுகிறது.
அது மட்டுமல்லாமல், சில நிதி நிறுவனங்கள், மாதத் தவணையை தன்னிச்சியைக மாற்றியமைப்பது, தவணைக் காலத்தை திருத்துவது போன்றவற்றில் ஈடுபடாமல் தடுக்கும் விதிமுறையும் உருவாக்கப்பட்டுள்ளது. கடன் பெற்றவரின் ஒப்புதலைப் பெற்றே, இந்த மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும், இடையில், இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்பதைத் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கேஎஃப்எஸ் பற்றி தெரியுமா?
கேஒய்சி என்பது கோல, கடன் வழங்கும் நிதி நிறுவனம் வழங்கும் முழு விவர ஆவணம்தான் கேஎஃப்எஸ். அந்த கேஎஃப்எஸ் ஆவணத்தை, கடன் வாங்கும் ஒவ்வொருவரும் நிச்சயமாக பெற்று முழுமையாகப் படித்த பிறகே கடன் பெற ஒப்புதல் அளிக்க வேண்டும்.
இந்த கேஎஃப்எஸ் கடன் பெறும் தாகை, வட்டி விகிதம், திரும்ப செலுத்துவதற்கான கால அவகாசம், கட்டண விவரங்கள், திரும்ப செலுத்தும் தொகை என அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும்.
இந்த கேஎஃப்எஸ் ஆவணமானது வெளிப்படைத்தன்மையுடன் உருவாக்கப்பட்டிருந்தால் கடன் பெறுபவருக்கு மிகுந்த நன்மையளிக்கும்.