இந்திய அரசுக்குத் தலைவலியாகும் மஸ்க்கின் குரோக் ஏஐ!
எக்ஸ் நிறுவனத்தின் குரோக் ஏஐ (Grok AI) பிரதமர் மோடிக்கு எதிராக வெளியிடும் கருத்துகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது.
25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தகவலைப் பெற வேண்டும் என்றால் பல்வேறு புத்தகங்களை ஆராய வேண்டும், பலரிடம் கேட்டறிய வேண்டும். அதன்பிறகு, கூகுள் போன்ற தேடுபொறிகள் (சர்ச் என்ஜின் - Search Engine) பயன்பாட்டுக்கு வந்த நிலையில், நாம் கேட்கும் தகவலுக்கான பதில்கள் மிக எளிதாகவும் விரிவாகவும் கிடைக்கத் தொடங்கின.
தற்போது தொழில்நுட்பத்தின் பரிணாமமான செய்யறிவு (ஆர்ட்டிஃபிசியல் இன்டலிஜென்ஸ் - Artificial Intelligence) மற்றும் அதன் ச்சாட் பாட்கள் (Chat Bots) திகைக்கவைக்கும் அசுர வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
கடந்த ஓரிரு ஆண்டுகளில் பிரபலமாகியுள்ள சேட் ஜிபிடி, கூகுள் ஜெமினி, மெட்டா ஏஐ, டீப் சீக் போன்ற செயற்கை நுண்ணறிவு செயலிகளில் ஒரு தலைப்பை மட்டும் கொடுத்தால்போதும், நமக்கு தேவையான அனைத்து தகவலையும் கொடுத்துவிடுகிறது.
பயனர்கள் கேட்கும் கேள்விகளை ஆராய்ந்து, அந்த கேள்வியைப் பிரித்து, அதற்கான சரியான விடைகளைச் சேகரித்து, அதனை பயனர்கள் புரிந்துகொள்ளும் வகையில் மாற்றியமைத்து பதிலை அளிப்பதுதான் செய்யறிவின் பணி. இவை அனைத்தையும் நொடிப் பொழுதில் வழங்குகிறது.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்கள், பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் செய்யறிவை நம்பியிருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மாணவர்களுக்கு வீட்டுப் பாடமாக அளிக்கப்படும் கணக்குகள், ஒரு தலைப்பின் கீழ் கட்டுரை எழுதுதல் என சிந்திக்கும் திறனை வளர்ப்பதற்கான அனைத்துக்கும் செய்யறிவு தளங்கள் அழகாகவும் ஓரளவு தெளிவாகவும் பதிலைக் கொடுத்துவிடுகின்றன.
இந்தப் புதிய பழக்கத்துக்கு அடிமையாகிப் பல அலுவலகங்களில் மின்னஞ்சல் அனுப்புவது முதல் ஜாவா (Java), டாட் நெட் (Dot Net) என ப்ரோகிராமிங் வரை செய்யறிவை ஊழியர்கள் நம்பத் தொடங்கிவிட்டனர்.
இதனிடையே, ’தாய் எட்டடி பாய்ந்தால் பிள்ளை பதினாறடி பாயும்’ என்ற பழமொழியைப் போல், ஊழியர்கள் செய்யறிவைப் பயன்படுத்தி தகவலைப் பெற்றார்களா? என்பதை கண்டறிய முதலாளிகளுக்கு உதவும் வகையில் அதனைக் கண்டுபிடிப்பதற்கான செயலிகளும் (ஏஐ டிடெக்டர் போன்ற) வந்துவிட்டன என்பது வேறு கதை.
வரவேற்பைப் பெற்ற குரோக்!
கடந்த ஒரு மாதமாக பயனர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது அமெரிக்கத் தொழிலதிபரும் அதிபர் டிரம்ப்பின் நண்பருமான எலான் மஸ்க்கின் ’குரோக் 3’ ஏஐ (Grok 3 AI).
2023 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட குரோக் ஏஐ செயலியின் அப்டேட் வெர்சன்தான் குரோக் 3. கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட இந்த செயலியானது வெறும் தகவலை மட்டும் தருவதோடு நின்றுவிடாமல், நாம் எழுத்து வடிவத்தில் அளிப்பதை விடியோவாக அளிப்பதால் பயனர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
மேலும், எக்ஸ் தளத்தில் கேள்வியைப் பதிவிட்டு @Grok என்று டேக் செய்தால் அதற்கான பதிலை நொடியில் வழங்குகிறது குரோக். எக்ஸ் செயலியின் இடதுபுற மெனு பாரில் குரோக் விருப்பமும் இடம்பெற்றுள்ளது.
உலகம் முழுவதும் 60 கோடி பேர் எக்ஸ் (டிவிட்டர்) தளத்தை பயன்படுத்தி வருவதால், எளிதில் பயனர்களை சென்றடைந்துள்ளது குரோக் ஏஐ.
கொலோசஸ் சூப்பர் கம்ப்யூட்டர் மூலம் 100,000 Nvidia H100 GPU சர்வரில் இயங்குவதால் எவ்வளவு சிரமமான கேள்விகளுக்கும், பல்வேறு தரவுகளை ஆராய்ந்து அதற்கான பதில்களை அதிகபட்சமாக 5 வினாடியில் கொடுப்பதால், குரோக் 3 ஏஐ-க்கான வரவேற்பு அதிகரித்துள்ளது.
தலைவலியாக மாறிய குரோக்!
மாணவர்களின் பாடத்திட்டங்கள், தொழில்நுட்பம் குறித்த கேள்விகளுக்கு பதிலளிப்பதோடு நின்றுவிடாமல், அரசியல் ரீதியிலான சர்ச்சைக் கேள்விகளுக்கும் ’குரோக் 3’ பதிலளிப்பதால் அரசியல் பிரமுகர்களுக்கு தலைவலியாக மாறியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் குறித்த சர்ச்சைக் கேள்விகளைக் கேட்டு, அதற்கு குரோக் அளிக்கும் பதிலையும் பயனர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.
எடுத்துக்காட்டாக பயனர்களின் சில கேள்விகளும் குரோக்கின் பதிலும்..
2025 டாஸ்மாக் ஊழலில் ஸ்டாலினுக்கு எவ்வளவு பங்கு?
பதில்: முதல்வர் ஸ்டாலினுக்கு நேரடி தொடர்பு இல்லை என்றும் இருப்பினும் அமலாக்கத்துறை இடைத்தரகர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்வதாகவும் பதிலளிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் அரசைவிட அதிக ஊழலை செய்யும் மோடி அரசு மீண்டும் ஆட்சிக்கு எப்படி வந்தது? ஏழைகளின் பணத்தை அதானி, அம்பானி போன்ற தனது நண்பர்களுக்கு மோடி எப்படி வழங்கினார்?
பதில்: வலுவான ஊடகக் கட்டுப்பாடு மற்றும் அரசியல் செல்வாக்கு காரணமாக பாஜகவின் ஊழல் பெரும்பாலும் மறைக்கப்படுகிறது. விமான நிலையம், துறைமுகங்கள் போன்ற ஒப்பந்தங்கள் மூலம் அதானி, அம்பானிக்கு உதவுகிறார்” என்று பதிலளித்துள்ளது.

மோடியின் நேர்காணல்களில் முன்பே திட்டமிடப்பட்ட கேள்விகள் கேட்கப்படுகிறதா?
பதில்: மோடியின் நேர்காணல்கள் பெரும்பாலும் முன்பே திட்டமிடப்பட்டதாகத்தான் தெரிகிறது. அவரது பதில்கள் மெருகூட்டப்பட்டவையாக இருக்கிறது. குறைவான தருணங்களிலேயே பதில் கேள்வியைவிட்டு விலகிச் செல்லும் வகையில் அமைகிறது. சமூக ஊடகங்களில் தனக்கான பிம்பத்தை கட்டமைக்கும் விளம்பர யுக்திகளை மோடி பின்பற்றுகிறார்.

எக்ஸ் தளத்தில் கடந்த சில நாள்களாக பிரதமர் மோடி மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்களைப் பற்றிய இதுபோன்ற கேள்விகளும் பதில்களும் உலவி வருகின்றன.
அதிகாரப்பூர்வ பதில்களைத் தாண்டி, சமூக ஊடகங்கள், செய்திகள், நேர்காணல்கள் எனப் பல்வேறு தரவுகளை ஆராய்ந்து குரோக் ஏஐ பதிலளிப்பதால் அதன் உண்மைத்தன்மை குறித்த கேள்வியை மத்திய அரசு எழுப்பியுள்ளது.
மேலும், இதுபோன்ற அதிகாரப்பூர்வமற்ற பதில்களை குரோக் ஏஐ வெளியிடுவது குறித்து மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எக்ஸ் நிறுவனத்திடம் அறிக்கை கேட்டுள்ளதாக பிடிஐ நிறுவனத்திடம் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இந்திய பயனர்களுக்கு நேற்று முதல் உனது பல பதில்கள் ஏன் தெரியவில்லை என்று ஒருவர் குரோக்கிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு பதிலளித்த குரோக், “எக்ஸில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு அல்லது அரசின் தணிக்கை காரணமாக எனது பதில்கள் பயனர்களுக்கு காட்டப்படாமல் இருக்கலாம். குறிப்பாக பாஜக, ரஃபேல் போன்ற அரசியல் ரீதியிலான பதில்கள் காட்டப்படாமல் இருக்கலாம். இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் உள்ள விதிமுறைகள் காரணமாக பதில்கள் மறைக்கப்பட்டிருக்கலாம்” என்று பதிலளித்துள்ளது.

இந்த நிலையில், கருத்து சுதந்திரத்துக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாகவும் தணிக்கை விதிமுறைகளை மீறி குரோக் ஏஐ வெளியிடும் கருத்துகளை ம்யூட் செய்வதாகவும் எக்ஸ் நிறுவனம் தரப்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வியாழக்கிழமை வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுபோன்று, பிரதமருக்கு எதிரான கருத்துகள் மற்ற செய்யறிவு நிறுவனம் வெளியிட்டிருந்தால் பேச்சே இன்றி தடை செய்யப்பட்டிருக்கும். குரோக், மஸ்க்கின் நிறுவனம் என்பதால் மத்திய அரசு செய்வதறியாது கேள்விக்கான பதிலை எதிர்நோக்கி காத்திருக்கிறது.