மகாராஷ்டிரம் 2047-க்குள் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்கும்: அஜித் பவார்
தங்கம் கடத்தல் நடிகை ரன்யா ராவுக்கு வலை விரித்தது எப்படி? பரபரப்பான பின்னணித் தகவல்கள்!
தங்கம் கடத்தலில் ஈடுபட்ட கன்னட நடிகை ரன்யா ராவுக்கு வருவாய் குற்றப்பிரிவு அதிகாரிகள் வலைவிரித்தது குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
கர்நாடகத்தைச் சேர்ந்த கன்னட நடிகையும் மூத்த காவல்துறை அதிகாரியின் மகளுமான ஹர்ஷவர்தினி ராவ் என்ற ரன்யா ராவ் (33), உடைக்குள் தங்கக் கட்டிகளை மறைத்துவைத்து துபையில் இருந்து கடத்தியதற்காக மாா்ச் 3-ஆம் தேதி பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
ரன்யா ராவிடம் இருந்து ரூ.12.56 கோடி மதிப்புள்ள 14.2 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள், சுங்கச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மார்ச் 4 ஆம் தேதி பெங்களூருவில் உள்ள பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரன்யா, தங்கக் கட்டிகளை கடத்திவந்ததை ஒப்புக்கொண்ட நிலையில், மார்ச் 18 வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, ரன்யாவின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ. 17.29 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் ரொக்கம், ரூ. 4.73 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் ரன்யா ராவிடம் விசாரணை மேற்கொள்வதற்காக வருவாய் புலனாய்வு அதிகாரிகள் 3 நாள்கள் ரன்யா ராவை காவலில் எடுத்துள்ளனர்.
ரன்யா ராவ் பிடிபட்டது எப்படி?
கடந்த மார்ச் 3ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் துபையில் இருந்து பெங்களூரு சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த எமிரேட்ஸ் விமானத்தில் ரன்யா ராவ் வருகைதந்தார். அவரை காவலர் பசவராஜ் என்பவர், விஐபிக்கள் வெளியேறும் வழியில் அழைத்துச் சென்றபோது, வருவாய் புலனாய்வு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டார்.
ரன்யா தனது தொடைப் பகுதிகளில் தலா ஒரு கிலோ மதிப்புள்ள 14 தங்கக் கட்டிகளை மறைத்து வைத்து கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவரை கைது செய்தனர்.
கடந்த ஓராண்டில் மட்டும் துபை மற்றும் பிற நாடுகளுக்கு 25 முறை ரன்யா பயணம் மேற்கொண்டுள்ளார். இவற்றில் பெரும்பாலானவை குறுகிய கால பயணங்களாக இருந்ததால் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளின் கண்காணிப்பில் கீழ் வைத்திருந்தனர்.
கைது செய்யப்படுவதற்கு முன்னதாக, 15 நாள்களில் 4 முறை துபைக்கு சென்றுவந்ததால், அவரின் பயணத்துக்கு ஏற்பாடும் செய்யும் முகவர்கள், துபையில் அவர் தங்கும் ஹோட்டல் உள்ளிட்டவை ஆராயப்பட்டது.
நடிகை என்பதாலும் காவல்துறை அதிகாரியின் மகள் என்பதாலும் ஒவ்வொரு முறையும் விமான நிலையத்தில் இருந்து காவலரின் உதவியுடன் விஐபி வழித்தடத்தில் சென்றுவந்துள்ளார் ரன்யா.
விஐபி வழித்தடத்தில் பயன்படுத்தப்படுவதால் எவ்வித சோதனையும் இன்றி சுதந்திரமாக தங்கத்தைக் கடத்த முயன்றதால், உளவுத்துறை கண்காணிப்பில் சிக்க மாட்டோம் என்ற நம்பிக்கையில் அடுத்தடுத்த பயணங்களை ரன்யா மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், சந்தேகத்தின் பேரில் ரன்யாவிடம் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் தங்கக் கடத்தல் விவகாரம் வெளிவுலகத்துக்கு வந்துள்ளது.
துபை சர்வதேச விமான நிலையத்தில் கடுமையான சோதனைகளுக்கு மத்தியில் உடைக்குள் தங்கத்தை மறைத்து எப்படி கடத்தினார்? இந்த கடத்தலில் அதிகாரிகளுக்கு பங்கு உண்டா? சர்வதேச கும்பலுடன் தொடர்புண்டா? அல்லது கர்நாடக அதிகாரியின் மகள் என்பதால் இவரை பயன்படுத்தி கடத்தல் கும்பல் செயல்பட்டதா? என்ற கோணத்தில் ரன்யாவிடம் தீவிர விசாரணையை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை 45 நாடுகளுக்கு ரன்யா பயணம் மேற்கொண்டுள்ளதால், ஒவ்வொரு முறையும் தங்கக் கடத்தலில் ஈடுபட்டாரா என்பது குறித்தும் விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : லலித் மோடியின் வானுவாட்டு பாஸ்போர்ட் ரத்து! இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா?
ரன்யாவுக்கு 12 ஏக்கர் அரசு நிலம் ஒதுக்கீடு
கைது செய்யப்பட்டுள்ள ரன்யா ராவுக்கு சொந்தமான நிறுவனத்துக்கு 12 ஏக்கர் அரசு நிலத்தை கர்நாடக தொழில்துறை மேம்பாட்டு வாரியம் ஒதுக்கீடு செய்த விவகாரம் வெளிவந்துள்ளது.
இதுதொடர்பாக, கர்நாடக தொழில்துறை அமைச்சர் எம்பி பாட்டீல் வெளியிட்ட அறிக்கையில், ரன்யா ராவுக்கு நிலம் ஒதுக்கப்பட்ட செய்தி உண்மைதான் என்றும், முந்தைய பாஜக ஆட்சியில்தான் ஒதுக்கப்பட்டது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
தும்குரு மாவட்டத்தில் உள்ள சிரா தொழில்துறை பகுதியில், ரன்யா ராவின் நிறுவனமான க்சிரோடா இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு 12 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 2022 தொடங்கப்பட்ட க்சிரோடா நிறுவனம், ஸ்டீல் தொழிற்சாலை அமைப்பதற்காக அரசிடம் நிலம் கோரியுள்ளது. இந்த நிலையில், நிறுவனம் தொடங்கப்பட்ட 9 மாதங்களில் பசவராஜ் தலைமையிலான கர்நாடக அரசு நிலத்தை வழங்கியுள்ளது.
ஜனவரி 2023-ல் நடைபெற்ற கர்நாடக தொழில்துறை மேம்பாட்டு வாரிய கூட்டத்தில் நிலம் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
வருவாய் புலனாய்வு இயக்குநரகம் நடத்தி வரும் விசாரணையின் ஒரு பகுதியாக, ரன்யா நிறுவனத்தின் பங்குகள், வருவாய் மற்றும் வங்கிக் கணக்குகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
யார் இந்த ரன்யா ராவ்?
கர்நாடக மாநிலம் சிக்மகளூரைச் சோ்ந்த நடிகை ரன்யா ராவ் (33), கா்நாடக காவல் துறையில் மூத்த ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வரும் டிஜிபி கே.ராமசந்திர ராவின் வளா்ப்பு மகள். ராமசந்திர ராவின் இரண்டாவது மனைவிக்கும் அவரது முதல் கணவரான ரியஸ் எஸ்டேட் தொழிலதிபர் கே.எஸ்.ஹெக்தேஷுக்கும் பிறந்தவா்தான் ரன்யா ராவ்.
பெங்களூரு, தயானந்தசாகா் கல்லூரியில் இளநிலை பொறியியல் பட்டப்படிப்பை முடித்த ரன்யா ராவ், துபையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
2014-இல் நடிகா் சுதீப்புடன் ‘மாணிக்யா’, ‘பட்டாக்கி’ ஆகிய 2 கன்னடப் படங்களிலும், 2016-இல் நடிகா் விக்ரம் பிரபுவுடன் ‘வாகா’ என்ற தமிழ்ப் படத்திலும் நடித்துள்ளார்.
கட்டடக் கலைஞர் ஜதின் ஹுக்கேரி என்பவரை கடந்தாண்டு நவம்பர் மாதம்தான் ரன்யா ராவ் திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.