செய்திகள் :

சர்ச்சையான ஒரு பேரழகியின் தற்கொலை!

post image

தென் கொரியாவைச் சேர்ந்த பேரழகியின் தற்கொலை உலகையே உலுக்கிப் போட்டிருக்கிறது. பெரும் புகழ்பெற்ற நடிகையான இவருடைய தற்கொலைக்குக் காரணமென ஊடகங்களும் யூடியூபர்களும் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றனர்.

தென் கொரியாவின் புகழ்பெற்ற இளம் நடிகைகளில் ஒருவர் கிம் சே – ரான், வெறும் 24 வயதுதான். கடந்த (பிப்.) 16 ஆம் தேதி தன்னுடைய இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டார் கிம். மாலையில் அவரைச் சந்திப்பதாக இருந்த நண்பர் ஒருவர் தொலைபேசியில் அழைத்து எடுக்காததைத் தொடர்ந்து, இவருடைய மரணம் வெளியே தெரிய வந்தது. காவல்துறையினர் விரைந்து,  தற்கொலைதான்; வேறு சந்தேகிக்கும்படியான சூழல் ஏதுமில்லை என்று உறுதிப்படுத்தியுள்ளனர்.

தென் கொரியாவில் கொண்டாடப்படுகிற - புகழ்பெற்ற புள்ளிகள் எல்லாம் வாய்ப்புக் கிடைக்கும்போது, ஊடகங்களால் எந்த அளவுக்கு மோசமாக சித்திரிக்கப்படுகிறார்கள்; பண்பாட்டுரீதியாக எவ்வாறு விழுந்து பிராண்டப்படுகிறார்கள் என்பது இவருடைய மரணத்தின் மூலம் மீண்டும் ஒரு முறை வெளிப்பட்டிருக்கிறது.

2000 ஆம் ஆண்டில் பிறந்தவரான கிம் சே ரான், முதன்முதலில், ஒன்பது வயதில் குழந்தை நட்சத்திரமாக, ஏ பிராண்ட் நியூ லைப் படத்தின் மூலம் நடிக்க வந்தவர்; தந்தையால் ஆதரவற்றோர் விடுதியில் விட்டுச் செல்லப்பட்ட ஒரு பெண் குழந்தை, புதிய வாழ்க்கைக்குத் தன்னை எவ்வாறு தயார் செய்துகொள்கிறாள் என்பதைச் சித்திரிக்கும் திரைப்படம் இது.

த மேன் ப்ரம் நோவேர் என்ற திரைப்படத்தின் மூலம் நட்சத்திர தகுதியைப் பெற்றார் கிம். வெளியான ஆண்டில் கொரியாவில் மாபெரும் வெற்றியைப் பெற்ற இந்தப் படத்துக்காக எட்டாவது கொரியத் திரைப்பட விழாவில் சிறந்த புதுமுக நடிகை விருது பெற்றார் கிம். கேன்ஸ் திரைப்பட விழாவில் இவருடைய ஏ பிராண்ட் நியூ லைப் சிறப்புத் திரையிடலுக்கு அழைக்கப்பட்டதன் மூலம் விழாவில் பங்கேற்ற குறைந்த வயது நடிகை என்ற பெருமையைப் பெற்றவர்.

கிம் சே ரானின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுத் தற்கொலை வரை அவரைத் துரத்திய அந்தக் கொடுமையான சம்பவம், இரு ஆண்டுகளுக்கு முன், 2022 மே மாதம் 18 ஆம் தேதிதான் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, அவருடைய எல்லாவித நடவடிக்கைகளும் முடங்கிப் போய்விட்டன.

கிம் சே ரான்

சியோல் நகரின் தென் பகுதியில் மது அருந்திவிட்டு கிம் ஓட்டிச் சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவர் மீது மோதியதுடன் ஒரு மரத்தின் மீதும் தொடர்ந்து ஒரு மின்மாற்றியின் மீதும் மோதி விபத்துக்குள்ளானது.

இதற்காக, தானே கையால் எழுதிய மன்னிப்புக் கடிதத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட கிம், வழக்கின் முடிவில் நீதிமன்றத்தில் 1.39 லட்சம் டாலர் தண்டமும் செலுத்தினார். அல்லாமல் இந்த விபத்துக்குப் பிறகு மின்சாரம் துண்டிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட சுமார் 60 கடைகளுக்குத் தனிப்பட்ட முறையில் இழப்பீட்டையும் கிம் வழங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

கிம் சே ரான் கைப்பட எழுதிய கடிதம்

கிம்மின் மன்னிப்புக் கடிதம்

வணக்கம். இது சே-ரோன் கிம்.

முதலில் விபத்து மற்றும் சேதத்தின் நிலையைச் சுருக்கமாகக் கூறி, பின்னர் என் நிலைப்பாட்டை உங்களுக்குத் தெரிவிப்பதில் தாமதமானதற்கு நான் மன்னிப்புக்  கேட்கிறேன்.

நேற்று, மே 18 ஆம் தேதி, காலை 8 மணியளவில், கங்கனம் என்ற இடத்தில் நான் விபத்துக்குள்ளானேன், அங்கு நான் பொது சொத்துளைச் சேதப்படுத்தினேன். அப்போது நான் குடித்துவிட்டு பெரிய தவறு செய்தேன்.

எனது தவறான கணிப்பு மற்றும் செயல்களால், அருகிலுள்ள வணிக வளாகங்களில் உள்ள வணிகர்கள், மக்கள் மற்றும் மறுசீரமைப்பில் ஈடுபட்டவர்கள் உள்பட பலருக்கு நான் பாதிப்பை ஏற்படுத்தினேன். நான் இன்னும் கவனமாகவும் பொறுப்புடனும் செயல்பட்டிருக்க வேண்டும், ஆனால் நாங்கள் செய்யவில்லை. நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தற்போது இந்த  நிறுவனங்களுடன் விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளைத் தீர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம், மேலும் இறுதி வரை தொடர்புகொண்டு சிக்கலைத் தீவிரமாகத் தீர்க்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.

படப்பிடிப்பு மற்றும் ஆயத்த வேலைகளின் தயாரிப்புக்கு இடையூறு விளைவித்ததற்காக எனது சக நடிகர்கள், ஊழியர்கள் மற்றும் தயாரிப்பு குழுவிற்கும் நான் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவிக்கிறேன். மீண்டும் ஒருமுறை, ஏதேனும் சிரமத்திற்கு ஆழ்ந்த மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த விரும்பத்தகாத சம்பவத்திற்கு மன்னிப்பு மட்டும் இல்லை, நான் செய்த தவறுக்காக நான் ஏமாற்றமும் வெட்கமும் அடைகிறேன். நான் ஆழ்ந்து சிந்தித்து, மீண்டும் இதுபோன்று நடக்காமல் இருக்க மீண்டும் சிந்திப்பேன். மன்னிக்கவும் (கொரிய மொழியிலிருந்து கூகுள் உதவியுடனான பெயர்ப்பு).

ஒருகாலத்தில் புகழின் உச்சியில் இருந்த கிம் சே ரானுக்கு இந்த சம்பவத்துக்குப் பிறகு நடிக்கும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. விபத்துக்கு முன்பு வரை பல்வேறு திரைப்படங்களிலும் எண்ணற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தோன்றியவர் கிம் சே ரான்.

கிம் சே ரான்

தென் கொரியாவில் புகழ் பெற்றவர்கள் எவரேனும் தப்பித் தவறி ஏதேனும் தவறிழைக்க நேரிட்டால், பெண்கள் என்றால் இன்னும் சற்று அதிகம், அந்த சம்பவத்தைப் பயன்படுத்தி குறிப்பிட்ட நபர்களுக்கு எதிராகக் கடும் விமர்சனங்களை, தூற்றல்களைத் தொடர்ச்சியாக ஊடகங்கள், சமூக ஊடகங்கள் பரப்புகின்றன.

நண்பர்களுடன் எங்காவது சென்றிருக்கும் செய்திகள், புகைப்படங்கள் வெளிவரும்போது, தன் பிரச்சினைகள் பற்றி சமூக ஊடகங்களில் கிம் ஏதேனும் தெரிவிக்கும்போது அவற்றையும் குறை கூறியும், கிண்டலடித்தும் செய்தித்தாள்களும் இணைய தளங்களும் கருத்துச் சொல்லிவந்தன.

கடந்த ஆண்டு ஒரு படத்துக்காக அவர் மெலிதாகச் சிரித்ததைக்கூட நக்கலடித்தன இவை.

விபத்தைத் தொடர்ந்து, பல வகையிலும் இவரை இலக்காகக் கொண்டு, தங்கள் விற்பனையை உயர்த்திக் கொள்வதற்காக, ஊடகங்கள் தாக்குதல்களைத் தொடர்ந்தன. தனிப்பட்ட முறையிலான அவருடைய வாழ்க்கை நிகழ்வுகளில்கூட பங்கேற்க முடியாத அளவுக்கு ஊடக நெருக்கடி தரப்பட்டிருக்கிறது.

இத்தகைய பாதகமான சூழ்நிலையைக் கருத்தில்கொண்டோ என்னவோ, 2023-ல் வெளியான ஒரு ஓடிடி தொடரில் கிம் நடித்த பகுதிகளில் பெரும்பாலானவற்றை சம்பந்தப்பட்டவர்கள் வெட்டிக் குறைத்துவிட்டிருக்கின்றனர். சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலிருந்து வெளியேறவும் அவர் நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார்.

மீண்டும் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கும் முயற்சியாக, ஒரு காபி ஷாப்பில் பணியைத் தொடங்கியபோதும், அவருடைய பணக் கஷ்டத்தை சும்மா அவர் பெரிதுபடுத்துகிறார் என்று இந்த ஊடகர்கள் விமர்சித்தனர்.

கிம் சே ரான்

கிம்மின் மரணத்தைத் தொடர்ந்து, தலையங்கங்கள், கட்டுரைகளை வெளியிட்ட தென் கொரியாவின் முதன்மையான செய்தித்தாள்கள், இணையத்தில் கிம் தொடர்பாக கூறப்பட்ட, எழுதப்பட்ட விஷமத்தனமான கருத்துகளைக் கண்டித்துள்ளன.

பிரபலங்களுக்கு எதிராக ஊடகங்களிடையே நிலவும் சகிப்புத் தன்மையின்மை  மாற்றிக்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என்றும் இவை சுட்டிக்காட்டியுள்ளன.

கிம் வாழ்ந்த காலத்தில் அவரை சர்ச்சைக்குரியவராக சித்திரித்துவந்த சில ஊடகங்கள் அவர் மறைவுக்குப் பிறகும்கூட, வாசகர்களை ஈர்ப்பதாகக் கருதி, கன்னாபின்னாவெனத் தலைப்புகள் இட்ட செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

விபத்து நடந்த 2022 மே மாதத்திலிருந்து அவருடைய தற்கொலை வரைக்கும் சுமார் 1,000 நாள்களில் தென் கொரியாவிலுள்ள முக்கிய செய்தி நிறுவனங்கள், கிம் சே ரான் பற்றி ஏறத்தாழ 2,000 செய்திக் கட்டுரைகளை வெளியிட்டிருக்கின்றன. பெரும்பாலும் பரபரப்பான தலைப்புகளுடன்தான் என்றால் தாக்குதலின் வீச்சை எளிதில் உணர்ந்து முடியும்.

மது அருந்திய நிலையில் கார் ஓட்டியதில் தொடங்கிய இவை, அவருடைய பிரச்சினைகளை அவர் பேசினால்கூட கேலி செய்தன. நாடகங்களின் வழியே முயன்ற அவருடைய மறுபிரவேசத்தையும் குலைத்தன.

தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி வெளிவரும் செய்திகளில் – செய்திக் கட்டுரைகளில் பெரும்பாலானவை உண்மையல்ல; ஆனால், அவர்களைப் பற்றி எதுவும் சொல்வதற்கே அச்சமாக இருக்கிறது என்று ஒரு முறை குறிப்பிட்டிருக்கிறார் கிம் சே ரான்.

ஆனால், தற்போது கிம் சே ரானின் மரணத்தைத் தொடர்ந்து, பரபரப்பான செய்திகளை வெளியிடுவதன் மூலம் மக்கள் கவனத்தைக் கவர முனையும் ஊடகங்கள் மற்றும் இணைய தளங்களுக்கு எதிரான மனநிலை மக்களிடையே உருவாகியிருக்கிறது.

கிம் சே ரான்

தென் கொரியாவில் இவ்வாறு ஊடக விசாரணைகள், விவாதங்கள், அவதூறான கருத்துப் பரப்பல், சில சம்பவங்களின் தொடர்ச்சியாக ஒருவரை முற்றிலுமாக நிலைகுலையச் செய்வது, எல்லாவற்றிலும் தலையிட்டு, கருத்துச் சொல்லி, தனிப்பட்ட வாழ்க்கையே இல்லாமலாக்குவது, அவர்களை பெரும் மன நெருக்கடிக்குள்ளாக்குவது போன்றவற்றால் தற்கொலை செய்துகொண்ட பிரபலங்களின் பட்டியலில் இப்போது கிம்மும் இடம் பெற்றிருக்கிறார். ஏற்கெனவே, 2008-ல் திரைப்பட நடிகர் சாய் ஜின்-ஸில், 2017-ல் பாடகர் கிம் ஜோங் யுன் 2019-ல் கொரிய பாப் பாடகர்கள் சியோல்-லி, கூ ஹரா ஆகியோரும் 2023-ல் பாராசைட் பட நடிகர் லீ சன் க்யூனும் இவ்வாறே தற்கொலை செய்துகொண்டனர்.

இந்த மாதிரியாக எதிர்மறையான விமர்சனங்களால் பெரிதும் பாதிக்கப்படும் பிரபலங்கள், குறிப்பாகப் பெண்கள், இவற்றை எதிர்கொள்ள மிகவும் சிரமப்படுகின்றனர். எதிர்மறைச் செய்திகளால் மன நெருக்கடிக்குள்ளாகும் இவர்கள் மனநலப் பிரச்சினைகளுக்காக யாரையும் அணுகுவதுமில்லை.

‘இணையதளங்களின் மூலம் வசை பாடுவது சிலருக்குப் பணம் சம்பாதிக்கும் கருவியாகிவிட்டது’ என்று குறிப்பிட்டுள்ள கிம்மின் தந்தை கிம் ஹெர்ன்-சிக், ‘யூடியூபர்களுக்கு வியூஸ் கிடைத்துவிடும், குறிப்பிட்ட இணைய தளங்களை நிறைய பேர் பார்வையிடுவார்கள், நிறைய பார்வையாளர்கள் வருவார்கள். கிம்மின் மரணத்தால் நிலைமை மாறும் எனத் தோன்றவில்லை’ என்றும் தெரிவித்துள்ளார்.

கிம்மின் தற்கொலைக்குக் காரணமாக யூடியூபர் ஒருவரைக் குறிப்பிட்ட ஹெர்ன்-சிக், அவர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய விடியோக்களால் கிம் சே ரான் பெரும் மன அழுத்தத்துக்கு ஆளானார் என்று குறிப்பிட்டுள்ளார். இவற்றில் வந்து தரக்குறைவான கருத்துகளைத் தெரிவிப்பவர்களையும் தண்டிக்க வேண்டும் என்றார் அவர்.

கிம் சே ரான்

தென் கொரிய சமுதாயமே ஒட்டுமொத்தமாக பிரமாண்டமான (பரபரப்பான ஓடிடி தொடரான) ‘ஸ்க்விட் கேம்’ மாதிரியாகிவிட்டது. தவறிழைப்பவர்கள் அல்லது தடுமாறி விழுவோர் மீண்டெழுவதற்கு இன்னொரு வாய்ப்புத் தராமல் இரக்கமேயில்லாமல் அகற்றப்படுகிறார்கள். பிரபலங்கள் எப்போதுமே தவறு எதுவுமே செய்யாதவர்களாக இருக்க அல்லது நடிக்க வேண்டிய நெருக்குதலுக்குள் தள்ளப்படுகின்றனர் என்று யேல் பல்கலைக்கழக மனநலப் பேராசிரியர் பீட்டர் ஜோங்கோ நா குறிப்பிடுகிறார்.

சக்திவாய்ந்த நிறுவனங்கள் அல்லது அரசியல்வாதிகள் என்றால் அவர்களால் சட்டப்படியோ அல்லது பொருளாதார ரீதியிலோ எதிர்வினையாற்ற முடியும். ஆனால், விளையாட்டு வீரர்களும் பிரபலங்களும் எளிதில், தாராளமாகத் தாக்கப்படுகின்றனர். இவர்கள் எளிதான இலக்குகளாகிவிடுகின்றனர். இவர்களின்  சின்னச் சின்ன தவறுகளைக்கூட கருணையில்லாமல் ஊதிப் பெருக்கிவிடுகின்றனர் என்று சோகாங் பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியர் சாங்சின் ச்சுன் குறிப்பிடுகிறார்.

உலகம் முழுவதும் இப்போது தென் கொரிய திரைப் படங்கள் – தொடர்களுக்குப் பெரும் வரவேற்பு இருக்கின்றன. பொழுதுபோக்குப் படங்கள் மட்டுமின்றி, அனைத்து வகைப் படங்களுடன் தலைசிறந்த கலைப் படங்களும்கூட கொரிய மொழியில் வெளிவருகின்றன.

கிம் சே ரான்

உலகில் தென் கொரிய மக்கள்தொகையைப் போல நான்கு மடங்கு, சுமார் 22 கோடி ரசிகர்கள், கொரிய திரைத் துறைக்கு இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. வளர்ந்த நாடுகளில் தற்கொலை விகிதங்கள் மிக அதிக அளவுள்ள நாடுகளில் ஒன்று தென் கொரியா. ஒட்டுமொத்தமாகப் பார்க்க, தற்போது தற்கொலைகள் குறைந்திருந்தாலும் 20 வயதுகளில் தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை வழக்கத்தைவிடவும் அதிகரித்திருக்கிறது.

புகழ் பெற்ற இளம் நடிகையும் நம்பிக்கை நட்சத்திரமுமான கிம் சே ரானின் மரணத்துக்குப் பிறகேனும் விசாரணை ஊடகங்களின் இந்தப் போக்கு மாற வேண்டும் என்று தென் கொரியா மட்டுமல்ல, உலகம் முழுவதுமுள்ள ரசிகர்களும் எதிர்பார்க்கின்றனர்.

[செய்தி நிறுவனத் தகவல்களுடன்]

பெண்கள் தலை வழுக்கையாக கோதுமை காரணமா?

மகாராஷ்டிரத்தின் புல்தானா மாவட்டத்தில் உள்ள சில கிராம மக்களுக்கு திடீரென முழுவதுமாக தலைமுடி உதிர்ந்து வழுக்கையான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்... மேலும் பார்க்க

வண்டி ஓட்டும்போது ஹெல்மெட் அணிபவரா?

நாடு முழுவதும், சாலை விபத்துகளின்போது மூளையில் காயத்துடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோர் இருசக்கர வாகன ஓட்டிகள் என்று வேலூரில் இயங்கி வரும் சிஎம்சி மருத்துவமனை நடத்திய ஆய்வில்... மேலும் பார்க்க

விரைவில் குத்தம்பாக்கம் பேருந்து முனையம்! மூடப்படுகிறதா பூவிருந்தமல்லி பேருந்து நிலையம்?

சென்னையில் ஊரகப் பகுதிகளுடனான இணைப்பை மேம்படுத்த பூந்தமல்லி பேருந்து மையம் குத்தம்பாக்கத்திற்கு மாற்றப்படவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.சென்னையின் உள்பகுதிகளில் ஏற்படும் வாகன நெரிசலைத் தவிா்க்கவ... மேலும் பார்க்க

தமிழகம் கொண்டாடும் சோசலிச பிதாமகன் ஆச்சார்ய நரேந்திர தேவ்!

ஒழுக்கத்தின் சிகரம். அந்தக் காலத்து தேசியத் தலைவர்களில் மிகவும் உன்னதமான இடம் வகித்த இந்தியாவின் தலைசிறந்த தலைவர் என்று ஜெயப்பிரகாஷ் நாராயணால் பாராட்டப்பட்டவர்...உணரச்சி, பண்பு, அறிவு, மனித முதிர்ச்சி... மேலும் பார்க்க

வாக்காளர் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்வது எப்படி? தரவுகளும் சந்தேகமும்!

மக்களவைத் தேர்தலுக்கும் சில மாநிலங்களில் நடைபெற்ற பேரவைத் தேர்தல்களுக்கும் இடைப்பட்ட சில மாதங்களில் லட்சக்கணக்கான புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டது குறித்து எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தை கேள்வி எழ... மேலும் பார்க்க

டேட்டா திட்டத்துக்கு ஆப்பு! மக்களை ஏமாற்றுகிறதா ஜியோ, ஏர்டெல்?

மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வந்த டேட்டா திட்டங்களை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் மாற்றி அமைத்துள்ளன.டேட்டா திட்டங்களுக்கான விலையை மாற்றாமல் நாள்களைக் குறைத்திருப்பதால் பலரும்... மேலும் பார்க்க