செய்திகள் :

டேட்டா திட்டத்துக்கு ஆப்பு! மக்களை ஏமாற்றுகிறதா ஜியோ, ஏர்டெல்?

post image

மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வந்த டேட்டா திட்டங்களை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் மாற்றி அமைத்துள்ளன.

டேட்டா திட்டங்களுக்கான விலையை மாற்றாமல் நாள்களைக் குறைத்திருப்பதால் பலரும் பழைய பிளான் என நினைத்து ரீசார்ஜ் செய்து ஏமாற்றம் அடைந்துகொண்டிருக்கின்றனர்.

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) டெலிகாம் நிறுவனங்களின் ரீசார்ஜ் திட்டங்களில் வாய்ஸ் கால்களுக்கு (குரல்வழி அழைப்புகளுக்கு) மட்டுமான திட்டங்களை மீண்டும் அறிமுகப்படுத்த கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது.

இதற்காக தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளில் சில திருத்தங்களையும் மேற்கொண்டது.

இதனைத் தொடர்ந்து, ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள், டேட்டா இல்லாமல் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் வசதிக்கு மட்டுமான புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்தன.

ஆனால், புதிய திட்டம் என்ற பெயரில், டேட்டா மற்றும் வாய்ஸ் கால்களுக்கு ஏற்கெனவே வசூலிக்கப்பட்ட தொகையில் இருந்து மிகச் சிறிய தொகையை மட்டுமே குறைத்துக்கொண்டு, டேட்டாவை முற்றிலுமாக ரத்து செய்துவிட்டன தொலைத்தொடர்பு நிறுவனங்கள்.

எடுத்துக்காட்டாக, ஜியோ நிறுவனம் 84 நாள்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால், 6 ஜிபி டேட்டா மற்றும் 1,000 எஸ்எம்எஸ் அடங்கிய திட்டத்துக்கு இதுவரை ரூ. 479 வசூலித்தது. தற்போது, 84 நாள்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் 1,000 எஸ்எம்எஸ்களுக்கு ரூ. 458 வசூலிக்கிறது. வெறும் ரூ. 21 மட்டும் குறைத்துவிட்டு 6 ஜிபி டேட்டாவைப் பறித்துவிட்டனர்.

ஏர்டெல் மற்றும் விஐ தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இதே நடைமுறையையே பின்பற்றுகின்றன.

இதையும் படிக்க : திருநர் சமூகத்தில் நம்பிக்கை உண்டாக்கிய காதல்!

டேட்டாவுக்கு ஆப்பு!

இந்த நிலையில், கூடுதல் டேட்டா திட்டங்களான ரூ. 19-க்கு ஒரு ஜிபி, ரூ. 29-க்கு 2 ஜிபி, ரூ. 69-க்கு 6 ஜிபி ஆகியவற்றிலும் சப்தமில்லாமல் மாற்றங்களைச் செய்துள்ளனர். முன்பு டேட்டா தீர்ந்ததும், கூடுதல் டேட்டா ரீசார்ஜ் செய்தால், மெயின் பிளான் முடியும் வரை அந்த கூடுதல் டேட்டாவை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

ஆனால் தற்போது, ரூ. 69 டேட்டா திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் 7 நாள்களுக்குள் அதன் வேலிடிட்டி முடிந்துவிடும். அதேவேளையில், ரூ.175 டேட்டா திட்டத்துக்கு மட்டுமே 28 நாள்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.

எனவே, வெறும் வாய்ஸ் கால்களுக்குக் குறைந்த அந்தத் தொகையை இங்கே சரிக்கட்ட அல்லது குறைந்த தொகைக்கு இரண்டு மடங்காக வருவாய் ஈட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பக்காவாகப் பிளான் செய்து, நமக்கு புதிய பிளான்கள் என்று அறிமுகப்படுத்தியிருக்கின்றன.

இதில் கொடுமை என்னவென்றால், ரூ.19, ரூ. 29 டேட்டா திட்டங்களுக்கு எல்லாம் ஒரு நாள், இரு நாள்கள் வேலிடிட்டி மட்டும்தான். இது தெரியாமல் ரீசார்ஜ் செய்தவர்கள் தலை காய வேண்டியதுதான்.

இன்னமும் பலரும் இது பற்றி அறியாமல்தான் கூடுதல் டேட்டா திட்டங்களை ரீசார்ஜ் செய்து வருகிறார்கள்.

ஜியோ

ஏர்டெலின் புதிய திட்டங்கள்

ஏர்டெல்

மறைமுகத் திணிப்பு

நகரத்தில் வாழும் பெரும்பாலான பயனர்கள், அலுவலகத்திலும் வீட்டிலும் வைஃபை உபயோகிப்பார்கள். மேலும் பலர் யூடியூப், முகநூல் போன்றவை உபயோகிக்காமல், வாட்ஸ்ஆப் போன்ற அடிப்படை விஷயங்களை மட்டுமே பயன்படுத்துபவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் அனைவரும் 28 அல்லது 84 நாள்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் 2 ஜிபி அல்லது 6 ஜிபி டேட்டா திட்டங்களை ரீசார்ஜ் செய்வார்கள்.

ஒருவேளை டேட்டா முடிவடைந்தால், ஒரு ஜிபி, இரண்டு ஜிபி என்று அவர்களின் தேவைக்கேற்ப ரீசார்ஜ் செய்து பயனடைந்து வந்தார்கள்.

ஆனால், தற்போது ஜியோவில் வாய்ஸ் ஒன்லி திட்டமான ரூ. 448 (84 நாள்கள் வேலிடிட்டி) ரீசார்ஜ் செய்தால் தனியாக டேட்டா போட வேண்டும். இதனுடன் டேட்டா வேண்டும் என்றால், 28 நாள்களுக்கு ரூ. 175 டேட்டா (10 ஜிபி) என்ற டேட்டா திட்டத்தை மூன்று முறை ரீசார்ஜ் செய்தால் ரூ. 525. தனித்தனியாக ரீசார்ஜ் செய்தால் 84 நாள்களுக்கு வாய்ஸ் மற்றும் டேட்டா உபயோகிக்க மொத்தம் ரூ. 973 செலவாகும்.

இந்த நிலையில், 28 நாள்களுக்கு வாய்ஸ் மற்றும் 28 ஜிபி டேட்டா திட்டமான ரூ. 249-ஐ ரீசார்ஜ் செய்யும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். 84 நாள்கள் என்றால் ரூ. 747 செலவாகும்.

ஏர்டெல், விஐ தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இதே உத்தியைப் பின்பற்றுகிறார்கள்.

வாய்ஸ் கால் மற்றும் டேட்டாவுக்கு பிரத்யேகமான திட்டங்களை டிராய் அறிமுகம் செய்யச் சொன்னது யாருக்காக?

மக்கள் பயன் பெற வேண்டும் என்பதற்காகவா? அல்லது தொலைத்தொடர்பு நிறுவனங்களின் லாபத்துக்கா? இந்தப் புதிய அறிவிப்பு - திட்டங்களால் 'உள்ளதும் போச்சுடா' என்று நொந்துகொள்ளும் நிலையே ஏற்பட்டிருக்கிறது.

அதிருப்தியிலுள்ள பயனாளர்களின் குரல் அழைப்புகள் சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு எட்டுமா? அல்லது அவையும் 'நாட் ரீச்சபிள்'தானா?

தமிழகம் கொண்டாடும் சோசலிச பிதாமகன் ஆச்சார்ய நரேந்திர தேவ்!

ஒழுக்கத்தின் சிகரம். அந்தக் காலத்து தேசியத் தலைவர்களில் மிகவும் உன்னதமான இடம் வகித்த இந்தியாவின் தலைசிறந்த தலைவர் என்று ஜெயப்பிரகாஷ் நாராயணால் பாராட்டப்பட்டவர்...உணரச்சி, பண்பு, அறிவு, மனித முதிர்ச்சி... மேலும் பார்க்க

வாக்காளர் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்வது எப்படி? தரவுகளும் சந்தேகமும்!

மக்களவைத் தேர்தலுக்கும் சில மாநிலங்களில் நடைபெற்ற பேரவைத் தேர்தல்களுக்கும் இடைப்பட்ட சில மாதங்களில் லட்சக்கணக்கான புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டது குறித்து எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தை கேள்வி எழ... மேலும் பார்க்க

நிறைவேறுமா டிரம்ப்பின் காஸா கனவுத் திட்டம்?

‘காஸா முனையை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். பாலஸ்தீனா்களையெல்லாம் ஜோா்டான், எகிப்து போன்ற நாடுகளுக்கு வெளியேற்றிவிட்டு, அந்தப் பகுதியை மத்தியக் கிழக்குப் பிராந்தியத்தின் ரிவியேர... மேலும் பார்க்க

புற்றுநோய்... தொடக்கத்தில் வைப்போம் முற்றுப்புள்ளி

உலகளாவிய அளவில் பெரும் சவாலாக விளங்கக் கூடிய நோய்களில் புற்றுநோய் அதிமுக்கியமானது. அண்மைக்காலமாக அதன் பாதிப்பு வீதம் பெருமளவு அதிகரித்து வருவதற்கு சா்வதேச தரவுகளே சாட்சியங்களான விளங்குகின்றன. போதிய வி... மேலும் பார்க்க