-26 டிகிரி குளிர், பலத்த காற்று வீச்சுகளுக்கிடையே கோல் அடித்த மெஸ்ஸி..! 2025இன் ...
வாக்காளர் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்வது எப்படி? தரவுகளும் சந்தேகமும்!
மக்களவைத் தேர்தலுக்கும் சில மாநிலங்களில் நடைபெற்ற பேரவைத் தேர்தல்களுக்கும் இடைப்பட்ட சில மாதங்களில் லட்சக்கணக்கான புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டது குறித்து எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தை கேள்வி எழுப்பியுள்ளன.
18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்தாண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை நடைபெற்றது. இந்த தேர்தலில் இருமுறை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருந்த பாரதிய ஜனதா கட்சியால் மீண்டும் தனிப்பெரும்பான்மை பெறமுடியவில்லை. இதனைத் தொடர்ந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளான தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளத்தின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.
இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் - அக்டோபர் மாதம் ஹரியாணா மற்றும் ஜம்மு - காஷ்மீருக்கு நடைபெற்ற பேரவைத் தேர்தல்களுடன் மகாராஷ்டிரம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கும் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், 2 மாதங்கள் தாமதமாக நவம்பர் மாதம் இந்த இரண்டு மாநிலங்களுக்கும் தனியாகத் தேர்தல் நடத்தப்பட்டது. தாமதமாக தேர்தல் அறிவிக்கப்பட்டபோதே ஆணையத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்தன.
இதனிடையே, மக்களவைத் தேர்தல் நிறைவடைந்து அடுத்த மூன்று, நான்கு மாதங்களில் 4 மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றன. இந்த குறைந்த இடைவெளியில் வாக்காளர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்திருப்பது குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளன.
ஹரியாணா, ஜம்மு - காஷ்மீர்
ஹரியாணாவைப் பொறுத்தவரை மக்களவை தேர்தலில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2.01 கோடியாக இருந்த நிலையில், பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக 3 மாத இடைவெளியில் புதிதாக 1.12 லட்சம் வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். இந்த தேர்தல் முடிவுக்கு முன்னதாக வெளியான கருத்துக் கணிப்பில் இழுப்பறி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பாஜக அமோக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு - காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. ஒரு கோடிக்கும் குறைவான வாக்காளர்களை கொண்ட ஜம்மு - காஷ்மீரிலும் இடைப்பட்ட காலத்தில் புதிதாக 64,356 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிர தேர்தல்
மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெறாததற்கு மகாராஷ்டிரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காதது முக்கிய காரணம். மொத்தமுள்ள 48 தொகுதிகளில் 30 இடங்களில் மகா விகாஸ் அகாடி (காங்கிரஸ், சிவசேனை உத்தவ் அணி, தேசியவாத காங்கிரஸ் பவார் அணி கூட்டணி) வெற்றி பெற்று பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
இதனால், பேரவைத் தேர்தலில் மகா விகாஸ் அகாடி ஆட்சியைக் கைப்பற்றும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், மக்களவைத் தேர்தல் முடிந்த நான்கு மாதங்களில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் நிலைமை தலைகீழாக மாறியது. வரலாற்று வெற்றியை பதிவு செய்த மகாயுதி (பாஜக, சிவசேனை ஷிண்டே அணி, தேசியவாத காங்கிரஸ் அஜித் அணி) ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.
இந்த நிலையில், மகாராஷ்டிர தேர்தலில் வாக்காளர்கள் பட்டியல், வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக தேர்தல் ஆணையத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் எழுப்பினர்.
சில நாள்களுக்கு முன்பு, மகா விகாஸ் அகாடி கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வாக்காளர்கள் பட்டியலில் உள்ள முரண்பாடுகள் குறித்து எழுப்பிய கேள்விகள் புயலைக் கிளப்பியுள்ளன.
குறிப்பாக, “மகாராஷ்டிரத்தில் வாக்களிக்க தகுதியுடைய 18 வயது நிரம்பியவர்களின் மக்கள்தொகை 9.54 கோடியாகும், ஆனால், வாக்காளர்கள் எண்ணிக்கை 9.7 கோடியாக உள்ளது. 2019 பேரவைத் தேர்தலிலுக்கும் 2024 மக்களவைத் தேர்தலுக்கும் இடையிலான 5 ஆண்டுகளில் 32 லட்சம் புதிய வாக்காளர்கள் மட்டுமே சேர்க்கப்பட்ட நிலையில், மக்களவைத் தேர்தலுக்கு பிறகு 5 மாதங்களில் 39 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டது எப்படி? புதிதாக சேர்க்கப்பட்ட 39 லட்சம் வாக்காளர்களின் பெயர்ப் பட்டியலை முழுமையாக தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.

தில்லி தேர்தல்
பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற்ற தில்லி பேரவைத் தேர்தலில் 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக. ஆம் ஆத்மியின் 15 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
இந்த தேர்தலிலும் மற்ற மாநிலங்களைப் போன்று வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
மக்களவைத் தேர்தலின்போது 1,52,14,638 வாக்காளர்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பேரவைத் தேர்தலின்போது மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 1,55,37,634 எனத் தெரிவிக்கப்பட்டது. 7 மாதங்களில் கூடுதலாக 3,22,996 வாக்காளர்கள் தரவுகளின்படி சேர்க்கப்பட்டுள்ளனர்.
தேர்தலுக்கு முன்னதாகவே வாக்காளர் பட்டியலை மாற்ற பாஜக முயற்சிப்பதாக தெரிவித்த கேஜரிவால், தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரை கடுமையாக விமர்சித்திருந்தார்.
“ராஜீவ் குமார் இந்த மாத கடைசியில் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார். அதன்பின், அவருக்கு என்ன பதவி தரவிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை; ஆனால் அவர் நம் நாட்டை அடமானம் வைக்க தயாராகி விட்டார்.
தேசத்தின் ஜனநாயகத்தை அழிப்பதற்கு ஒத்துழைத்தால் உங்களுக்கு மத்திய அரசிடமிருந்து என்ன பதவி கிடைக்கப் போகிறது? ஆளுநர் பதவியா? அல்லது குடியரசுத் தலைவர் பதவியா?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த விமர்சனத்துக்கு பதிலளிக்கும் விதமாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ”தில்லி தேர்தலை மையமாக வைத்து 3 பேர் கொண்ட ஆணையம் மீது அவதூறு பரப்பும் விதத்தில் தொடர்ச்சியாக விமர்சனங்கள் சுமத்தப்படுவதை உற்று நோக்கி வருகிறோம்.
தனிநபர் ஆணையமான இது, இத்தகைய அவதூறு விமர்சனங்களால் திசை மாறாமல், அரசமைப்பு வரம்புக்கு கட்டுப்பட்டு செயலாற்றி வருகிறது” என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையும் படிக்க : தில்லியில் நிலநடுக்கம்.. திடீரென பூமி குலுங்கினால் என்ன செய்ய வேண்டும்?
ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் லட்சக்கணக்கான புதிய வாக்காளர்கள் இணைவது வழக்கம் என்ற வாதத்தை தேர்தல் ஆணையம் தரப்பில் முன்வைக்கலாம். ஆனால் மக்களவைத் தேர்தலில்போது புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்ட நிலையில், அடுத்த மூன்று, நான்கு மாதங்களில் மீண்டும் லட்சக்கணக்கான புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டது எப்படி என்பதே எதிர்க்கட்சிகளின் பிரதான கேள்வி.
புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களின் முழு விவரங்களையும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைப்படி தயக்கமின்றி வெளியிட்டால் மட்டுமே தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை நிலைக்கும்!