`சமூக வலைதளம் முழுக்க இரயில் பரிதாபங்கள் வீடியோக்கள்... Sadist அரசு!' - ஸ்டாலின்...
தமிழகம் கொண்டாடும் சோசலிச பிதாமகன் ஆச்சார்ய நரேந்திர தேவ்!
ஒழுக்கத்தின் சிகரம். அந்தக் காலத்து தேசியத் தலைவர்களில் மிகவும் உன்னதமான இடம் வகித்த இந்தியாவின் தலைசிறந்த தலைவர் என்று ஜெயப்பிரகாஷ் நாராயணால் பாராட்டப்பட்டவர்...
உணரச்சி, பண்பு, அறிவு, மனித முதிர்ச்சி முதலான அனைத்திலும் நான் கண்ட பெரியோர்கள் அனைவரிலும் மாறுபட்டவர்; அவர் மட்டும் சிறையில் உடன் இல்லாமல் இருந்திருந்தால் டிஸ்கவரி ஆப் இந்தியா நூலையே எழுதியிருக்க மாட்டேன் என்று ஜவாஹர்லால் நேருவால் புகழப்பட்டவர்...
ஆச்சார்ய நரேந்திர தேவ்!
1889 அக், 30 ஆம் தேதி பிறந்தவர். பத்து வயதில் தன்னுடைய தாயுடன் லக்னௌ காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டவர். காசி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பட்டத்துடன் நாட்டுப் பணிக்காகச் சட்டம் பயின்று வழக்கறிஞரானார். ஆனால், 1921 ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தின்போது தொழிலை உதறித் தள்ளினார்.
முழு நேர அரசியலில் நுழைந்து போராட்டங்களில் ஈடுபட்ட அவர், 1920, 1930, 1932, 1941, 1942 ஆகிய ஆண்டுகளில் மகாத்மா காந்தி தலைமையில் நடைபெற்ற போராட்டங்களில் கலந்துகொண்டு சிறைத் தண்டனை பெற்றவர். இளவயதிலேயே இவரைப் பற்றிக்கொண்ட ஆஸ்துமா, கடைசி வரையிலும் விடவில்லை.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியை 1938-ல் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் துறந்தபோதும், 1946-ல் ஆச்சார்ய கிருபளானி துறந்தபோதும், இவரைத் தேடி வந்த அந்தப் பதவியை மறுத்துவிட்டவர் ஆச்சார்ய நரேந்திர தேவ்.
1937-ல் ஐக்கிய மாகாணத்தில் காங்கிரஸ் அமைச்சரவை உருவானபோதும், 1948-ல் வல்லப பந்த் வற்புறுத்தியபோதும் மாநில முதல்வர், மத்திய அமைச்சர் பதவிகளை மறுத்துவிட்டவர்.
அரசியலில் தீவிரப் போக்கு கொண்டவரான இவர், மகாத்மாவுடன் பல விஷயங்களில் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருந்தாலும் அளவற்ற அன்பும் பாசமும் கொண்டிருந்தார். 1942 ஆகஸ்ட் போராட்ட முடிவெடுக்கக் காந்தியை இணங்க வைத்ததே இவர்தான் என்பார்கள்.
1934 ஆம் ஆண்டு பாட்னாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் புதிய சிந்தனைகளால் ஊக்கம் பெற்ற இளைஞர்கள் திரண்டு, பொருளாதார சமத்துவம், சுரண்டல் ஒழிப்பு, உழுபவனுக்கே நிலம் போன்ற தீர்மானங்களை முன்மொழிய, காங்கிரஸ் பரிசீலிக்கவேகூட முன்வரவில்லை. அதிருப்தியுற்ற இளைஞர்கள் அதே பாட்னா நகரில் ஆச்சார்ய நரேந்தி தேவ் தலைமையில் இன்னோர் இடத்தில் கூடி, அகில இந்திய காங்கிரஸ் சோசலிஸ்ட் குழுவொன்றை அமைத்தனர்.
நாட்டில் சோசலிச இயக்கத்தின் முதல் வித்து ஊன்றப்பட்டது. காங்கிரஸ் கட்சிக்குள் இருந்தவாறே நாட்டு விடுதலைக்காக முனைப்பாகச் செயல்படுவதுடன் உழைப்பாளர்களின் நலனிலும் அக்கறை கொள்ள வேண்டும் என்பதுதான் திட்டம்.
தம் வாழ்நாள் முழுவதும் சோசலிச இயக்கத்தின் தலைவராகத் திகழ்ந்த நரேந்திர தேவுக்குத் துணையாக நின்றவர்கள்தான் ஜெயப்பிரகாஷ் நாராயண், அசோக் மேத்தா, என்.ஜி. கோரே, அச்சுத பட்டவர்த்தன் எல்லாரும். விவசாயிகள், தொழிலாளர்களிடையே செல்வாக்குப் பெற்றது சோசலிச இயக்கம்.
வாழ்நாள் முழுவதும் ஆஸ்துமாவுடனும் போராடிக் கொண்டிருந்த ஆச்சார்ய நரேந்திர தேவை ஈரோடு அருகே பெருந்துறையிலுள்ள காசநோய் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெறச் செய்யலாம் என நினைத்தார் அப்போது – 1956-ல் தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த ஸ்ரீபிரகாசா.

ஸ்ரீபிரகாசாவின் குருநாதர் நரேந்திர தேவ். அந்தக் காலத்தில் அமைவிடம் காரணமாகவும் காச நோய் சிகிச்சையில் பெரும் புகழ் பெற்றிருந்தது பெருந்துறை காசநோய் மருத்துவமனை.
எதிர்பார்த்தபடியே மருத்துவமனையின் சிகிச்சை நல்ல பலனைத் தந்தது. பிரஜா சோசலிஸ்ட் கட்சியின் தலைவரான ஆச்சார்ய நரேந்திர தேவ், மருத்துவமனை அறையிலேயே கட்சியின் செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டி, ஆர்வத்தில் நீண்ட நேரம் பேசியிருக்கிறார்.
இதனால் திடீரென அவருடைய உடல்நிலை மிகவும் மோசமானது. தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் ஆளுநர் ஸ்ரீபிரகாசாவே நேரில் வந்துவிட்டார். அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாகிக் கொண்டிருக்கவே எப்படியும் அவரை சொந்த ஊருக்குக் கொண்டுசென்றுவிட வேண்டும் என்று காரிலேற்றிக்கொண்டு விமான நிலையம் புறப்பட்டார் ஸ்ரீபிரகாசா. ஆனால், ஆச்சார்ய நரேந்திர தேவின் நிலைமை மிகவும் மோசமாகிக் கொண்டிருக்கவே ஈரோட்டிலுள்ள அரசு திட்ட விடுதிக்கு (தற்போதைய காலிங்கராயன் இல்ல வளாகம்) கொண்டுசென்றார் ஸ்ரீபிரகாசா. இந்த வளாகத்திலேயே அவருடைய உயிர் பிரிந்தது – 1956 பிப்ரவரி 19 ஆம் தேதி. அவருடைய உடல்தான் மறுநாள் பின்னர் லக்னௌ நகருக்குக் கொண்டு செல்லப்பட்டு எரியூட்டப்பட்டது. அவருக்கு வயது 66 மட்டுமே.
நந்தா விளக்கு அணைந்தது. மகாத்மா காந்தியின் மரணத்துக்குப் பிறகு நாட்டை உலுக்கிய துயர சம்பவம் என்று குறிப்பிட்டார் பிரதமரான நேரு.

ஈரோட்டில் ஆச்சார்ய நரேந்திர தேவ் உயிர் பிரிந்த விடுதியில் அவருடைய படத்தையும் நினைவுக் கல்வெட்டையும் 1959, அக். 14-ல் முதல்வர் காமராஜர் தலைமையில் ஆளுநர் ஸ்ரீபிரகாசா திறந்துவைத்தார்.
ஆச்சார்ய நரேந்திர தேவின் தொடர்போ, என்னவோ, தமிழ்நாட்டில் வேறெந்தப் பகுதியிலும் இல்லாத அளவுக்கு சோசலிச இயக்கத்தினர் செல்வாக்குப் பெற்றிருந்த – இன்னமும்கூட தாக்கம் இருக்கும் மாவட்டம் ஈரோடு. ஆச்சார்ய நரேந்திர தேவின் புகழ்பாடிப் பரப்பிய எண்ணற்ற தலைவர்களில் மறைந்த ஈரோடு டாக்டர் வெ. ஜீவானந்தமும் ஒருவர். இப்போதும்கூட ஆச்சார்ய நரேந்திர தேவை ஈரோடு மாவட்ட மக்கள் அவரைக் கொண்டாடுகிறார்கள்; நினைவுகூர்கிறார்கள்.

ஈரோட்டில் காலிங்கராயன் இல்ல வளாகத்தில் உள்ள ஆச்சாரியா நரேந்திர தேவா நினைவு இல்லத்தில் ஆச்சாரிய நரேந்திர தேவின் 69-வது நினைவு நாளான இன்று பிப். 19-ல் காங்கிரஸ் சார்பில் ஈ.பி. ரவி, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விடியில் சேகர், அதிமுக சார்பில் முருகானந்தம் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
எங்கோ பிறந்து எங்கெங்கோ போராடி, சிகிச்சைக்கு வந்த இடத்தில் தமிழ்நாட்டில் உயிர்நீத்த இந்திய சோசலிச இயக்கத்தின் பிதாமகனான ஆச்சார்ய நரேந்திர தேவைத் தமிழகம் நினைவில் வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது!