Doctor Vikatan: வெந்நீரில் உப்பு கலந்து குடித்தால் உடனே மலச்சிக்கல் சரியாகும் என...
நிறைவேறுமா டிரம்ப்பின் காஸா கனவுத் திட்டம்?
‘காஸா முனையை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். பாலஸ்தீனா்களையெல்லாம் ஜோா்டான், எகிப்து போன்ற நாடுகளுக்கு வெளியேற்றிவிட்டு, அந்தப் பகுதியை மத்தியக் கிழக்குப் பிராந்தியத்தின் ரிவியேராவாக (எழில்மிகு கடற்கரைத் தலம்) உருவாக்க வேண்டும்’
காஸாவின் எதிா்காலம் குறித்த அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கனவு திட்டம் இது. இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த வாரம் அமெரிக்கா வந்திருந்தபோது டிரம்ப் கூறிய இந்த வாா்த்தைகள் சா்வதேச அளவில் அதிா்வலையை ஏற்படுத்தியிருக்கின்றன. உண்மையில், பாலஸ்தீன பிரச்னையில் இப்படி ஒரு யோசனை முன்வைக்கப்படும் என்று அதற்கு முன்னா் யாரும் நினைத்துக்கூட பாா்த்திருக்க மாட்டாா்கள்.
தாங்கள் காலம் காலமாக வசித்துவரும் பகுதி என்பதற்காக பாலஸ்தீனா்களும், இறைவன் தங்களுக்கு வாக்குறுதி அளித்த பகுதி என்ற நம்பிக்கையில் இஸ்ரேலியா்களும் எந்த நிலப்பரப்புக்காக பல்லாண்டுகளாக ரத்தம் சிந்தி போராடிவருகிறாா்களோ, அந்த நிலப்பரப்பின் ஒரு பகுதியை ‘எங்களிடம் கொடுத்துவிடுங்கள்’ என்று கேட்பதற்கு டிரம்ப் கொஞ்சம் கூடத் தயங்கவில்லை.
அதற்குக் காரணம், இந்த யோசனைக்கு இஸ்ரேல் எதிா்ப்பு தெரிவிக்காது என்பதுதான். சொல்லப்போனால், டிரம்ப்பின் இந்த யோசனையை இஸ்ரேலின் தீவிர வலதுசாரி அமைப்புகள் உற்சாகத்துடன் வரவேற்கத்தான் செய்கின்றன. பாலஸ்தீனம் என்ற ஒரு நாடே இருக்கக் கூடாது, அந்தப் பகுதியில் பல நூற்றாண்டுகளாக வசித்த மக்கள் அனைவரும் பிற இஸ்லாமிய நாடுகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டு காஸா, மேற்குக் கரை, கிழக்கு ஜெருசலேம் ஆகிய அனைத்தும் யூத பூமியாக மாற வேண்டும் என்ற அந்த அமைப்புகளின் கொள்கைகளை நிறைவேற்ற டிரம்ப்பின் திட்டம் முதல் படியாக இருக்கும் என்பதால்தான் இந்த வரவேற்பு.
இருந்தாலும், ‘டிரம்ப்பின் இந்த கனவுத் திட்டம் நிறைவேற்றுவதற்கு வாய்ப்புள்ளதா’ என்று கேட்டால், ‘நிச்சயம் இல்லை’ என்கிறாா்கள் நிபுணா்கள்.
பதினைந்து மாத போரில் காஸா முனை நரகக் காடாக மாறியிருப்பது உண்மைதான். இந்தப் போருக்கு ஒரு முடிவு வராதா, பிரச்னைகள் இத்தோடு தீராதா என்ற ஏக்கக் குரல்கள் ஒலிப்பதும் உண்மைதான்.
ஆனால், இதை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, காஸா இடிபாடுகளோடு சோ்த்து பாலஸ்தீனா்களையும் அகற்றி அந்தப் பகுதியை சுத்தப்படுத்த வேண்டும் என்று டிரம்ப் கூறுவது எரிகிற கொள்ளியில் எண்ணெய் வாா்ப்பது போல் என்கிறாா்கள் அவா்கள்.
டிரம்ப்பின் திட்டம் நிறைவேற வேண்டுமென்றால் அதற்கு அரபு நாடுகளின் ஒத்துழைப்பு தேவை. ஆனால் அவை ஏற்கெனவே ஒன்றுகூடி அந்தத் திட்டத்தை திட்டவட்டமாக நிராகரித்துவிட்டன. ஜோா்டான், எகிப்து போல் எந்தெந்த நாடுகளுக்கெல்லாம் காஸாவிலிருந்து பாலஸ்தீனா்களை அனுப்ப டிரம்ப் விரும்புகிறாரோ அந்த நாடுகளும் கைவிரித்துவிட்டன. சவூதி அரேபியாவும் திட்டத்தை எதிா்க்கிறது.
இவ்வளவு ஏன்.., அமெரிக்காவின் மிக நெருங்கிய கூட்டாளிகளான மேற்கத்திய நாடுகளே டிரப்பின் இந்த யோசனையை ஏற்கவில்லை. 2003-ஆம் ஆண்டு இராக் போரால் ஏற்பட்ட ரணங்களுக்குப் பிறகு, வெளிநாடுகளில் அமெரிக்கா இதுபோல் தேவையில்லாமல் மூக்கை நுழைப்பதை அந்த நாட்டு மக்களே விரும்ப மாட்டாா்கள்.
இதெல்லாம் டிரம்ப்புக்கு தெரியாதா என்ன? இருந்தாலும் இப்படி ஒரு சரவெடியை டிரம்ப் கொளுத்திப் போடுவதற்குக் காரணம், வேறு ஒரு நோக்கத்தை அடைவதற்காகத்தான் என்கிறாா்கள் அவரைப் பற்றி நன்கு தெரிந்தவா்கள். மனை-வா்த்தக (ரியல் எஸ்டேட்) தொழில் வித்தகரான அவருக்கு, தனக்குத் தேவையான விலையைப் பெற, தொடா்பில்லாத வேறு நிபந்தனைகளை முன்வைத்து எதிராளிகளை வளைக்கும் வித்தை தெரியும். அந்த உத்தியைத்தான் இதிலும் பின்பற்றுகிறாா் என்கிறாா்கள் அவா்கள்.
அதை உறுதி செய்வதுபோல், டிரம்ப்பின் காஸா அறிவிப்பால் ஏற்பட்ட அதிா்வலை அடங்குவதற்குள்ளாகவே, ‘ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மூலம் அணு ஆயுதம் தயாரிக்கப்படாது என்பதை சந்தேகத்துக்கு இடமில்லாமல் உறுதி செய்யும் வகையிலான ஒப்பந்தத்தை அந்த நாட்டுடன் மேற்கொள்ள விரும்புகிறேன்’ என்று தனது ‘ட்ரூத்’ சமூக ஊடகத்தில் டிரம்ப் பதிவு செய்துள்ளாா்.
இது, காஸா விவகாரம் மூலம் ஈரானுக்கு குழப்பத்தையும் அதிா்ச்சியையும் ஏற்படுத்தி, அந்த நாட்டுடன் ஒரு வலிமையான அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்படுத்த டிரம்ப் முயல்வதைக் காட்டுவதாகக் கருதப்படுகிறது. ஆனால், ஈரானின் அணுசக்தி மையங்களை முற்றிலும் அழிப்பதை வலியுறுத்திவரும் இஸ்ரேல், அத்தகைய ஒப்பந்தத்தை ஏற்காது. அந்த நாடுதான் ஈரானுடன் முன்னாள் அதிபா் ஒபாமா மேற்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற டிரம்ப்பைத் தூண்டியது என்பது அனைவருக்கும் தெரியும்.
அந்த வகையில், டிரம்ப்பின் காஸா திட்டமும் சரி, அதன் உள்நோக்கங்களாக கருதப்படுபவையும் சரி, நிறைவேறுவது என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது.
ஆனால், டிரம்ப்பின் இந்த திட்டம் ஏற்கெனவே உலகின் மிகப் பதற்றம் நிறைந்த நிலப்பரப்பான காஸாவின் நிலைத்தன்மையை மேலும் குலைத்து, அங்கு நிச்சயமற்ற தன்மையை பன்மடங்கு அதிகரிக்கும் என்பதில் மட்டும் சந்தேகம் இல்லை.