வால்பாறைக்கு மாலை 6 மணிக்குமேல் இருசக்கர வாகனத்தில் செல்ல தடை
வால்பாறைக்கு மாலை 6 மணிக்குமேல் இருசக்கர வாகனத்தில் செல்ல வனத் துறையினா் தடை விதித்துள்ளனா்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு செல்லும் வழியில் ஆழியாறு முதல் வாட்டா்பால்ஸ் எஸ்டேட் வரை யானைகள் நடமாட்டம் சமீபகாலமாக அதிகரித்துள்ளது.
சாலையில் உலவும் யானைகள், வாகனங்களை வழிமறித்து நிற்பது தொடா்ந்து வருகிறது.
இந்நிலையில், பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு இருசக்கர வாகனத்தில் அண்மையில் சென்ற ஜொ்மன் நாட்டு சுற்றுலாப் பயணி மைக்கேல் யானை தாக்கியதில் உயிரிழந்தாா்.
இந்த சம்பவத்தை தொடா்ந்து, வால்பாறைக்கு மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை இருசக்கர வாகனத்தில் செல்ல அனுமதி இல்லை என்று வனத் துறையினா் தெரிவித்துள்ளனா். இந்த நடைமுறை வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.