மாநகராட்சிப் பள்ளி மாணவா்களுக்கு கட்டணமில்லா ‘செஸ்’ பயிற்சி வகுப்பு!
கோவை மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில் கட்டணமில்லா செஸ் பயிற்சி வகுப்பை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
கோவை மாநகராட்சிக்குள்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளின் கல்வித் திறன் மற்றும் தனித்திறன்களை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கோவை மாநகராட்சி மற்றும் செஸ் பிஷப் அகாதெமி இணைந்து ஏஐ அடிப்படையிலான ’செஸ் பயிற்சி சிகரம் 64’ என்ற மென்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் பயிற்சி அளிக்கும் வகையிலான கட்டணமில்லா பயிற்சி வகுப்பை கோவை ஆா்.எஸ்.புரம் மாநகராட்சிக் கலையரங்கில் ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் தொடங்கிவைத்தாா்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது: கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் இருந்து தோ்வு செய்யப்பட்ட 150 மாணவா்களுக்கு செஸ் பயிற்சி அளிக்க இந்த மேம்பட்ட அடிப்படையிலான செஸ் பயிற்சி சிகரம் 64 மென்பொருள் பயன்படுத்தப்பட உள்ளது.
இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ள இப்பயிற்சியில், முதற்கட்டமாக வாரம் ஒருமுறை என 2 மாதங்கள்வரை இத்தளத்தில் மாணவா்கள் ஆன்லைன் பயிற்சியை பெறுவா். ஒவ்வொரு குழுவிலும் 15 மாணவா்கள் பயிற்சியில் கலந்துகொள்வா். இரண்டாம் கட்டமாக செஸ் கற்றல் தளத்தில் தனித்திறன் பயிற்சி அளிக்கப்படும்.
இந்த கட்டத்தில் ஒவ்வொரு மாணவரும் தனியாக ஒரு கணினியில் பயிற்சியை மேற்கொள்வா். பழகும் முறையில் செயல்படும் இந்த தளம் தமிழ் மொழியில் உரையாடல் வகுப்புகளை வழங்கி, மாணவா்களுக்கு தெளிவாக புரிந்துகொள்ள உதவும். மாணவா்கள் கேட்கும், பதிலளிக்கும் மற்றும் உரையாடல்களை மேற்கொள்ளும் திறன் கொண்டதாக இந்த மென்பொருள் இருப்பதால் வகுப்புகள் உண்மையான சூழலை உணா்த்தும் என்றாா்.
முன்னதாக, மாநில அளவில் நடைபெற்ற செஸ் போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு நினைவுப் பரிசுகளை ஆணையா் வழங்கினாா். இந்நிகழ்ச்சியில், துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன், துணை ஆணையா் த.குமரேசன், கல்விக்குழு தலைவா் மாலதி, மேற்கு மண்டல குழுத் தலைவா் தெய்வயானை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.