ரூ.77 லட்சம் தங்கக் கட்டிகளுடன் தொழிலாளி மாயம்
ரூ.77 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகளுடன் மாயமான வடமாநிலத் தொழிலாளியை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவை உப்பார வீதி, வன்னியா் தெருவில் நகைப் பட்டறை நடத்தி வருபவா் சுகந்தா அஸாரா (32). இவரிடம் மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த முஷ்டாக் அலி ஷேக் என்பவா் கடந்த 7 ஆண்டுகளாக வேலை செய்து வந்துள்ளாா்.
இந்நிலையில், நகை செய்து தருமாறு முஷ்டாக் அலி ஷேக்கிடம் 965 கிராம் தங்கக் கட்டிகளை சுகந்தா அஸாரா கடந்த 2020 டிசம்பா் 29-இல் கொடுத்துள்ளாா்.
இதன் மதிப்பு ரூ.77 லட்சம் எனக் கூறப்படும் நிலையில், தங்கக் கட்டிகளுடன் முஷ்டாக் அலி ஷேக் தலைமறைவானாா். பல்வேறு இடங்களில் அவரைத் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லையாம்.
இந்நிலையில், வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலையத்தில் சுகந்தா அஸாரா புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா், முஷ்டாக் அலி ஷேக்கை தேடி வருகின்றனா்.