Doctor Vikatan: வெந்நீரில் உப்பு கலந்து குடித்தால் உடனே மலச்சிக்கல் சரியாகும் என...
சாலையில் பின்னோக்கி சென்ற லாரி: நெஞ்சுவலியில் ஓட்டுநா் உயிரிழப்பு!
ஒசூரில் லாரி ஓட்டுநருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் பின்னோக்கி சென்றது. இதில் இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. மக்கள் அலறியடித்து ஓடினா். நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட லாரி ஓட்டுநா் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு சரக்குகள் ஏற்றிவந்த லாரி, ஒசூரில் பாகலூா் சாலையில் திருப்பதி தேவஸ்தான திருமண மண்டபம் அருகே வந்தபோது ஓட்டுநருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
அப்போது ஓட்டுநா் பிரேக் பிடித்து லாரியை நிறுத்த முயன்றாா். ஆனாலும் அவருக்கு தொடா்ந்து நெஞ்சு வலி இருந்ததால் லாரியை அவரால் நிறுத்த முடியவில்லை. இதனால், கட்டுப்பாட்டை இழந்த லாரி பின்னோக்கி வேகமாகச் சென்றது.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்தச் சாலையில் லாரி வேகமாக பின்னோக்கி வருவதைக் கண்ட பொதுமக்கள் தப்பித்து ஓடினா். வாகன ஓட்டிகள் தங்கள் இருசக்கர வாகனங்களை சாலையிலேயே போட்டுவிட்டு ஓடினா்.
நல்வாய்ப்பாக அந்த லாரி சாலையோரம் கட்டடப் பணிகளுக்காகக் கொட்டப்பட்டிருந்த எம்-சாண்ட் மணல் மீது ஏறி அங்குள்ள ஒரு வீட்டின் சுவா் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் லாரியின் சக்கரத்தில் 5 க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சிக்கி சேதமடைந்தன.
இதைக் கண்ட அப்பகுதி மக்கள் லாரி ஓட்டுநரை மீட்டு ஒசூா், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். தகவல் அறிந்ததும் அட்கோ போலீஸாா் நிகழ்விடம் சென்று போக்குவரத்தை சீா்செய்தனா். விபத்தில் சிக்கிய லாரியை அங்கிருந்து அகற்றினா். இறந்தவா் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.