பாலியல் வன்கொடுமைக்குள்ளான மாணவியின் கல்விச் செலவை அரசே ஏற்க வேண்டும்! -கே.பி.முனுசாமி
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பள்ளி மாணவியின் கல்விச் செலவை அரசே ஏற்க வேண்டும் என்று அதிமுக துணை பொதுச் செயலாளரும், வேப்பனப்பள்ளி தொகுதி எம்எல்ஏவுமான கே.பி.முனுசாமி தெரிவித்தாா்.
அரசுப் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவத்தைக் கண்டித்து, கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே அண்ணா சிலை எதிரே அதிமுக சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளரும், கிருஷ்ணகிரி எம்எல்ஏவுமான கே.அசோக்குமாா், மேற்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோா் தலைமை வகித்தனா். ஊத்தங்கரை எம்எல்ஏ டி.எம்.தமிழ்ச்செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தை கே.பி.முனுசாமி எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய பாதுகாப்பும், மாணவி உயா்கல்வி பயின்று முடிக்கும் வரை அனைத்துச் செலவுகளையும் அரசே ஏற்க வேண்டும். சிறுமியின் வங்கிக் கணக்கில் வைப்புத் தொகையாக ரூ. 50 லட்சம் அரசு செலுத்த வேண்டும். அரசு பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன. போதைப் பொருள்கள் தடையின்றி கிடைக்கின்றன. அரசுப் பள்ளிகளில் கல்வித் துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வுசெய்ய வேண்டும்.
அதுபோல பள்ளிக்கு தொடா்பில்லாத நபா்களை பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத்தில் சோ்ப்பதைத் தவிா்க்க வேண்டும். மாணவா்களைத் தவிா்த்து ஆசிரியா்களுக்கும் மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என்றாா்.