மைதானத்தில் சுருண்டு விழுந்த ரச்சின்... ரத்தம் வழிய அழைத்துச் சென்ற மருத்துவர்கள...
ஈரோடு தேர்தல்: நோட்டா 326%, சீமான் 123%, திமுக 5% - ஆனாலும் பெரியார் மண்ணில் பலிக்காத சீமானின் கனவு!
ஈரோடு தேர்தலில்... 'நாம் தமிழர் கட்சி படுதோல்வி... நூலிழையில் டெபாசிட்டையும் இழந்தது', 'தி.மு.க அபார வெற்றி' என்று பரபரப்பான பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால், விழுந்திருக்கும் வாக்குகளைப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அலசினால்... சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு கடந்த தேர்தலைவிட, சுமார் ஒன்றரை மடங்கு வாக்குகள் அதிகமாகக் கிடைத்துள்ளன. ஆனால், அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் களத்தில் இல்லாத நிலையில், அந்த வாக்குகளை மொத்தமாக 'சீமான் அள்ளுவார்' என்றே எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படி எந்த ஆச்சர்யமும் நிகழ்ந்துவிட வில்லை.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-05/ljlf460p/WhatsApp-Image-2025-01-11-at-10.09.16.jpeg)
கடந்த தடவை அ.தி.மு.க அள்ளிய வாக்குகளில் கிட்டத்தட்ட 33 சதவிகித வாக்குகள் இந்தத் தடவை பதிவாகவே இல்லை. மீதமுள்ள 67 சதவிகித வாக்குகளில் கணிசமான வாக்குகள் சீமானின் நாம் தமிழருக்குக் கை மாறியுள்ளன. அதேசமயம், தி.மு.க மற்றும் நோட்டாவுக்கும்கூட பாய்ந்துள்ளன என்பதையும் அடிக்கோடிட்டுக் குறித்துக் கொள்ள வேண்டும்.
கடந்த 2021 ம் ஆண்டில் இந்தத் தொகுதியில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலின்போது பதிவான மொத்த வாக்குகள் 1,51,292. இதில் நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள், 11,629 (7.7%). அடுத்து, 2023-ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான மொத்த வாக்குகள், 1,70,190. இதில், நாம் தமிழர் கட்சி பெற்றது 10,827 வாக்குகள் (6.4%). இந்த 2024-ல் நடைபெற்றிருக்கும் இடைத்தேர்தலில் மொத்தம் பதிவானது 1,54,657 வாக்குகள். இதில் நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்திருப்பது 24,151 வாக்குகள் (15.6%). முந்தைய தேர்தலைவிட 13,314 வாக்குகள் கூடுதலாகக் கிடைத்துள்ளன. தற்போது கிடைத்திருக்கும் கூடுதல் வாக்குகளை முந்தைய வாக்குகளுடன் ஒப்பிட்டால், கிட்டத்தட்ட 123% வளர்ச்சி.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-07/30d8070c-5924-42e4-b41b-0fcb17140fbf/GridArt_20240711_174129791.jpg)
தி.மு.க-வின் வாக்குகளைக் கணக்கிட்டால்... 2021-ல் 67,300 வாக்குகள் (44.5%), 2023-ல் 1,10,156 (64%), 2024-ல் 1,15,709 (74.7%). முந்தைய தேர்தலை ஒப்பிடும்போது, தற்போது 5,553 வாக்குகள் கூடுதலாகக் கிடைத்துள்ளன. இது, சுமார் 5% வளர்ச்சி.
நோட்டாவின் வளர்ச்சி, 2021 ல் மொத்தம் பதிவான வாக்குகளைக் கணக்கிடும்போது, 1,546 வாக்குகள் (1.02%). இதுவே, 2023 தேர்தலில் 1,432 வாக்குகள் (0.84%). இந்த 2024 தேர்தலில் 6,109 வாக்குகள் என உயர்ந்துள்ளது (3.94%). அதாவது, முந்தைய தேர்தலைவிட 4,677 வாக்குகள் நோட்டாவுக்குக் கூடுதலாகக் கிடைத்துள்ளன. இது, 326% எனும் அபார வளர்ச்சி.
கடந்த 2023 தேர்தலை ஒப்பிடும்போது, இந்தத் தேர்தலில் 15,533 பேர் வாக்களிக்கவில்லை. 2023 இடைத்தேர்தலில் அ.தி.மு.க பெற்ற வாக்குகள், 43,923. இந்தத் தேர்தலில் குறைந்துபோன இந்த 15,533 வாக்குகளை அ.தி.மு.க-வின் வாக்குகள் என்று ஒரு கணக்குக்காக எடுத்துக் கொள்வோம். மீதமுள்ள 28,390 வாக்குகள் வாக்குகள்தான் தி.மு.க-வுக்கு 4,800, நாம் தமிழருக்கு 13,314, நோட்டாவுக்கு 4,677, மீதமுள்ளவை சுயேச்சைகள் பலருக்குமாக பிரிந்துள்ளன.
![](https://gumlet.vikatan.com/vikatan/2020-11/ddd4402b-d2c3-4d84-ba9c-630699451738/periyar.jpg)
இதெல்லாம் இடைத்தேர்தல் கணக்குகளே. இதை வைத்தெல்லாம் ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது. ஆம், சீமானுக்கும் நோட்டாவுக்கும் கூடுதலாகக் கிடைத்த வாக்குகள்... என்பது, அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் ஒதுங்கிக் கொண்டதால் கிடைத்தவையே என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அதேசமயம், அந்தப் பலன் மொத்தமாக சீமானுக்கே போய்ச் சேரும் என்றே பலரும் எதிர்பார்த்தனர். சீமான் கட்சியினருக்கும் அது கனவாகவே இருந்தது. இதை எதிர்பார்த்தே தி.மு.க-வும் பலமாகக் களமாடியது. கடைசியில், பெரியார் மண்ணில் பெரிதாக எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடவில்லை.