AI, பத்திரிகையாளர்களின் செய்தி ஆற்றலுக்கு மாற்றாக வரமுடியாது - DW இயக்குநர் ஜெனரல் பீட்டர் லிம்பர்க்
ஜெர்மன் அரசின் பொது ஒளிபரப்பு நிறுவனமான Deutsche Welle-இன் இயக்குநர் ஜெனரல், திரு. பீட்டர் லிம்பர்க், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், ஊடகங்கள் எதிர்கொள்ளும் சவால்களைக் குறித்து மாணவர்களிடையே உரையாற்றினார்.
"மேற்கத்திய ஊடகங்களுக்கு சவாலாக விளங்கும் உலக சூழ்நிலைகள் மற்றும் சவால்கள்" என்ற தலைப்பில், Deutsche Welle (DW)-இன் இயக்குநர் ஜெனரல் திரு. பீட்டர் லிம்பர்க், ”சர்வதேச ஊடகங்களின் பொறுப்பு மற்றும் இன்றைய காலகட்டத்தில், அவை எதிர்கொள்ளும் தனித்துவமான சவால்கள்” ஆகியவை குறித்த தனது சீரிய கருத்துக்களை முன் வைத்திருக்கிறார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், Deutsche Welle நிறுவனத்தின், ஆசிய நிகழ்ச்சிகளின் இயக்குநர் திருமிகு. தேபராதி குஹா, அண்ணா பல்கலைக்கழக ஊடக அறிவியல் துறைத் தலைவர் முனைவர் எஸ்.அருள்செல்வன், அண்ணா பல்கலைக்கழக சர்வதேச உறவுகளுக்கான மையத்தைச் சேர்ந்த முனைவர் பாஸ்கர், Deutsche Welle-இன் சர்வதேச உறவுகளின் தலைவர் Ursula Götz, DW ஆசியாவிற்கான விநியோகத் தலைவர் ஆண்ட்ரெஸ் பலாசியோஸ், மற்றும் Deutsche Welle தமிழ் சேவையின் ஆசிரியர் அறவாழி இளம்பரிதி, Deutsche Welle தமிழ் சேவையின் செய்தியாளர்கள் செந்தில் குமார், அபர்ணா ராமமூர்த்தி, மதன் குமார், கிட்டு காசிநாதன் ஆகிய ஊடகத்துறை மற்றும் கல்வித்துறையின் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
உரையின்போது, திரு. லிம்பர்க், Deutsche Welle-இன் தனித்துவமான அணுகுமுறையைக் குறித்து எடுத்துரைத்தார், ” எங்கள் நிறுவனம் கற்பிப்பதையும், பிரசங்கம் செய்வதையும் மட்டுமே செய்யாமல், உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களுக்கு இடையிலான கருத்துப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கிறது” என்று தெரிவித்தார். "எங்களுக்கு நண்பர்கள் இல்லை, குறிப்பாக அரசாங்கங்களில் நட்பு இல்லை. சில பிராந்தியங்களில், எங்கள் தகவல் ஒளிபரப்பு தடுக்கப்படுவதுடன், எங்கள் இருப்பை வரவேற்பதில்லை. சமூக வலைதளங்கள் இளைய தலைமுறையினரை அடைவதற்கான அற்புதமான வழியாக பரிணமித்திருப்பினும், அவையே தகவல், கருத்து திரிபுகளின் கருவிகளாகவும் இருக்கின்றன” என்னும் சவாலைக் குறித்துப் பேசினார்.
“AI-ஐ பரிசோதிக்க ஆரம்பித்தாலும் கூட, DW-இன் யுக்தியில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். செயற்கை நுண்ணறிவு துணை புரியலாம். ஆனால் என்றும் அவை பத்திரிகையாளர்களின் செய்தியளிக்கும் ஆற்றலுக்கு மாற்றாக வரமுடியாது என நம்புகிறோம்” என்றார். மேலும் சர்வதேச அரங்கில் DW உட்பட சர்வதேச ஊடக நிறுவனங்களுக்கு இருக்கும் அரசியல், தொழில்நுட்பம், மற்றும் சமூக சவால்களுக்கு ஈடுகொடுக்க ஊடக அறத்தின் வழி நின்று செய்திகளை சேர்க்க நினைக்கும் உறுதியை தொடர வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.