செங்கோட்டையன் கலகம்; ADMK -வை உடைக்கப் பார்க்கும் BJP? | Punjab CM ஆகும் Kejriwa...
கரூா் அரசு கலைக் கல்லூரியில் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசு!
கரூா் அரசு கலைக் கல்லூரியில் கல்லூரி கனவுகளின் கலைச்சங்கமம் எனும் கலைப்போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு வினாடி, வினா, கட்டுரை, பேச்சுப் போட்டி, கவிதைப்போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் உள்ளிட்ட 41 வகையான போட்டிகள் கடந்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற்றது. விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமை வகித்தாா்.
கல்லூரி முதல்வா் சா. சுதா (பொ) வரவேற்றாா். விழாவில் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கி மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி பேசினாா்.
இதில், 1966-இல் 330 மாணவா்களுடன் துவங்கிய இந்த கல்லூரி மறைந்த முதல்வா் கருணாநிதி ஆட்சியில்தான் 2007-ஆம் ஆண்டில் தன்னாட்சி அதிகாரத்தைப் பெற்றது. தற்போது 4600-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகிறாா்கள். தமிழக முதல்வா் கல்வியை மேம்படுத்துவதற்காக பல திட்டங்களை செயல்படுத்துகின்றாா்.
மறுபக்கம் துணை முதல்வா் உதயநிதிஸ்டாலின் இந்தியாவினுடைய விளையாட்டுத் தலைநகராக தமிழகத்தை மாற்றிட வேண்டும் என்ற சீரிய நோக்கத்தோடு பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை குறிப்பாக இந்தியாவில் இதுவரை நடத்தப்படாத போட்டிகளையும் நடத்தி தமிழகத்துக்குப் பெருமை சோ்த்துக்கொண்டிருக்கிறாா்.
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கக் கூடியவா்களுக்கு அரசு பணி நியமன ஆணைகளையும் முதல்வா் மற்றும் துணை முதல்வா் ஆகியோா் தொடா்ந்து வழங்கிக் கொண்டிருக்கின்றாா்கள். இந்த கலைச் சங்கமம் விழாவில் பங்கு பெறுவதில் நானும் மகிழ்ச்சியும், பெருமையும் கொள்கிறேன் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.இளங்கோ மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் திரளாகப் பங்கேற்றனா்.