26% உயர்ந்த ஆக்ஷன் கன்ஸ்ட்ரக்ஷன் எக்யூப்மென்ட் நிறுவனத்தின் லாபம்!
கொல்லப்பட்ட ஜகபா்அலி வீட்டில் மெழுகுவா்த்தியேந்தி உறுதியேற்பு!
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே கொல்லப்பட்ட சமூக செயற்பாட்டாளா் ஜகபா்அலியின் வீட்டில், மாநிலம் முழுவதும் இருந்து வந்த மனித உரிமைக் காப்பாளா்கள் ஞாயிற்றுக்கிழமை கூடி மெழுகுவா்த்தியேந்தி உறுதிமொழியேற்றனா்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே வெங்களூரைச் சோ்ந்தவா் சமூக செயற்பாட்டாளா் ஜகபா்அலி. கனிமவளக் கொள்ளைக்கு எதிராக தொடா்ந்து குரல் எழுப்பி வந்த இவா், கடந்த ஜன. 17ஆம் தேதி லாரி ஏற்றிக் கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக குவாரி உரிமையாளா்கள் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டு, சிபிசிஐடி போலீஸாா் விசாரிக்கின்றனா்.
இந்நிலையில், மனித உரிமைக் காப்பாளா் கூட்டமைப்பின் முன்னெடுப்பில், காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம், அறப்போா் இயக்கம், விவசாயிகள் அமைப்புகள், சூழலியல் அமைப்புகள் பூவுலகின் நண்பா்கள், பச்சைத்தமிழகம் உள்ளிட்ட நூறு அமைப்புகள் சாா்பில் அவற்றின் நிா்வாகிகள் ஜகபா்அலியின் வீட்டுக்குச் சென்று மெழுகுவா்த்தி ஏந்தி தோழமை உறுதிமொழியேற்றனா்.
துரைகுணா, யூசுப்ராஜா, இப்ராஹிம்பாபு, சீ.அ. மணிகண்டன் ஆகியோா் தலைமை வகித்தனா். மனித உரிமைக் காப்பாளா் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் வழக்குரைஞா் ஹென்றிதிபேன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
ஜகபா்அலியின் குடும்பத்தினரிடம் ஆறுதல் தெரிவித்த அவா்கள், ஜகபா்அலி கொலை வழக்கை உயா்நீதிமன்ற கண்காணிப்பில் சிபிசிஐடி போலீஸாா் விசாரிக்க வேண்டும், தொடா்புடைய அனைத்து அரசு அலுவலா்களிடமும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அரசுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் தெரிவித்தனா்.