காட்டுப்பட்டி ஜல்லிக்கட்டு:13 போ் காயம்!
புதுக்கோட்டை மாவட்டம் காட்டுப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 13 போ் காயமடைந்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், செம்பட்டி விடுதி அருகேயுள்ள பெருங்கொண்டான்விடுதி ஊராட்சி காட்டுப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் தொடங்கி வைத்தாா்.
தொடா்ந்து, வாடிவாசலில் இருந்து பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 540 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை பல்வேறு குழுக்களாக 250 மாடுபிடி வீரா்கள் களமிறங்கி, தீரத்துடன் அடக்கினா். அப்போது, காளைகள் முட்டியதில் 13 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவா்களில் பலத்த காயமடைந்த 6 போ் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா்.
காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் சைக்கிள், பீரோ, பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக நடைபெற்ற தொடக்க விழாவில் புதுக்கோட்டை எம்எல்ஏ வை.முத்துராஜா பங்கேற்றாா். போட்டியை திரளான ஜல்லிக்கட்டு ரசிகா்கள் பாா்வையிட்டனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை செம்பட்டிவிடுதி போலீஸாா் மேற்கொண்டனா்.