சின்னமனூர் பூலாநந்தீஸ்வரர் கோயில் குடமுழுக்கு: 17 ஆண்டுகளுக்குப் பின் கோலாகலம்; குவிந்த பக்தர்கள்
தேனி மாவட்டம் சின்னமனூரில் கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பூலாநந்தீஸ்வரர் உடனுறை சிவகாமி அம்மன் கோயில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்தக் கோயில் கட்டுமானத்துக்குச் சிவப்பு நிற பாறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கோயில் திருப்பணி செய்த குலசேகர பாண்டியனின் பெயர் கல்வெட்டில் இடம் பெற்றுள்ளது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-03/83e02431-abc3-4874-ad5a-b8fb44811a34/19.jpg)
கோயில் வளாகத்திற்குள் பூலாநந்தீஸ்வரரைச் சுற்றி விநாயகர், முருகன், தண்டபாணி, வள்ளி தெய்வானையுடன் சண்முகர், 63 நாயன்மார்கள், ஜுரத்தைப் போக்கக்கூடிய சக்தி கொண்ட சுரகர தேவர், நடராஜ பெருமாள், மகாலட்சுமி, சரஸ்வதி, துர்க்கை, கன்னீஸ்வரமுடையார் உள்ளிட்ட கடவுள்கள் உள்ளனர். பூலாநந்தீஸ்வரரை எங்கிருந்து பார்த்தாலும் பார்ப்பவரின் அளவுக்குத் தகுந்தபடி காட்சியளிப்பார். பெரியவர்கள் பார்த்தால் அவர்களின் உயரத்திற்கு ஏற்றார்போல காட்சியளிப்பார், சிறியவர்கள் பார்த்தால் அவர்களின் உயரத்திற்கு ஏற்றார்போல காட்சியளிப்பார்.
![பக்தர்கள் கூட்டம்](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-10/x2z9s0nx/WhatsApp-Image-2025-02-10-at-15.15.36b1193e1a.jpg)
மதுரையில் நடக்கும் திருவிழாவைப் போல இங்கும் வெகு விமர்சியாக நடக்கும். மதுரை மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாண நாளில் இங்கும் திருக்கல்யாணம் நடக்கும். கொடியேற்றத்தில் தொடங்கித் தேர்த் திருவிழா, திருக்கல்யாணம் போன்றவை மிகவும் முக்கியமானவை.
இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயில் கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்தது. இதற்காக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோயில் உபயதாரர்கள் மூலமாகத் திருப்பணிகள் நடந்தன. தமிழகத்தில் பழமையான கோயில்களில் ஒன்றான பூலாநந்தீஸ்வரர் கோயிலின் அமைப்பே காண்போரைக் கவரும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மகா கும்பாபிஷேக விழா பிப்ரவரி 6 ஆம் தேதி தொடங்கியது. மூன்று பெரிய யாகசாலைகளும், 16 சிறிய யாக சாலைகளும் அமைக்கப்பட்டு பூஜைகள் நடந்தன.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-10/4r5i63g5/WhatsApp-Image-2025-02-10-at-15.15.135d867a87.jpg)
இன்று காலை ஆறு கால யாக பூஜைகளைத் தொடர்ந்து 9.15 மணிக்குக் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது. விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், பைரவர், நவக்கிரகம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.