ரூ.6 கோடி மதிப்பு.. 6.8 கிலோ தங்கத்தில் கன்னியாகுமரி அம்மன் விக்கிரகம்- அர்ப்பணித்த கேரள தொழிலதிபர்!
முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் அமைந்துள்ள ஸ்ரீ பகவதி அம்மன் திருக்கோயில் வரலாற்று சிறப்பு வாய்ந்த திருத்தலமாகும். கன்னியாகுமரி பகவதி அம்மனின் ஒளிவீசும் மூக்குத்திக்கு என தனி முக்கியத்துவம் உண்டு. பாணாசுரனை வதம் செய்ய கன்னியாகுமரி பகவதி அம்மனாக பார்வதி தேவி அவதரித்தார். பகவதி அம்மன் சிவபெருமானை நினைந்து ஒற்றைக்காலில் நின்று தவம் செய்த பாறைதான் இன்று கன்னியாகுமரி கடலில் விவேகானந்தர் நினைவுப்பாறையாக உள்ளது. ஸ்ரீபாதப்பாஐ என அறியப்படும் அந்த பாறையில் பகவதி அம்மனின் ஒற்றைக்கால்தடம் உள்ளதை பார்க்க முடியும். சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்ட கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் உள்ளூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும், பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடுவது வழக்கம். பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறினால் காணிக்கை, சிறப்பு பூஜைகள் செய்துகொடுப்பது வழக்கம். அந்த வகையில் கேரளாவைச் சேர்ந்த பக்தர் ஒருவர் 6.8 கிலோ எடையில் தங்கத்தால் ஆன கன்னியாகுமரி பகவதி அம்மன் உற்சவர் சிலை ஒன்றை காணிக்கையாக வழங்கியுள்ளார்.
கேரள மாநிலம், கொல்லத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் ரவிப்பிள்ளை என்பவர் பகவதி அம்மன் விக்கிரகத்தை நேற்று கன்னியாகுமரி கோயில் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். இந்து சமய அறநிலையத்துறை கன்னியாகுமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், இணை ஆணையர் ஜான்சிராணி, கோயில் மேலாளர் ஆனந்த் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர். பகவதி அம்மன் சிலை மட்டும் 5.350 கிலோ எடையும், அம்மனை சுற்றி அமைக்கப்பட்டிருந்த தங்க பிரபை 1.450 கிலோ எடை என மொத்தம் 6.8 கிலோ தங்கத்தில் விக்கிரகம் அமைக்கப்பட்டிருந்தது. இதன் தற்போதைய மார்க்கெட் மதிப்பு 6 கோடி ரூபாய் ஆகும்.
தொழிலதிபர் ரவி பிள்ளை குடும்பத்துடன் விக்கிரகத்தை சமர்ப்பிக்க கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு வந்திருந்தார். முதலில் பகவதி அம்மன் கோயில் மூலஸ்தானத்தில் வைத்து சிலையை காணிக்கையாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கொலு மண்டபத்தில் கொண்டு செல்லப்பட்டு நகை சரிபார்ப்பு அதிகாரி செந்தில் குமார், தொழில் நுட்ப உதவியாளர் ராஜா ஆகியோர் நகையின் எடை மற்றும் அளவுகளை சரிபார்த்து பதிவு செய்தனர்.
பகவதி அம்மன் சிலையுடன் 3 கிலோ எடையில் வெள்ளியிலான ஆமை பீடத்தையும் ரவி பிள்ளை காணிக்கையாக வழங்கியுள்ளார். பகவதி அம்மன் விக்கிரகத்தை கேரள மாநிலம், வைக்கத்தைச் சேர்ந்த பொற்கொல்லர் கைலாஷ் மற்றும் அவரது குழுவினர் தயாரித்துள்ளனர். பகவதி அம்மன் தங்க விக்கிரகத்தை திருவிழா காலங்களில் அம்மன் எழுந்தருளல் நிகழ்ச்சிகளின்போது பயன்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.