தமிழகத்துக்கு வந்துவிட்ட ஜிபிஎஸ் நோய்! புனேவில் மாவட்டம் முழுவதும் பரவியது!
கரோனா போல தமிழத்துக்கு வராது என்று கூறிக் கொண்டிருந்த ஜிபிஎஸ் நோய் பாதித்து திருவள்ளூரைச் சேர்ந்த சிறுவன் மரணமடைந்திருக்கும் நிலையில், மகாராஷ்டிர மாநிலம் புனேவில், மாவட்டம் முழுவதும் அந்நோய் பரவியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவன், ‘கில்லன் பாரே சின்ட்ரோம்’ என்ற ஜிபிஎஸ் நோய் பாதிப்புக்குள்ளாகி, எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மகாராஷ்டிரம், மேற்கு வங்கத்தை தொடா்ந்து ஜிபிஎஸ் நோய் தொற்று தமிழகத்துக்கும் பரவியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நோய் பாதித்து, சென்னை எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழந்த சம்பவத்தைத் தொடா்ந்து திருவள்ளூா் அருகே திருவூரில் மருத்துவக் குழுவினா் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், உலகிலேயே அதிக ஜிபிஎஸ் நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட இடமாக இருக்கும் மகாராஷ்டிர மாநிலம் புனேவில், சின்ஹகத் சாலையில்தான் அதிக நோய் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், தற்போது அந்தப் பகுதியைத் தாண்டி, முந்த்வா, கேத், மாவல், சிகாலி என மாவட்டம் முழுவதும் நோய் பாதிப்பு பரவியிருப்பது சுகாதாரத் துறையினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தற்போது மாவட்டம் முழுவதுமிருந்து புதிது புதிதாக நோய் பாதித்து மருத்துவமனைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில், ஜிபிஎஸ் பாதித்த 158 பேரில் 127 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மரணமடைந்த 5 பேருக்கு இந்த தொற்று இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. தற்போது புனேவிலிருந்து 31 நோயாளிகளும், இதர கிராமங்களிலிருந்து 83 பேரும், ஊரகப் பகுதியிலிருந்து 18 பேரும், இதர மாவட்டங்களிலிருந்து 8 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதலில் ஒரே ஒரு பகுதியில்தான் இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இது தற்போது மாவட்டம் முழுவதும் பரவியிருப்பதால், குழந்தைகளின் நிலை குறித்து கவலை ஏற்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இது பல ஆண்டுகாலமாக மக்களை தாக்கிவருவதாகவும், இப்போது இது பற்றிய அச்சம் அதிகரித்திருப்பதகாவும், சுகாதாரத் துறையினர் கூறுகிறார்கள். பொதுவாக இந்நோய் பாதிப்பினால் மரணம் நேரிடாது என்றாலும், ஏதேனும் இணை நோய்கள் இருந்து, இந்நோய் தாக்கும்போதுதான் சிகிச்சைபலனளிக்காமல் போவதாகவும் மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.
பொதுவாக இந்த நோய் குடிநீர் மூலமாகப் பரவுவதாகக் கூறினாலும், புதிதாகக் கண்டறிந்த நோயாளிகளுக்கு குடிநீர் மூலமாகப் பரவியிருப்பதற்கான வாய்ப்பு குறைவு என்றே கருதப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொதிக்க வைத்த குடிநீர் மற்றும் சமைத்த உணவை மட்டும் சாப்பிடும்படி பொதுமக்களை சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.