இலங்கை சுதந்திர நாள்: பொருளாதார சுதந்திரமடைய ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் -அதிபர்...
சாப்பாடு பிரச்னையில் திருமணத்தை நிறுத்திய மணமகன் வீட்டார்... காவல் நிலையத்தில் நடத்தி வைத்த போலீஸார்
குஜராத் மாநிலம், சூரத்தில், உணவுப் பற்றாக்குறையால் மணமகன் வீட்டார் நிறுத்திய திருமணத்தை, போலீஸார் காவல் நிலையத்திலேயே நடத்திவைத்த சம்பவம், வெளியில் தெரியவந்திருக்கிறது. முன்னதாக, நேற்று முன்தினம் சூரத்தின் வராச்சா பகுதியிலுள்ள திருமண மண்டபத்தில், பீகாரைச் சேர்ந்த ராகுல் பிரமோத் மஹ்தோ, அஞ்சலி குமாரி ஆகிய இருவருக்கும் திருமண நிகழ்வு நடந்தது.
அப்போது, மாலை மாற்றிக்கொள்ளும் சடங்கைத் தவிர மற்ற அனைத்து சடங்குகளும் முடிவடைந்த வேளையில், மணமகன் குடும்பத்தினர் திடீரென உணவுப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி திருமணத்தை நிறுத்தினர். அதனால், மணமகள் வீட்டார் உதவி கேட்டு காவல் நிலையம் சென்றனர். இறுதியில், போலீஸார் மணமகன் வீட்டாரை காவல் நிலையத்துக்கு வரவழைத்து மணமக்கள் இருவருக்கும் திருமணம் செய்துவைத்தனர்.
இது குறித்து பேசிய துணை போலீஸ் கமிஷனர் அலோக் குமார், ``திருமணத்துக்கான பெரும்பாலான சடங்குகள் முடிந்துவிட்டது. மாலை மாற்றிக்கொள்வது மட்டுமே மிச்சமிருந்தது. அப்போது, மணமகன் வீட்டார் உணவுப் பற்றாக்குறையால் இரு குடும்பத்தினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, மணமகன் வீட்டார் திருமணத்தை நடத்த மறுத்துவிட்டனர். அதனால், மணமகள் குடும்பத்தினர் உதவி கேட்டு காவல்நிலையம் வந்தனர்.
அப்போது, மணமகன் தன்னை திருமணம் செய்யத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அவரது குடும்பத்தினர் அதை மறுப்பதாகவும் மணமகள் கூறினார். பின்னர், இந்தப் பிரச்னையைத் தீர்க்க நாங்கள் உதவிய பிறகு மணமகன் வீட்டார் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டனர். இருப்பினும், மண்டபத்துக்குச் சென்றால் மீண்டும் சண்டை ஏற்படும் என்பதால், காவல் நிலையத்திலேயே மாலை மாற்றி திருமணம் செய்துகொள்ள அனுமதித்தோம்." என்று கூறினார்.