100-வது போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் இலங்கை வீரர்!
இலங்கை அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான திமுத் கருணாரத்னே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.
36 வயதாகும் திமுத் கருணாரத்னே இலங்கை அணிக்காக இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7,172 ரன்கள் குவித்துள்ளார். அதில் 16 சதங்கள் மற்றும் 34 அரைசதங்கள் அடங்கும். அவரது சராசரி 39.41 ஆக உள்ளது.
ஓய்வை அறிவித்த திமுத் கருணாரத்னே
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக திமுத் கருணாரத்னே அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல இந்திய அணி செய்ய வேண்டியதென்ன? ரெய்னா பேட்டி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி திமுத் கருணாரத்னே, இலங்கை அணிக்காக விளையாடவுள்ள 100-வது டெஸ்ட் போட்டியாகும். இலங்கை அணிக்காக கருணாரத்னே 50 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1,316 ரன்கள் குவித்துள்ளார். அதில் ஒரு சதம் மற்றும் 11 அரைசதங்கள் அடங்கும்.
ஓய்வு முடிவை அறிவித்து திமுத் கருணாரத்னே பேசியதாவது: ஓராண்டில் 4 டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடி டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் உத்வேகத்தோடு இருப்பது மிகவும் கடினம். அதிலும், ஃபார்மில் இருக்க வேண்டும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் அறிமுகப்படுத்தப்பட்ட 2-3 ஆண்டுகளில் நாங்கள் மிகவும் குறைவான இருதரப்பு தொடர்களில் மட்டுமே விளையாடியுள்ளோம்.
எனக்கு தனிப்பட்ட சில திட்டங்கள் இருக்கின்றன. அணியில் உள்ள மூத்த வீரர்களான ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சண்டிமால் போன்ற வீரர்களுடன் ஆலோசித்துவிட்டு அதன் பிறகே எனது ஓய்வு முடிவை எடுத்துள்ளேன். ஒரே நேரத்தில் மூத்த வீரர்கள் மூவரும் ஓய்வை அறிவிப்பதற்கு பதிலாக ஒவ்வொருவராக ஓய்வு பெறுவது நல்லது.
இதையும் படிக்க: அபிஷேக் சர்மா இன்னும் அதிகமாக பந்துவீச வேண்டும்; முன்னாள் இந்திய வீரர் வலியுறுத்தல்!
இதுவரை இலங்கை அணிக்காக நான் சாதித்துள்ளது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இலங்கை அணிக்காக 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள மகிழ்ச்சியான தருணத்தில் எனது ஓய்வு முடிவை அறிவிக்க விரும்பினேன். ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் தனது நாட்டுக்காக 100 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 10,000 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற கனவு இருக்கும். அது மிகப் பெரிய சாதனை. நீங்கள் கிரிக்கெட் விளையாடத் தொடங்கும்போது, இதுபோன்ற எந்தவொரு இலக்குகளும் இருக்காது. ஆனால், காலப்போக்கில் பல்வேறு இலக்குகள் உங்கள் முன் இருக்கும்.
இலங்கை அணி ஓராண்டில் மிகவும் குறைவான டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதால், 10,000 ரன்கள் குவிக்கும் இலக்கு மிகவும் தொலை தூரத்தில் இருக்கிறது. இலங்கை அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதையே நான் சாதனையாக உணர்கிறேன் என்றார்.
இதையும் படிக்க:டி20 உலகக் கோப்பைத் தொடரின் சிறந்த அணி: இந்திய வீராங்கனைகள் 4 பேருக்கு இடம்!
ஆஸ்திரேலியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (பிப்ரவரி 6) காலேவில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.