போபாலில் யாசகம் பெறவும் தானம் வழங்கவும் தடை!
போபால் : மத்திய பிரதேச தலைநகர் போபால் அமைந்துள்ள போபால் மாவட்டத்தில் பிச்சையெடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, யாரேனும் யாசகம் கேட்கும்போது அவர்களுக்கு தானம் வழங்குதலும் தடை செய்யப்பட்டுள்ளது.
போபாலில் சாலைகள், போக்குவரத்து சிக்னல்கள் உள்பட பொது இடங்களில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்துவோர் பலர், குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்கள் போதைப்பொருள் புழக்கத்துக்கு காரணமாக இருப்பதையும் சுட்டிக்காட்டி மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, பாரதீய நாகரிக் சுரக்ஷா சங்ஹிதா சட்டத்தின் 163(2)-ஆவது பிரிவின்கீழ் போபால் மாவட்ட ஆட்சியர் கௌஷ்லேந்திர விக்ரம் சிங் திங்கள்கிழமை(பிப். 3) பிறப்பித்துள்ள உத்தரவை மீறி, மேற்கண்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுமென்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போபாலின் கோலார் பகுதியில் யாசகம் கேட்டு பிழைப்பு நடத்துவோர் தங்கியிருப்பதற்கென அமைக்கப்பட்டுள்ள சமூக நலக்கூடத்தை அத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் பயன்படுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் இந்தூர் மாவட்டத்தில் யாசகம் கேட்பதற்கு மாவட நிர்வாகத்தால் கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.