இலங்கை சுதந்திர நாள்: பொருளாதார சுதந்திரமடைய ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் -அதிபர்...
'எம்.ஜி.ஆருக்கும், விஜய்க்கும் ஏணி வைத்தாலும் எட்டாது..!' - தமிழிசை காட்டம்
" 'பா.ஜ.க ஆதரவு இல்லாமல் எந்த கட்சியாலும் தமிழகத்தில் இனி ஆட்சி அமைக்க முடியாது' என்கிறீர்கள். ஆனால், 'தோல்வி பயத்தில் இடைத்தேர்தலைப் புறக்கணித்தவர்களின் பேச்சைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை' என்கிறார்களே, தி.மு.கவினர்?"
"நியாயமற்ற முறையில் தேர்தலை நடத்தி எங்களைப் பலமற்றவர்களாக தி.மு.க-வினர் காட்டிவிடுவார்கள். எனவேதான் முழு பலத்துடன் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறோம். அதற்காகவே உட்கட்சி தேர்தலை நடத்தி கட்சி கட்டமைப்புகளைப் பலப்படுத்தி வருகிறோம்"
"ஆனால் பா.ஜ.க-வின் உட்கட்சி தேர்தலிலேயே முறைகேடு நடித்திருப்பதாகச் சொல்லிப் பல இடங்களில் சர்ச்சை வெடித்திருப்பதை உங்களால் மறுக்க முடியுமா?"
"பலர் இருக்கும் இடத்தில் மாற்றுக் கருத்துக்கள் வரத்தான் செய்யும். அதையெல்லாம் மறந்துவிட்டு பணியாற்ற வேண்டும். கட்சியிலிருந்து வெளியேறிய சகோதரர்கள் மீண்டும் இணைய வேண்டும்"
"உங்களது கார் டிரைவரான பிரதாப் சந்திரனுக்கு நீங்கள் மண்டல குழு தலைவர் பதவி வாங்கிக்கொடுத்தது சர்ச்சையாகியிருக்கிறதே?"
"அவர் பல ஆண்டுகளாக பா.ஜ.க-வில் இருக்கிறார். தொழில்முறை டிரைவர் என்பதால் பிரசாரத்தின்போது கட்சிக்காக வேன் ஓட்டினார். என்னிடம் இரண்டு ஓட்டுனர்கள் இருக்கிறார்கள். பட்டியல் இனத்தில் இருந்து வந்தவர் என்பதால் அவருக்கு ஆதரவு தெரிவித்தேன். எனவே அந்த குற்றச்சாட்டில் துளியும் உண்மை இல்லை."
"நீங்கள் போலியான உறுப்பினர் சேர்க்கை நடத்தியதாகவும் புகார் கிளம்பியிருக்கிறதே?"
"என்னுடைய தொகுதியில்தான் அதிக உறுப்பினர்கள் சேர்ந்திருக்கிறார்கள். 50 பேரை இணைத்தாலே தீவிர உறுப்பினர். ஆனால் நான் 3,000 பேரை இணைத்திருக்கிறேன். ஆகவே எனது வளர்ச்சியைப் பிடிக்காதவர்கள் இப்படியெல்லாம் புரளி கிளப்புகிறார்கள்"
"மாநில தலைவர் பதவிக்கு நீங்கள் முயல்வதால்தான் அண்ணாமலை தரப்பு இதுபோன்ற தகவல்களைப் பரப்புவதாகக் கட்சிக்குள் பேசப்படுகிறதே?"
"அண்ணாமலை சிறப்பாக பணியாற்றி வருகிறார். நான் மாநில தலைவர் பதவி கேட்பதாகச் சொல்வதில் உண்மையில்லை. கட்சி என்றால் பூசல் இருக்கத்தான் செய்யும். அப்போதுதான் உற்சாகமாக இருக்கும். திமிங்கிலங்கள் இல்லாத கடலில் எனக்கு நீந்த பிடிக்காது. வரட்டும், பார்த்துக்கொள்ளலாம்"
" 'இந்த நாட்டை மனுஸ்மிருதி தான் ஆண்டு கொண்டிருக்கிறது' என்கிறாரே வி.சி.க தலைவர் திருமாவளவன்?"
"வி.சி.க-வினர்தான் சாதியை வைத்து அரசியல் செய்கிறார்கள். வேங்கைவயல் விவகாரத்தில் அவரது சமுதாயத்தைச் சேர்த்தவர்களுக்கே திருமாவளவன் துணையாக இல்லை. அரசியலுக்காக அப்படியெல்லாம் பேசுகிறார்கள்."
"பா.ஜ.க-வின் வாக்குகளை கவர்வதற்குத்தான் பெரியார் குறித்து சீமான் பேசுகிறார். அவரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தித் தேர்தலைச் சந்திக்க பா.ஜ.க விரும்புகிறது என்றெல்லாம் சொல்கிறார்களே?"
"சீமானை முன்னிறுத்தி களம் காண வேண்டிய அவசியம் பா.ஜ.க-வுக்கு இல்லை. இங்குப் பல பிரச்னைகள் இருக்கின்றன. அதற்கெல்லாம் பெரியார் குறித்துப் பேசுவதால் தீர்வு கிடைக்கப் போகிறதா?. ஆக்கப்பூர்வமான விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்."
" 'சங் பரிவாரில் 10-வது பரிவாரமாகச் சீமான் இணைத்திருக்கிறார்' என' வி.சி.க விமர்சனம் செய்திருக்கிறதே?"
"ஸ்டாலினை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக இப்படியெல்லாம் சொல்கிறார்கள்"
"எம்.ஜி.ஆர் பாணியில் ஆட்சியைப் பிடிக்கப் போவதாக விஜய் தரப்பு சொல்லும் நிலையில், அவரது புதிய படத்தின் போஸ்டர் கூட எம்.ஜி.ஆர் பாணியிலேயே இருக்கிறதே?"
(பலமாகச் சிரிக்கிறார்) "தொப்பி, கண்ணாடி, சாட்டையைப் பிடித்தால் மட்டும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது. எம்.ஜி.ஆர் வெறும் நடிகர் மட்டும் அல்ல. தி.மு.க-வில் தொண்டராக பணியாற்றினார். பிறகு அண்ணாவின் நம்பிக்கைக்குரியவராக மாறி, தேர்தலில் வென்றார். கருத்து வேறுபாட்டால் தனிக் கட்சி ஆரம்பித்து அதிலும் வெற்றி பெற்றார். எனவே விஜய்க்கும் அவருக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. விஜய் பனையூரில் முடங்கியிருப்பதுபோல ராமபுரத்தில் அவர் முடங்கியிருக்கவில்லை. வொர்க் ஃப்ரம் ஹோம் அரசியல் செய்யும் விஜய்யெல்லாம் எம்.ஜி.ஆருக்கு இணையாகப் பேசவே கூடாது. கூடவே தான் மட்டும்தான் ஸ்டார் என நினைப்பதையும் கைவிட வேண்டும். விஜய் நடித்துக்கொண்டிருக்கும்போது நாங்கள் மக்களுடன் நடந்து கொண்டிருந்தோம். மறந்திருந்த பரந்தூருக்கு சென்று 'விட மாட்டேன்' என்றார். அந்த மக்களுக்காக அடுத்து என்ன செய்தார்?. பரபரப்பு அரசியல் செய்வதைத் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். விஜய்யால் எந்த தாக்கமும் ஏற்படாது"
" 'சீனாக்காரன் என்னென்னமோ கண்டுபிடிக்கிறான் நாம் இன்னமும் சாமியைத் தேடுகிறோம்' எனத் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பா.ஜ.க-வை கார்த்தி சிதம்பரம் சாடியிருக்கிறாரே?"
"அந்த இடம் முருகன் கோவிலுக்குச் சொந்தமானது என உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. பிறகு எதற்காக அங்குச் சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தளத்தை வைக்கிறீர்கள்?. அவர்களே சர்ச்சையை உருவாக்கிவிட்டு, பா.ஜ.க-வை சொல்கிறார்கள்"
" 'தமிழ்நாட்டின் வளர்ச்சி சரிவுப் பாதையில் செல்கிறது' என ஆளுநர் தெரிவித்ததற்கு, 'தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் ஆளுநர்' என முரசொலி கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறதே?"
"முதல்வரும், ஆளுநரும் எதிர் எதிர்க் கருத்துக்களைச் சொல்லிக்கொள்வதில் அர்த்தம் இல்லை. இருவரும் அமர்ந்து பேச வேண்டும். அப்போதுதான் தமிழ் மக்களுக்கு நன்மை கிடைக்கும்."
"டெல்லி தேர்தலில் பா.ஜ.க-வுக்கு வாய்ப்பே இல்லை எனச் சமீபத்தில் வெளியான கருத்துக் கணிப்பு முடிவுகள் சொல்கிறதே?"
"ஊழலில் ஊற்றுக்கண்ணாக கெஜ்ரிவால் இருக்கிறார். அதனால்தான் நாடாளுமன்றத் தேர்தலில் பிரசாரம் கூடச் செய்ய முடியாமல் சிறையிலிருந்தார். அவர் கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றவில்லை. எனவே நாங்கள்தான் வெற்றிபெறுவோம்."