மெட்ரோ பணிகள்: மாதவரம் எம்.எம். காலனியை காலி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!
சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்காக மாதவரம் எம்.எம். காலனியை காலி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டப்பணிகளுக்காக மாதவரம் பால் பண்ணை அருகே உள்ள எம்.எம். காலனியை 4 மாதங்களுக்குள் காலி செய்ய தமிழக அரசு ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.
சென்னை மாதவரம் பால் பண்ணைக்கு பால் வழங்குவதற்காக அதனருகே மாடு வளர்ப்போருக்காக மாட்டுக்கொட்டகை மற்றும் குடியிருப்புப் பகுதிகளை தமிழக அரசு கடந்த 1959-ல் அமைத்துக் கொடுத்தது.
இதையும் படிக்க | 'அங்கன்வாடியில் உப்புமா வேண்டாம்; பிரியாணி, சிக்கன் வேண்டும்' - சிறுவனுக்கு அமைச்சர் பதில்!
தற்போது அப்பகுதியில் சென்னை மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் வருவதால் அவர்களை காலி செய்யக் கூறி தமிழக அரசு இழப்பீடும் வழங்கியுள்ளது. ஆனால், அவர்கள் காலி செய்ய மறுத்து வருகின்றனர்.
அரசின் உத்தரவை எதிர்த்து அப்பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்பவர் உள்பட 3 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய முடியாது என்று கூறிய நீதிபதி, வருகிற மே 31 ஆம் தேதிக்குள் எம்.எம்.காலனியில் உள்ளவர்கள் தங்கள் குடியிருப்பை காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும், மே 31 ஆம் தேதிக்குள் காலி செய்யவில்லை எனில் அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் கூறினார்.