பொது சிவில் சட்டம்: 5 பேர் குழு அமைத்தது குஜராத் அரசு!
பொது சிவில் சட்டத்துக்கான வரைவை தயாரிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைத்து குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உத்தரவிட்டுள்ளார்.
நாட்டில் முதல் மாநிலமாக உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பாஜக ஆளும் குஜராத்திலும் அந்த சட்டத்தை அமலுக்கு கொண்டுவருவதற்கான பணிகள் வேகமெடுத்துள்ளது.
இதையும் படிக்க : ராணுவ விமானத்தில் இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா!
இதுகுறித்து செய்தியாளர்களை செவ்வாய்க்கிழமை சந்தித்த பூபேந்திர படேல் பேசியதாவது:
பிரதமர் மோடி தலைமையில், அரசியலமைப்பின் 75 வது ஆண்டை கொண்டாடி வருகிறோம். அனைவருக்கும் சம உரிமைகள் கிடைக்கும் வகையில் நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதே அவரது குறிக்கோள்.
பிரிவு 370 ரத்து, ஒரு நாடு ஒரு தேர்தல் மற்றும் முத்தலாக் தொடர்பான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றன. அதே திசையில், மோடியின் தீர்மானத்தை நிறைவேற்ற குஜராத் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அனைவருக்கும் சம உரிமைகள் மற்றும் வாய்ப்புகளை உறுதி செய்ய அரசாங்கம் செயல்பட்டு வருகிறது
பொது சிவில் சட்டத்துக்கான வரைவைத் தயாரிப்பதற்காக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு, தனது அறிக்கையை 45 நாள்களில் மாநில அரசுக்கு சமர்ப்பிக்கும். அதன் அடிப்படையில் முடிவெடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இந்தக் குழுவில் ஓய்வுபெற்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிஎல் மீனா, வழக்கறிஞர் ஆர்சி கோடேகர், முன்னாள் துணைவேந்தர் தக்ஷேஷ் தாக்கர் மற்றும் சமூக ஆர்வலர் கீதா ஷ்ராஃப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.