கும்பமேளா கூட்ட நெரிசலில் இறந்தவர்கள் எத்தனை பேர்? - மக்களவையில் அகிலேஷ் கேள்வி!
மகா கும்பமேளா கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என மக்களவையில் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறினார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
கடந்த ஜன. 29 அன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை மாநில அரசு மறைக்கிறது என சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறி வருகிறார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளே இதுகுறித்து கேள்வி எழுப்பி அகிலேஷ் உள்ளிட்ட அக்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க | ராணுவ விமானத்தில் இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா!
இந்நிலையில் இன்று மக்களவையில் பேசிய அகிலேஷ் யாதவ்,
'மத்திய அரசு தொடர்ந்து பட்ஜெட் குறித்த புள்ளிவிவரங்களை வழங்கி வரும் அதேநேரத்தில், மகா கும்பமேளாவில் இறந்தவர்களின் புள்ளி விவரங்களையும் வழங்க வேண்டும்.
மகா கும்பமேளாவிற்கான ஏற்பாடுகள் குறித்து தெளிவுபடுத்த அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.
எந்த குற்றமும் இல்லை என்றால், இறந்தவர்களின் புள்ளிவிவரங்களை வெளியிட ஏன் மறுக்கிறீர்கள். அவை மறைக்கப்பட்டிருக்கிறதா? அழிக்கப்பட்டிருக்கிறதா?
மேலும், இறந்தவர்களின் உடல்கள் டிராக்டர் மூலமாக கொண்டு செல்லப்பட்டன. உ.பி. மாநில அரசு இறந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை மறைக்கிறது' என்று கூறியுள்ளார்.