ஆண்டாள் ஆறுமுகத்தின் ரூ.1,000 கோடி சொத்துகள், ரூ.912 கோடி பணம் முடக்கம்!
சைஃப் அலி கான் கத்தியால் குத்தப்பட்டது உண்மைதானா? கேள்வியெழுப்பும் இணையவாசிகள்!
மும்பை : ஹிந்தி நடிகர் சைஃப் அலி கான் கத்தியால் குத்தப்பட்டது உன்மைதானா அல்லது நாடகமா என்கிற சந்தேகத்தை அவரைப் பொதுவெளியில் பார்த்தபின் சிலர் எழுப்பியுள்ளனர்.
2025-ஆம் புத்தாண்டில் திரைத்துறையினருக்கு பேரதிர்ச்சியளிக்கும் சம்பவமாக மும்பையில் கடந்த மாதம் 16-ஆம் தேதியன்று நடிகர் சைஃப் அலி கானை அவரது வீட்டினுள் நள்ளிரவில் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் அமைந்துவிட்டது.
இதனையடுத்து ரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் இருந்த சைஃப் அலி கான் மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் உயிர் தப்பினார்.
இந்த நிலையில், குற்றவாளியை தீவிரமாக தேடி வந்த காவல் துறையினர், சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து பிஜோய் தாஸ் என்று தனது பெயரை மாற்றிக்கொண்ட வங்கதேச நாட்டவரான முகமது ஷரீஃபுல் இஸ்லாம் ஷெசாத் என்பவரே இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர் என்பதை உறுதி செய்துள்ளது மும்பை காவல்துறை. அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய சைஃப் அலி கான், ஓய்வெடுத்து வந்த நிலையில், மும்பையில் திங்கள்கிழமை(பிப். 3) நடைபெற்ற தனது திரைப்படத்தின் விளம்பரப்படுத்துதல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவர் நடித்துள்ள ‘ஜுவல் தீஃப் - தி ரெட் சன் சேப்டர்’ திரைப்படம் விரைவில் நெட்பிளிக்ஸில் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இந்நிகழ்ச்சியில் அவர், “உங்கள் அனைவரது முன்னிலையிலும் நிற்பது மகிழ்ச்சியாக உள்ளது” என்று பேசத் தொடங்கியதும் அவரது ரசிகர்கள் ஆரவாரம் செய்து மகிழ்ந்ததை காண முடிந்தது.
இதனிடையே, சைஃப் அலி கான் கத்தியால் குத்தப்பட்டது உண்மைதானா என்ற சந்தேகத்தை சிலர் எழுப்பியுள்ளனர். இந்த விவாதம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளது.
’இவ்வளவு பெரிய காயமடைந்த ஒரு நபரால் எப்படி வெகு சீக்கிரத்தில் குணமடைந்து பொது நிகழ்ச்சியில் பங்கேற்க முடிகிறது?’ என்பதே இந்த சந்தேகத்துக்கான காரணம்.
மேலும், அந்த நிகழ்ச்சியில் சைஃப் அலி கான் உடலில் பெரியளவிலான காயங்கள் ஏற்பட்டதற்கான தழும்புகள் இல்லாததையும் சுட்டிக்காட்டியுள்ள சிலர், அவர் விளம்பரத்துக்காகவே இப்படியொரு நாடகத்தை அரங்கேற்றினாரா? என்றும் கேள்வியெழுப்பியுள்ளனர்.
இந்த நிலையில், சைஃப் அலி கானின் மனைவியும் நடிகையுமான கரீனா கபூரின் ரசிகர்களும் சைஃப் அலி கானின் ரசிகர்களும், அவரது கழுத்தில் காணப்படும் பெரிய தழும்புகள் இருப்பதைச் சுட்டிக்காட்டி விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றியுள்ளனர்.