America: ``ட்ரம்பா - எலான் மஸ்கா" அமெரிக்காவின் அதிபர் யார்? - விமர்சனங்களும் பி...
Simbu: `என் 51-வது படத்தை நானே டைரக்ட் பண்ணலாம்னு இருந்தேன்! ஆனா..' - அப்டேட்ஸ் சொல்கிறார் சிம்பு
சிம்புவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவருடைய மூன்று திரைப்படங்கள் குறித்தான அறிவிப்பு நேற்றைய தினம் வெளியானது.
இப்படியான அடுத்தடுத்த அப்டேட்களுக்குப் பிறகு நேற்றைய தினம் அவருடைய திரைப்படத்தை இயக்கவிருக்கும் மூன்று இயக்குநர்களோட எக்ஸ் வலைதளப் பக்கத்தின் ஸ்பேஸில் இணைந்து அவரின் அடுத்தடுத்த திரைப்படங்கள் தொடர்பாக பல விஷயங்கள் பேசினார் சிம்பு.
தேசிங்கு பெரியசாமி
இதில் பேசிய இயக்குநர் தேசிங்கு பெரியசாமி, `` இந்தப் படம் நடக்கவே நடக்காது. அது சாத்தியமற்றதுனு பேசுன சமயத்துல சிம்பு சாரே நம்ம இதை நடத்திக் காட்டுவோம்னு இறங்கினது எனக்கு மாஸ் மொமன்ட். 2023, ஜனவரி 4-ம் தேதி இந்தப் படத்தோட கதையை நான் சிம்பு சாருக்கு சொன்னேன். இப்போ ரெண்டு வருஷத்துக்குப் பிறக m இந்த கதை மேல இருக்கிற அவருடைய ஆர்வம் குறையல. முக்கியமா, எந்த தருணத்திலையும் நம்பிக்கையை இழக்கல. நான் கதை சொல்லும்போது சொன்ன வசனங்களையெல்லாம் இன்னைக்கு வரைக்கும் சிம்பு சாருக்கு நினைவுல இருக்கு. நேற்று இரவு 12 மணிக்கு நான் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னேன்.
அதன் பிறகும் பிறந்தநாள் கொண்டாடாமல் இந்தப் படத்துக்கான போஸ்டர் டிசைன் வேலைகளைப் பற்றி பேசிட்டு இருந்தார். இவ்வளவு நாட்களாக முடியை வளர்த்துட்டு படத்துக்காக தயாராகி வேலை செய்யணும்னு நினைக்கிறாரு. ஆனால், அவரால பண்ண முடியல. அந்த சமயத்துல பல பேச்சுகள் எழும். அதுக்காக எல்லோருக்கும் பதில் சொல்ல முடியாது. அவர் நினைச்சிருந்தால் முடியை வெட்டிட்டு என்கிட்ட `சாரி ப்ரதர்'னு சொல்லிட்டு போயிட்டே இருந்திருக்கலாம். ஆனால், அவருடைய ரசிகர்களை அவர் மதிக்கிறாரு. அவங்களை பெருமைப்பட வைக்கணும்னு நினைக்கிறாரு.” என்றார்
யுவன் ஷங்கர் ராஜா
சிம்புவின் 50-வது திரைப்படம் தொடர்பாக பேசிய யுவன் ஷங்கர் ராஜா, `` இந்தப் படத்தோட கதையை கேட்டதுமே எனக்கு எதிர்பார்ப்பு வந்துடுச்சு. என்னுடைய ப்ரதருக்காக நல்ல வேலைகளை பண்ணுவேன். எனக்கு சில வடிவிலான இசையை பயன்படுத்தணும்னு கனவுகள் இருக்கு. அதையெல்லாம் சாத்தியப்படுத்துறதுக்கான இடம் இந்த திரைப்படத்துல இருக்கு. " என்றார்.
சிம்பு பேசுகையில், ``ரொம்ப இடைவெளி வேற ஆகிடுச்சு. இப்போ இந்த விஷயங்களெல்லாம் சரியான நேரத்துல வந்து அமைஞ்சிருக்கு. என்னுடைய 50-வது படத்துக்கான வேலைகளை முதல்ல தொடங்கும்போது இந்தப் படத்தை எடுக்க முடியுமானு எங்களுக்கே சந்தேகம் இருந்தது. அதன் பிறகு கமல் சாரோட ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் படத்துக்குள்ள வந்தது எங்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்துச்சு. இப்போ சாட்டிலைட் உரிமம், ஓ.டி.டி உரிமம் போன்றவற்றை கொஞ்சம் டவுன்ல இருக்கு. அதனால படத்தினுடைய விஷயங்களை குறைச்சா நாளைக்கு நம்ம எதிர்பார்த்த மாதிரி வராமல் போயிடும். அதனால்தான் நானும் தேசிங்கு பெரியசாமியும் நாங்களே தயாரிக்கிறோம்னு பேசினோம். அதுக்கு தயாரிப்பு நிறுவனம் ஒத்துகிட்டதே பெரிய விஷயம்.
இவ்வளவு பெரிய ப்ராஜெக்ட்... அதனால கொஞ்சம் ரிஸ்க் ஃபேக்டரும் அதிகம். ஒளிப்பதிவாளர் மனோஜ் சார் இந்தப் படத்துக்குள்ள வந்ததுக்குப் பிறகு திட்டமிடல்கள் நடந்தது. அதன் பிறகுதான் நாங்களே இந்தப் படத்தை தயாரிக்கலாம்னு முடிவுக்கு வந்தோம். யுவன் சார், மனோஜ் சார் உட்பட இந்தப் படத்துல இணைஞ்சிருக்கிற எவரும் இதுவரை சம்பளம் வாங்கல. சொல்லப்போனால், ஒப்பந்தம்கூட போடல. இப்படியான விஷயங்கள் சின்னப் படங்களுக்குதான் கிடைக்கும். ஆனால், இந்தப் பெரிய படத்துக்காக எல்லோரும் இப்போ வரைக்கும் உறுதுணையாக இருக்காங்க. இந்த இடைவெளி எதிர்பார்த்து நடக்கலைங்கிறதை நான் என்னுடைய ரசிகர்களுக்கு சொல்லிக்கிறேன்.
ரசிகர்களும் இந்த நிலைமையை புரிஞ்சுக்கணும்னு ஆசைப்படுறேன். தேசிங்கு இத்தனை நாள் காத்திருந்திருக்காரு. அவரை விட்டுட்டு நான் வேறு படத்துக்கு எப்படி போக முடியும். வெளில இருக்கிறவங்க இந்த திரைப்படத்தை `பாகுபலி' மாதிரியான திரைப்படம்னு நினைச்சுக்கிறாங்க. அது எங்க எண்ணமே கிடையாது. இந்தக் கதை தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்க்கிற மாதிரியான படைப்பாக இருக்கும். இந்தப் படம் வெளில வர்றதுக்கு நாங்க சிரத்தைக் கொடுத்து உழைக்கணும். அதனாலதான் நேரமெடுக்குது. அஸ்வத் எழுதுறதுக்கு நேரம் வேணும்னு சொன்னதுனாலதான் ராம்குமார் படம் பண்ணலாம்னு முடிவு பண்ணினோம்.
என் பிறந்தநாள் ஸ்பெஷலாக மூன்று அறிவிப்புகள் வெளி வந்ததுக்கு எல்லோருமே ஒரு முக்கிய காரணம். எல்லோருமே அவங்களோட கரியர்ல 50-வது படம் வித்தியாசமானதாக இருக்கணும்னு ஆசைப்படுவாங்க. அது நடந்திருக்கு. இந்த ஸ்பேஸ் உரையாடல்ல கலந்துக்கிறதுக்கு முன்னாடி கமல் சார்தான் கால் பண்ணியிருந்தாரு. அவர் `தக் லைஃப்' படம் பார்த்துட்டு என்னை வாழ்த்தினாரு. அந்தப் படம் இந்த வருடம் ஜூன் மாசத்துல வரும். இயக்குநர் ராம்குமார் மனசு வச்சா இன்னொரு படமும் இந்த வருஷம் வந்திடும்.
தேசிங்கு பெரியசாமி படத்துக்காக 2 வருடம் முடி வளர்த்துட்டேன். நான் தினமும் இருமுறை குளிப்பேன். ரொம்ப கஷ்டமாக இருக்கும். பெண்களெல்லாம் கையெடுத்து கும்பிடுணும்னு தோணிடுச்சு (சிரிக்கிறார்)." என்றவர், `` சொல்லப்போனால், என்னுடைய 51-வது படத்தை நான் டைரக்ட் பண்ணலாம்னு வச்சிருந்தேன். அதை அஸ்வத் எடுத்துக்கிட்டாரு. என்னுடைய 60-வது படத்தை நான் டைரக்ட் பண்ணுவேன்!'' எனக் கூறி முடித்துக் கொண்டார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...