தில்லியில் பிரசாரம் நிறைவு! மும்முனைப் போட்டியில் வெல்வது யார்?
Suriya: வாடிவாசல் படப்பிடிப்பு எப்போது?- `ரெட்ரோ'வின் அடுத்து அப்டேட்!
சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியின் 'ரெட்ரோ' படத்தின் டைட்டில் டீசர் கடந்த டிசம்பரில் வெளியாகி, மிகுந்த வரவேற்பை அள்ளியது. படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், அடுத்தடுத்த அப்டேட்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.
இந்தப் படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டேவை தவிர, ஜெயராம், ஜோஜூ ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ், சுஜித் சங்கர், 'டாணக்காரன்' தமிழ், எனப் பலரும் நடித்துள்ளனர். இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு அந்தமானில் நடந்திருக்கிறது. ஒரு பாடலுக்கு ஸ்ரேயா ஆடியிருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். கார்த்திக் சுப்புராஜின் 'ஜகமே தந்திரம்' ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
கடந்த டிசம்பர் மாதத்திற்கு முன் 'ரெட்ரோ' 2025 பொங்கலுக்கு வெளியாகும் என்ற பேச்சு இருந்தது. இந்த நிலையில் தான் டீசர் வெளியானது. அதன்பின் வருகிற மே முதல் தேதியில் படம் வெளியாகும் என்பதை அறிவித்திருந்தனர். படத்தின் எடிட்டிங் வேலைகளும், பின்னணி இசையும் பரபரக்கிறது. மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் முதல் சிங்கிள் வெளிகிறது. அனேகமாக அது ஸ்ரேயா ஆடிய பாடலாக இருக்கும் என்றும் தகவல். வரும் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் படத்தின் டிரெய்லர் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
'ரெட்ரோ'வை முடித்துக் கொடுத்துவிட்டு, இப்போது ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில் மும்முரமாக இருக்கிறார் சூர்யா. கோவை மற்றும் சென்னையில் இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. அதிலும் கோவையில் ஏழு வாரங்கள் தொடர்ந்து படபிடிப்பு நடந்திருக்கிறது. இப்போது கடந்த 31ம் தேதியில் இருந்து மீண்டும் சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. மார்ச் மாதத்தோடு இதன் படப்பிடிப்பு நிறைவடையும் என்கின்றனர். எப்போதும் ஒரு படத்தை முடித்து விட்டு, அடுத்த படத்திற்கு வருவது சூர்யாவின் பாணி. அதன் படி 'சூர்யா 45' முடித்துவிட்டு, 'வாடி வாசல்' படத்தை ஆரம்பிக்கிறார் சூர்யா.