``நான் பேசிய வீடியோ இதுதான்.. திரித்து வெளியிட்டு விவாதம் ஆக்கியுள்ளனர்'' -சுரேஷ்கோபி விளக்கம்
பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் சுரேஷ்கோபி
கேரள மாநிலம் திருச்சூர் தொகுதி எம்.பி-யான நடிகர் சுரேஷ்கோபி மத்திய அமைச்சராக உள்ளார். டெல்லி மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார் மத்திய அமைச்சர் சுரேஷ்கோபி.
டெல்லி மயூர் விஹாரில் மலையாள மொழிபேசும் மக்கள் மத்தியில் நேற்று பிரசாரம் செய்த சுரேஷ்கோபி பேசுகையில், "பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக பட்டியலினத்தை சேர்ந்தவர்தான் எப்போதும் நியமிக்கிறார்கள். அது நாட்டின் சாபமாகும். அதை மாற்றி பழங்குடியினர் நலன் சார்ந்த அமைச்சர்களாக பிராமணரையோ, நாயுடுவையோ நியமிக்க வேண்டும். அப்படி நியமிப்பதால் பெரிய மாற்றங்கள் ஏற்படும். அது என்னுடைய விருப்பமும், கனவும் ஆகும். 2016-ம் ஆண்டு நான் எம்.பி ஆனது முதல் இதை பிரதமரிடம் வேண்டுகோளாக முன்வைத்தேன். பட்டியலின சமூகத்தின் நலனை நிர்வகிக்கும் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் பதவியை வழங்கும்படி கேட்டேன்" என பேசியிருந்தார்.
மத்திய அமைச்சர் சுரேஷ்கோபியின் பேச்சு விவாதத்தை ஏற்படுத்தியது. மேலும், பழங்குடியின மக்களுக்கு எதிரானவர் என எதிர்கருத்துகளும் எழுந்தன. அதே சமயம் சுரேஷ்கோபி தனது பேச்சின் முழு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அதில், "பட்டியலின மக்கள் நலத்துறைக்கு முன்னேறிய சாதியினரையும், முன்னேறிய சாதியினர் வளர்ச்சிக்கென துறைக்கு பட்டியலினத்தவரை அமைச்சராக நியமிக்க வேண்டும். இந்த பரிமாற்றம் ஏற்பட வேண்டும்" என பேசியிருந்தார்.
`திரித்து வெளியிட்டு விவாதம் ஆக்கியுள்ளனர்...'
சமூக வலைத்தளத்தில் வீடியோவுடன் தனது பேச்சுகுறித்து மத்திய அமைச்சர் சுரேஷ்கோபி அளித்துள்ள விளக்கத்தில் கூறுகையில், "டெல்லி தேர்தலில் எனது பிரசாரத்தில் நான் பேசியதை சொந்த விருப்பத்துக்காக சில ஊடகங்கள் திரித்து வெளியிட்டு விவாதம் ஆக்கியுள்ளனர். இந்தியாவில் ஆண்டுக்கணக்கில் நிலவும் சாதி வித்தியாசங்களை தாண்டி ஒவ்வொரு இந்தியரையும் சமமாக பார்க்கவேண்டும் என்பது பாபாசாகேப் முன்வைத்த பெருங்கனவாகும். இந்த சமத்துவத்தின் ஒருபகுதியாகத்தான் பட்டியலின மக்களை முன்னேறிய வகுப்பினர் பாதுகாக்கவேண்டும் எனவும், முன்னேறிய வகுப்பினரின் விவகாரங்களில் பட்டியலின மக்கள் பங்கெடுக்க வேண்டும் எனவும் நான் விரும்பினேன்.
`முழுமையாக ஒளிபரப்ப வேண்டும்..'
எனது இந்த பேச்சை தவறான லட்சியத்துடன் திரித்து வெளியிட்ட சில மீடியாக்கள், எனதுபேச்சை முழுமையாக ஒளிபரப்பி தைரியத்தை காட்டவேண்டியது அவசியமானதாகும். பா.ஜ.க-வுடன் உள்ள உங்கள் வைராக்கியமும், என் மீதான கோபமும் எனது திருச்சூருக்கும், கேரள மக்களுக்கும் சேவை செய்ய தூண்டுகிறது.
நீங்கள் இன்று பட்டியலின மக்களுக்கு எதிரானவன் என சித்திரிக்கும் சுரேஷ்கோபிதான் வயநாட்டிலும் இடுக்கி இடமலக்குடியிலும் பட்டியலின மக்களுக்காக குரல்கொடுத்த அதே சுரேஷ்கோபி எனபதை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும்" என சுரேஷ்கோபி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பட்டியலின மக்கள் நலனை கவனித்துக்கொள்வதில் எனக்கு எப்போதும் விருப்பம் உண்டு எனவும். எங்கள் கட்சிதான் பழங்குடியினத்தைச் சேர்ந்தவரை ஜனாதிபதியாக்கியது. நான் கூறியதை எனது வார்த்தைகள் இதயத்திலிருந்து வந்தவை. நல்ல நோக்கத்துடன்தான் நான் அப்படி பேசினேன் எனவும் சுரேஷ்கோபி தெரிவித்துள்ளார்.