பொட்டுத்தங்கம் கிடையாது; மஞ்சக்கயிறே தாலி..! கிராமத்தின் வினோத பழக்கம் - Explainer
இது தை மாசம். முகூர்த்தங்கள் நிறைஞ்ச மாசம். இப்படித்தான் ஒரு தை மாசத்துல அருப்புக்கோட்டைக்கு பக்கத்துல இருக்கிற ஒரு கிராமத்துல நடந்த கல்யாணத்துக்குப் போயிருந்தோம்.
குண்டுமணி தங்கம்கூட கோக்காம வெறும் மஞ்சக்கயிறை மட்டும் மாப்பிள்ளைக் கட்ட, சுற்றி நிக்கிற மூத்தப்பெண்மணிகள் குலவையிட, நல்லபடியா முடிஞ்சது கல்யாணம். அதுவரைக்கும் தங்கத்துல விதவிதமா தாலிகளைப் பார்த்திருக்கிற நமக்கு, வெறும் மஞ்சக்கயிறை மட்டுமே கட்டுறது ரொம்ப வித்தியாசமா இருந்துச்சு. சில குடும்பங்கள்ல வேற வழியே இல்லாத கஷ்ட காலத்துல தாலி கைகொடுக்கிறதையும், சில குடும்பங்கள்ல தாலிக்கயிறுல அழகுக்காக கோத்துக்கிற நானக்குழாய், மாங்காய், வாழைச்சீப்பு, குண்டு, லட்சுமிக்காசு போன்றவை கழுத்துல கிடக்கிற தங்க சேமிப்பா இருக்கிறதையும் பார்த்திருப்போம். இதென்ன பொட்டுத்தங்கம்கூட இல்லாம வெறும் தாலிக்கயிறு..? காரணத்தை மணமகளோட பாட்டிகிட்ட விசாரிச்சோம். காரணத்தை, கதையா சொல்ல ஆரம்பிச்சார் அவர்.
''எனக்குத் தெரிஞ்சு இந்தப்பழக்கம் அருப்புக்கோட்டை பக்கத்துல இருக்கிற சில இனங்கள்ல இருக்குமா. இப்போல்லாம் நகைக்கடையிலயே எல்லாவிதமான தாலிகளும் கிடைக்குது. அந்தக் காலத்துல தாலி செய்யுறவங்க தங்கத்தை உருக்கி அச்சுல ஊத்தி நம்ம கண்ணு முன்னாடியே தாலி ரெடி பண்ணுவாங்க.
முன்னொரு காலத்துல, ஒரு குடும்பம் குழந்தை, குட்டியோட அவங்க வீட்டுப் பொண்ணுக்குத் தாலி செஞ்சு வாங்கிட்டு திரும்பி வந்திருக்காங்க. போறப்போவே மழை மேகமா இருந்திருக்கு. அப்படியே மழை பெஞ்சாலும், ஆத்துல தண்ணி கால் முட்டு அளவுக்கு நிறைஞ்சாலே பெரிய விஷயம்னு நம்பி தாலி செய்ய போயிட்டாங்க. ஆனா, தாலி வாங்கிட்டு திரும்பி வர்றப்போ மழையான மழையாம். வர்ற வழியில இருந்த ஒரு கிராமத்துல மழைக்கு ஒதுங்க, அவங்க இவங்களுக்கு கறியோட விருந்து சமைச்சாங்களாம். கல்யாணம் நிச்சயமான வீட்ல கறி சாப்பிடக்கூடாது; அதை சொன்னா நமக்கு விருந்து சமைச்சவங்க மனசு கஷ்டப்படுமேன்னு சொல்லாம கொள்ளாம அங்கிருந்து கிளம்பி வந்துட்டாங்களாம். வந்தா, ஆத்துல வெள்ளமானா வெள்ளமாம். வெள்ளத்துக்குப் பயந்து நிக்கிறதா, இல்ல ஆத்துல இறங்கிப்போய் கல்யாணத்தை நடத்துறதான்னு யோசிச்சவங்க, வீட்டுப் பொம்பளைப்புள்ளையோட கல்யாணம்தான் முக்கியம்னு துணிஞ்சு ஆத்துல இறங்கி நடக்க ஆரம்பிக்கிறாங்க. கொஞ்ச தூரம் வரைக்கும் சாதுவா இருந்த ஆறு போகப்போக 'ஓ'ன்னு சத்தம் போட்டு எச்சரிக்குது. குறிச்ச நேரத்துல கல்யாணம் நடக்கலைன்னா, பொம்பளைப்புள்ள வாழ்க்கைப்போயிடுமேன்னு ஆத்தோட எச்சரிக்கையையும் மீறி நடக்க ஆரம்பிக்கிறாங்க. அவ்ளோதான், தண்ணிக்குள்ள இறங்கின பெரிய உசுருங்க எல்லாத்தையும் சுருட்டி எடுத்துட்டுப் போயிடுது ஆறு. கூடவே கல்யாணப்பொண்ணோட கழுத்துல ஏற வேண்டிய தங்கத்தாலியையும் முழுங்கிடுது.
கூடப்போன புள்ளைங்க அழுகைன்னா அழுகையாம். அந்த நேரம் ஆத்தோரத்துல இருந்த அரச மரமும் வன்னி மரமும் வெள்ளத்தோட வேகத்தை தாங்க முடியாம வேரோட ஆத்துக்குள்ள விழுந்திடுச்சாம். அந்த மரங்களைப் புடிச்சும் ஆத்துத்தண்ணியில மிதந்தும் ஊரு வந்து சேர்ந்தாங்களாம் புள்ளைங்க. ஆத்துல போன உசுருங்களுக்காக அழறதா, பெத்தவங்களை பறிகொடுத்த புள்ளைங்களுக்காக அழறதா, கல்யாணத்துக்காக காத்துக்கிட்டிருக்கிற குமரிப்புள்ளைக்காக அழறதான்னு ஊரே தவதாயப்பட்டுப்போகுது. கடைசியா கூடிப்பேசி, தங்கத்துல தாலி செய்ய ஆத்தைத் தாண்டிப்போனதால தானே இத்தனை உசுரைப் பறிகொடுத்தோம். இனிமே நம்ம இனத்துல மஞ்சக்கயிறுதான் தாலி. தங்கம் கிடையாதுன்னு முடிவு எடுக்கிறாங்க. ஆனா, எங்க தாலியில தங்கம் இல்லைன்னாலும், மஞ்சக்கயிறு புடிக்கிறதை பெரிய விசேஷமா செய்வோம்''னு சொன்னவர், அதையும் விவரிக்க ஆரம்பிச்சார்.
''கல்யாணத்துக்கு ரெண்டு, மூணு நாளைக்கு முன்னாடி ஒரு நல்ல நாள்ல, விரலி மஞ்சளை உரல்ல போட்டு இடிக்க ஆரம்பிப்போம். மதனியும் நாத்தனாரும்தான் ஒண்ணு சேர்ந்து மஞ்சள் இடிக்கணும். இடிச்ச மஞ்சளை சலிச்சு, தண்ணி தெளிச்சு அம்மியில வெச்சு அரைப்போம். பஞ்சை அம்மி மேல வெச்சு திரிக்க திரிக்க மஞ்ச நூல் திரி கிடைச்சிடும். இந்த நூல் திரியை 1001 எண்ணிக்கை, 501 எண்ணிக்கை, 101 எண்ணிக்கைன்னு ஒண்ணு சேர்த்தா தாலிக்கயிறு தயாராகிடும். இந்த மூணு கயிறையுமே கல்யாணத்தப்போ கட்டணும். சில குடும்பங்கள்ல அஞ்சு கயிறு கட்டுவாங்க. சில குடும்பங்கள்ல ஏழுகூட கட்டுவாங்க. கல்யாணம் முடிஞ்ச மூணாவது நாள் அத்தனை தாலிக்கயிறையும் கழட்டிட்டு கடையில விக்கிற மாதிரி மெல்லிசா மஞ்சக்கயிறு போட்டுப்போம். அந்தக்கயிறும் மஞ்சள் இடிச்சு நாங்களே புடிக்கிறதுதான். முன்ன காலத்துல மொத்த மஞ்சளையும் நாங்களே இடிப்போம். இப்போ, சம்பிரதாயத்துக்கு ஒரு ஈடு மஞ்சளை இடிச்சுக்கிட்டு, மித்ததுக்கு கடையில விக்கிற மஞ்சப்பொடியை சேர்த்துக்கிறோம். அதே மாதிரி கயிறும் முன்ன காலத்துல நாங்களே பஞ்சை திரிச்சு நூலாக்குவோம். இப்போ கடைகள்ல கிடைக்கிற பஞ்சு நூல்கண்டு வாங்கிக்கிறோம்.
எங்க ஊருப்புள்ளைங்களை அரச மரமும் வன்னி மரமும் காப்பாத்துச்சில்லையா... அதுக்கு நன்றியா, பந்தக்கால் நடுறப்போ மரியாதை செய்வோம். ஒரு வன்னி மரக்குச்சியோட தோலை உரிச்சிட்டு மேல மஞ்சள் பூசிடுவோம். இந்தக் குச்சியோட அரச மரக்குச்சியையும் சேர்த்து மஞ்சள்ல நனைச்சு கிழிச்ச வேட்டித்துணியால இறுக கட்டி, பந்தக்காலோட மேல் நுனியில கட்டிடுவோம். இந்த வழக்கம் இப்போ வரைக்கும் எங்கூர்ல இருக்கு. எத்தனை பவுன்ல தங்கத்துல தாலி போட்டாலும், எங்க தாலிக்கயிறுக்கு ஈடாகாதும்மா''ன்னு முடிச்சார் அந்த மணமகளின் பாட்டி.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs