ஹரியாணா: கால்வாயில் வாகனம் கவிழ்ந்ததில் 9 பேர் பலி, 3 பேர் மாயம்
மகிழுந்து வாங்கிய படலம் - 1: மிடில் கிளாஸ் பெண்ணின் பகிர்வு | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
"நம்ம கார் வாங்கப் போறோமா?" ஆச்சரிய ஆனந்தத்தில் திகைத்தேன்.
கார் வாங்கும் ஆசை ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்திற்கு நிறைவேறினால் அது எப்பேர்பட்ட இன்பத்தைத் தரும்.. என்னென்ன மாற்றங்களை நிகழ்த்தும்.
"அப்பா எனக்கு சைக்கிள் வேணும்" எட்டாவது படிக்கும் பொழுது என் தந்தையிடம் கேட்டேன்.
பத்தாவது படிக்கும் பொழுது டியூசன் செல்ல தேவைப்படும் பொழுது தான் சைக்கிள் வாங்கிக் கொடுத்தார். வாடகை சைக்கிளில் தான் ஓட்டக் கற்றுக்கொண்டேன்.
இரு சக்கர வாகனமும் மாதாந்திர தவணையில் தான் வாங்கினோம்.
அப்படி இருக்க இன்று எங்கள் வீட்டிற்கு கார் வரப்போகிறதா!
முதன் முதலாக எப்பொழுது நான் காரில் சென்றேன்.
ஐந்தாறு வயது இருக்குமென நினைக்கிறேன். பக்கத்து வீட்டுப் பெண்ணின் கல்யாண விஷேசத்தில் அவரை மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் பொழுது அவருக்குத் துணையாய் என் அம்மா செல்ல, என் அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டே நானும் காரில் அவர்களுடன் சென்றேன். அந்த காரின் வாசனை இன்னும் என் நினைவறையில் மெல்லியதாய் வீசிக் கொண்டுதான் இருக்கின்றது.
பின் வளர வளர உறவினர்கள் காரில் செல்ல அவ்வப்போது வாய்ப்பு கிடைக்கும் பொழுது சென்றதோடு சரி. அப்பொழுதெல்லாம் எனக்கு காரின் கதவை எப்படித் திறந்து மூட வேண்டும், சன்னல் கண்ணாடிகளை எப்படி ஏற்றி, இறக்க வேண்டும் என்றெல்லாம் தெரியாது. உடன் இருப்பவர்கள் உதவியில்தான் ஏறி இறங்குவேன்.
கல்லூரி படிக்கும் பொழுது டாக்ஸி சர்வீஸ் அதிகரிக்கத் தொடங்கின. தோழிகளுடன் வெளியில் செல்ல நேரும் பொழுது எப்பொழுதாவது கால் டாக்ஸியில் செல்வோம். அப்பொழுது காரில் செல்லும் பொழுது ஏதோ ஓர் இனம் புரியாத பரவசம் உள்ளுக்குள் சுரக்கும்.
காரில் பயணம் செய்வது மகிழ்ச்சி அளிப்பது இருக்கட்டும் கார் வைத்திருப்பவர்களைச் சமுதாயம் எப்படிப் பார்க்கின்றது?
"பக்கத்து வீட்டு பொண்ணக் கட்டிக் கொடுத்தாங்கல்ல அந்த மாப்பிள்ளை கார்லாம் வெச்சிருக்காங்க.. நல்ல வசதியான இடம் போல"
இப்படி கார் வைத்திருப்பவர்களைப் பலரும் பல இடங்களில் விமர்சிப்பதைக் கேட்க முடிகிறது.
பொதுவாகவே கார் வைத்திருந்தால் அவர்கள் பணக்காரர்கள் என்கிறது சமூகம்.
ஒரு லட்சம் ரூபாயிற்கு இரு சக்கர வாகனம் வாங்குபவர்களும் இருக்கிறார்கள். அதே ஒரு லட்சம் ரூபாயிற்குப் பழைய கார் வாங்குபவர்களும் இருக்கிறார்கள். இந்த தர்க்கரீதியான காரணம் எல்லாம் யாரும் ஆராயப் போவதில்லை. கார் வைத்திருப்பவர்களுக்குக் கூடுதல் மதிப்பு உண்டு அவ்வளவு தான்.
ஆனால் நாங்கள் இப்பொழுது கார் வாங்குவதற்குக் காரணம் எங்களுடைய இன்றைய சூழலுக்கு எங்களுக்கு கார் தேவை.
வேலைக்காக வார வாரம் வெளியூர் சென்று வரவேண்டிய சூழலில் நானும் என் கணவரும் இருக்கின்றோம். எங்களுடைய ஒரு வயது குழந்தையை அடிக்கடி பேருந்திலும் இரு சக்கர வாகனத்திலும் அழைத்துச் சென்று வருகிறோம்.
வயதான அத்தை மாமாவிற்கும் அடிக்கடி பேருந்தில் சென்று வருவது பெரும் உடல் சோர்வைத் தருகின்றது. இதற்காக அடிக்கடி டாக்ஸி பதிவு செய்து போய் வந்தாலும் செலவு ஆயிரக்கணக்கில் ஆகின்றது. இந்த சமயத்தில்தான் எங்களுக்குக் கிடைத்தது அதிர்ஷ்டம்.
"நம்ம கார் வாங்கப் போறோமா?"
"ஆமா உங்க சித்தப்பா சொன்ன கார் நல்லாத்தான் இருக்கு.. இரண்டு லட்ச ரூபாய்க்குப் பரவால்ல.. நமக்கு இந்த டைம்ல ரொம்ப உதவியா இருக்கும்"
"உடனே பணம் கேட்டாங்களே"
"நகைய வெச்சி கொடுத்தர்லாம்.. இப்போதைக்கு நமக்கு கார் ரொம்ப தேவை.. நகையைப் பொறுமையா திருப்பிக்கலாம்"
முடிவு எடுத்தோம் மூன்றாம் நாள் எங்கள் வீட்டு வாசலில் நின்றது எங்கள் கார்.
காரில் எங்கள் வீட்டிற்கு உறவினர்கள் வந்தாலே மகிழ்ச்சியாக இருக்கும். இன்று எங்கள் காரே எங்கள் வீட்டில் நிற்கப் போகின்றது. பெற்றோர்களுக்குப் பயங்கர சந்தோசம்.
என் கணவரின் நண்பர் ஓட்ட மாமியார் மாமனாரை வைத்து காரில் ஒரு சுற்று.. அம்மா அப்பாவை வைத்து ஒரு சுற்று. "மாப்பிள்ளை நீங்க ஓட்டி பாக்கணும்". காரில் வருவதை அங்கலாய்த்து விட்டு என் கணவரை ஓட்டப் பழகச் சொல்லிவிட்டு இறங்கினார் என் அம்மா.
அடுத்து என்ன மகிழுந்து ஓட்ட கற்றுக்கொள்ளும் படலம்.
முதல் ஒரு வாரம் அவர் நண்பருடன் சென்று கார் ஓட்ட பழகிக் கொண்டார். அடிப்படைகளைக் கற்றுக் கொண்டார். இனி அவர் பயிற்சி செய்வதில்தான் எல்லாம்.
"எழுந்திரி வா நம்ம கார் ஓட்ட போலாம்"
அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து தயாராகி என்னையும் எழுப்பினார் என் கணவர்.
நவம்பர் மாதம் அதிகாலை பொழுதில் முகம் கழுவிக் கொண்டு குளிரில் நடுங்கிக் கொண்டே நானும் காரில் ஏறி அமர்ந்தேன்.
முதலில் காரை ஆன் செய்யவே தடுமாறினார். பின் இரண்டு மூன்று முறை ஸ்பீட் ப்ரேக்கரை அழுத்திவிட்டு காரை மெல்ல முன்னேற்றினார்.
யாருமில்லா நேர் வழி சாலையில் ஓட்டிச் சென்றார்.
'இளங்காத்து வீசுதே…
இசை போல பேசுதே…
வளையாத மூங்கிலில்…
ராகம் வளைஞ்சு ஓடுதே…
மேகம் முழிச்சு கேக்குதே'
குளிர் காற்றோடு சேர்த்துப் பாடலையும் ரசித்து அனுபவித்தேன்.
என் கணவர் வண்டி ஓட்ட நான் முன் இருக்கையில் அமர்ந்துள்ளேன். இதென்ன முன் இருக்கையில் அமர்ந்து இருப்பது கூடுதல் பெருமிதம் தருகின்றது. வாழ்வில் சேர்ந்தே முன்னேறும் தருணங்களில் இதுவும் ஒன்றல்லவே!
உச்சி முதல் பாதம் வரை மகிழ்ச்சி பரவியது. சூரியனை எழுப்பிவிட்டுக் குளிர் காய்ந்தோம். ஒரு சாலையோர கடை ஒன்றில் நிறுத்தி கண்ணாடி டம்ளரில் தேநீர் பருகினோம். அதிகாலை அவ்வளவு அழகு.
மேலும் இரண்டு, மூன்று நாட்களுக்கு அவரோடு சென்று வந்தேன். நான்கு புறமும் சுற்றி வந்தாயிற்று.
வேலைக்குச் செல்லும் என்னால் நான்காம் நாள் எழுந்திருக்க முடியவில்லை. தூக்கம் சொக்கியது. அவர் அம்மாவை அழைத்துச் சென்றார்.
என்னைப் போன்றே அவர் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் சந்தோசம். இருவரும் ஆர்வத்துடன் அதிகாலையில் எழுந்து ஆளுக்கொரு நாளாகச் சென்றனர்.
"சைடு பாத்து போ வண்டி வருது"
"மெதுவா போங்க"
"இடிக்கல போகலாம்"
அவருக்குத் தேவையான உபதேசங்களை நாங்களே சொல்ல ஆரம்பித்தோம்.
பத்து பதினைந்து நாட்களில் அவர் நன்கு பழகிக் கொண்டார். ஒரு மாதத்தில் லைசென்ஸ் பெற்றார்.
முதலில் அதிகாலையில் ஓட்டிக் கொண்டிருந்தவர் பின் பகலில் எந்த நேரத்திலும் ஓட்டும் படி முன்னேறினார். கொஞ்ச நாட்களிலே இரவிலும் ஓட்டத் தெரிந்து கொண்டார். நேர் வழி சாலை வளைவுகள் கொண்ட சாலை போக்குவரத்து நெரிசலான சாலை என எல்லாவற்றிலும் ஓட்டும் படி கை தேர்ந்தவரானார்.
அடுத்து என்ன... காரை எடுத்துக் கொண்டு ஊர் ஊராகச் சுற்ற வேண்டியது தானே...
சுற்றினோமா?
அடுத்த படலத்தில் சந்திப்போம்.
- ரேவதி பாலாஜி.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...